1 கல்லில் 6 இல்ல 7 மாங்காய்
ஸோஹோ சோஷியல் என்று ஒரு வசதி இருக்கிறது. இது ஆப்பாகவும் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் ஃபேஸ்புக்கில், டிவிட்டரில், லின்க்ட் இன்னில், இன்ஸ்டாகிராமில், திரெட்டில், வாட்ஸப் பிஸினஸில் போஸ்ட் செய்யும் வசதியைத் தருகிறது. இது ஒரு சாதனை. ஆனால் சில க்-கன்னாக்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
முதலில் ஸோஹோ சோஷியலில் லாகின் செய்து கொண்டு, உங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் மற்றும் லின்க்ட் இன் ப்ரொஃபைலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தடவை இதைச் செய்தே ஆகவேண்டும். (வாட்ஸப் பிஸினஸ் நான் இன்னும் சோதிக்கவில்லை.)
நீங்கள் ஏதேனும் ஒன்றை அடிப்படையாக வைத்து இதைச் செய்யவேண்டும். அதாவது ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்து, மற்ற சோஷியல் மீடியாக்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அடிப்படையான விஷயம் இனி உங்கள் ப்ராண்ட் என அழைக்கப்படும். நான் ஹரன் பிரசன்னா என்ற ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்தால், என் பிராண்ட் ஹரன் பிரசன்னா.
இதில் உள்ள சிக்கல் என்ன? ஃபேஸ்புக் ப்ரொஃபைலைச் சேர்க்க முடியவில்லை. மாறாக அந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைலை அடிப்படையாக வைத்துத் தொடங்கப்பட்ட ஃபேஜ் மட்டும்தான் சேர்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, என் ப்ரொபைலுக்கு 15 ஆயிரம் ஃபாலோயர்ஸ். ஆனால் ஹரன் பிரசன்னா என்னும் பேஜ்ஜுக்கு 1000 பேர் கூடக் கிடையாது. என்னால் இந்த பேஜுக்குத்தான் ஸோஹோ சோஷியல் வழியாக போஸ்ட் போடமுடிகிறது. இது ஒரு சறுக்கல்.
இது தொடர்பாக ஸோஹோ கஸ்டமர் சர்வீஸில் பேசினேன். நீண்ட நேரம் விளக்கினேன். அத்தனையும் கேட்டுவிட்டு, இதை அப்படியே மடல் போடுங்கள் என்றார்கள். போர் அடித்ததால் மடல் போடவில்லை. இதை அடுத்து ஒரு காமெடி நடந்தது. ஸோஹோவில் இருந்து தினமும் ஒரு மிஸ்ட்கால் வரும். அவ்வளவுதான். அதாவது அவர்கள் என்னைத் தொடர்புகொண்டுவிட்டதாக ஒரு தோற்றம் வருவதற்காக இதைச் செய்வார்கள் போல. இப்படித்தான் ஃப்ளிப்கார்ட் அமேஸான் எல்லாம் செய்து நாசமாகப் போயின.
இது குறித்து எனக்குப் பெரிய கவலை இல்லை. ஏனென்றால், மேலே சொன்னவை அனைத்தும் இப்போதைக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எனக்கு அது போதும்.
இன்னும் உள்ள சில சிக்கல்கள் என்ன? அது எல்லாவற்றிலும் உள்ளது. நீங்கள் டிவிட்டரில் 240 டெக்ஸ்ட் மட்டும்தான் போடமுடியும் என்றால், இந்த ஸோஹோ சோஷியல் மூலமாகப் போடும்போதும் அவ்வளவுதான் போட முடியும். இதுவேதான் திரெட் மற்றும் இன்ஸ்டாகிராமிலும். இது உங்கள் பிரச்சினை. ஸோஹோவின் பிரச்சினை அல்ல.
