காந்தாரா தி லிஜென்ட் சாப்டர் 1 – முதல் பாதியைப் பார்த்துவிட்டு என்னவோ விளையாட்டாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காந்தாரா முதல் பாகத்திற்கு இது திருஷ்டிப் பொட்டு என்ற அளவில் கூட யோசித்தேன். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் மிரட்டி விட்டது.
இடைவேளைக்குப் பிறகான 15 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் புல்லரிப்பு. என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு எழுத்து, எத்தனை குலிகா!
கிளைமாக்ஸில் வர வேண்டியதை இப்போதே காட்டிவிட்டார்களே, இனி கிளைமாக்ஸில் என்ன செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, மிரள வைக்கும் ஒரு திருப்பம், அதைத் தொடர்ந்து அசர வைக்கும் ஓர் உச்சகட்டக் காட்சி.
உண்மையில் தொடக்கக் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை வேறொரு உலகத்தில் நம்மைச் சஞ்சரிக்க வைத்து விட்டார்கள். தேர் விரட்டல் காட்சிகள் பார்க்கும்போது கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் அதை எடுத்த விதம் அட்டகாசம்.
மிக மோசமான கன்னடப் படங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட பாகுபலியை நெருங்கும் ஒரு திரைப்படத்தை இரண்டு காந்தாராவிலும் நமக்கு கன்னடத் திரையுலகம் காட்டி இருக்கிறது. அதிலும் உள்ளடக்க ரீதியாகப் பார்த்தால் பாகுபலியைக் காட்டிலும் இந்தியத் தன்மை கொண்ட சிறப்பான திரைப்படம் காத்தாரா.
கடவுள் நம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு பேரனுபவமாக இருக்கும். இசையும் ஒவ்வொருவரின் நடிப்பும் கேமராவும் ஒவ்வொன்றும் உச்சம்.
தனிப்பட்டுச் சொல்ல வேண்டியது இந்த குல்சன் தேவையா பற்றி. சாதாரண ஒரு நடிகராகத் தோன்றி அவர் காட்டிய மிரட்டல் வாய்ப்பே இல்லை.
ரிஷப் செட்டி நடிப்புக்கு இரண்டாம் முறை தேசிய விருது தரலாம், தவறே இல்லை.
தியேட்டரில் சென்று பாருங்கள். கன்னடம் புரிந்தவர்களுக்கு இது மறக்க முடியாத படமாக அமையும். மற்றவர்களுக்கும் அப்படியே. கிராஃபிக்ஸ் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பக்தி சார்ந்த திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கே பாடம் எடுத்திருக்கிறார்கள்.