Timmana Mottegalu Review

திம்மன மொட்டகளு (K) – நவீன திரைப்பட உலகில், ஓ டி டி வந்த பிறகு, திரைப்பட வர்த்தகம் முற்றிலும் மாறிப்போன பிறகு, மொத்தமாக அழிந்து கொண்டிருக்கும் ஒரு வகை, அவார்ட் வகைத் திரைப்படங்கள். இந்த விருது வகைத் திரைப்படங்கள் எடுப்பதற்கு என்று பலர் இருந்தார்கள். இன்று அவர்கள் அத்தனை பேரும் கிட்டத்தட்ட அருகிக் கொண்டிருக்கிறார்கள். 

மெல்ல நகரும் படத்தை மலையாளத்தில் அவ்வப்போது பார்க்க முடிகிறது என்றாலும், தமிழில் சமீபத்தில் இதைப் போன்ற ஒரு திரைப்படம் எப்போது வந்தது என்பது எனக்கு நினைவுக்கு வரவில்லை. பாலு மகேந்திரா, ஜெயபாரதி போன்றவர்கள் எல்லாம் இந்த வகையில் எடுப்பார்கள். மணிகண்டனின் கடைசி‌ விவசாயி கொஞ்சம் இந்த வகை.

இப்படி ஒரு திரைப்படம் திம்மன மொட்டகளு. வனவாசி திம்மன் பணத் தேவைக்காக, கருநாகக் கூட்டையும் அதன் முட்டைகளையும் ஓர் ஆய்வாளருக்குக் காட்டிக் கொடுப்பதுதான் கதை. 

இயற்கையும் மனிதர்களும் இயற்கைச் சுழற்சியும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்றும், அதை நாம் கெடுக்கக் கூடாது என்றும் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். சாவடிக்கிறார்கள்.

முதலில் வரும் ஒரு பிராமணர் வனவாசிகளை இரக்கமின்றி வேலை வாங்குவது போல் காட்டினாலும், அவரை வைத்து ஏன் இயற்கை மற்றும் இயற்கைச் சுழற்சி முக்கியம் என்பதைச் சொல்ல வைத்திருக்கிறார்கள். அதற்காக அறிவியலுக்குப் புறம்பான படமாகவும் சொல்லிவிட முடியாது. 

வனவாசிகளின் நல்ல மனசை சொல்கிறேன் என்று என்னவோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கிறார்கள்.

ரொம்ப சுமார் வகையிலான திரைப்படம். படத்தில் பேசப்படும் கன்னடத்துக்காகப் பார்க்கலாம். வனவாசிகளின் வாழ்க்கையில் கடவுளும் விலங்குத் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கையும் பயமும் எந்த அளவுக்கு உறைந்திருக்கின்றன என்பதை எந்தவித திருகுத்தனமும் இல்லாமல் காட்டியதற்காகப் பாராட்டி வைக்கலாம்.

Share

Comments Closed