இன்ஸ்டாகிராமில் கூடுதல் சிக்கல், புகைப்படம் இருந்தாகவேண்டும். அந்தப் புகைப்படமும் இன்ஸ்டாவின் விதிக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அதையும் எடிட் செய்யும் வசதியை ஸோஹோ சோஷியல் தந்திருக்கிறது என்பது கூடுதல் வசதி.
ஃபேஸ்புக்கிலேயே இரண்டு மூன்று பேஜ்களுக்குப் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? உதாரணமாக, நான் புதிய புத்தக அறிவிப்பை என் ஃபேஸ்புக் பேஜ் மற்றும் சுவாசம் ஃபேஸ்புக் பேஜ்ஜில் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? செய்யலாம். இங்கே நீங்கள் பணம் கட்டி சந்தா வாங்க வேண்டி இருக்கும். இலவசம் கிடையாது. நீங்கள் இரண்டு பிராண்டை அல்லது பல பிராண்டுகளைப் பணம் கட்டி வாங்கினால், இது அனைத்தும் சாத்தியம். கூடவே, ஆட் ஆன் ஆப்ஷனும் தந்திருக்கிறார். வேண்டியதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அது ப்ரைமரி அக்கவுண்ட்டில் மட்டுமே சாத்தியம். இதில் கூடுதல் வசதி, யூ டியூபிலும் போஸ்ட் செய்யலாம். ஆம், 1 கல்லில் 7வது மாங்காய்!
இந்த ப்ரைமரி அக்கவுண்ட்டில் கூடுதல் வசதி, அங்கே இருக்கும் டேஷ் போர்டிலேயே நீங்கள் உங்கள் போஸ்ட் தொடர்பான அத்தனை அறிக்கைகளையும் பார்க்கலாம்! எத்தனை போஸ்ட் கூடுதலாகப் போட்டிருக்கிறோம், எத்தனை பேர் லைக், எத்தனை கூடுதல் லைக், இத்யாதி…
ஒரு நிறுவனத்துக்கு இது பெரிய வசதி. ஒரே க்ளிக்கில் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும், வாட்ஸப் பிஸினஸிலும் போஸ்ட் போட்டுவிடலாம். கொஞ்சம் செலவுதான். ஆனாலும், நேர விரயம், ஒவ்வொன்றாக லாகின் ஆகி ஒவ்வொரு போஸ்ட்டாகப் போடும் எரிச்சல் எல்லாம் மிச்சமாகும்.
ஒரு புத்தக அறிவிப்பை நான் என்னவெல்லாம் செய்கிறேன்? முதலில் என் ப்ரொஃபைலில் ஒரு போஸ்ட்டாகப் போடுகிறேன். பின்னர் என் பேஜில். பின்னர் டிவிட்டரில். பின்னர் சுவாசம் ஃபேஸ்புக் பேஜில். பின் சுவாசம் டிவிட்டர் பேஜில். பின் என் இன்ஸ்டாகிராமில். பின்னர் சுவாசம் இன்ஸ்டாகிராமில். பின்னர் தேவைப்பட்டால் வாட்ஸப் பிஸினசில். இதைச் செய்து முடிக்கும்போது மூளை சோர்ந்துவிடும். இதற்குத் தீர்வுதான் ஸோஹோ சோஷியல்.
ஸோஹோ சோஷியல் உடனே செய்யவேண்டியது என்ன? உடனடியாக ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் போஸ்ட் செய்யும் வசதியைக் கொண்டு வருவது. இரண்டாவது ப்ராண்டு அல்லது பல ப்ராண்டுகளுக்குக் கொஞ்சம் செலவைக் குறைப்பது. இதைப் பிரபலப்படுத்துவது. இவற்றைச் செய்தால் பெரிய வரப்பிரசாதமான இந்த வசதி பெரிய பெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை.
பின்குறிப்பு: இதை நான் இருபத்து இரண்டரை ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன், இப்பதான் தெரியுமா ஃபேஸ்புக்காரர்களுக்கு என் வாழ்த்துகள்.