லோகா சாப்டர் 1 சந்திரா (M) – மலையாளிகளுக்கு என்று எப்படித்தான் கதை கிடைக்கிறதோ, அசத்தி விட்டார்கள் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள், இது படு குப்பை.
இடைவேளை வரை அத்தனை மோசமில்லை. குறிப்பாக நஸ்லேனும் அவர் நண்பர்களும் அடிக்கும் லூட்டியும், கல்யாணி யாரென்று தெரிந்த பிறகு நஸ்லேன் பேசும் வசனங்களும் தியேட்டரையே குலுங்க வைக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து, தொடர்ந்து வாய் விட்டுச் சிரித்தேன். ஆனால் டொவினோ கால் வைத்ததும் படம் குப்பை ஆகிவிட்டது.
ஒட்டுமொத்தமாகவே மிகவும் சுமார்தான். மின்னல் முரளியில் இருந்த ஆத்மார்த்தமும் மக்கள் நன்மைக்காகப் போராடுவதும் இதில் வலுவாக வெளிப்படவில்லை.
இந்தப் படத்தில் காண்பிக்கும் பல குறியீடுகளை வைத்துக்கொண்டு அப்படி இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், யக்ஷி கதைகளின் தொன்மம் அது இது என்றெல்லாம் கதை சொல்வார்கள். அது எல்லாமே உண்மையாக இருந்தாலும் ஒரு படமாக இது குப்பை என்பதில் மாற்றம் இல்லை. அதுவும் தமிழர்கள் தியேட்டரில் பார்த்தால் வரும்போது சொட்டு ரத்தம் இல்லாமல்தான் வெளியே வருவார்கள். அதிலும் கடைசி ஒரு மணி நேரம் எழுந்து ஓடி விடலாமா என்றாகிவிட்டது.
வில்லனுக்கு எதிராக நாயகி பிரமாண்டமாக நிற்க வேண்டும் அல்லவா? அது எதுவும் இதில் வரவே இல்லை.
அழகான கல்யாணியை ஏன் இப்படிக் காண்பித்து வெறுப்பை உண்டாக்கினார்கள் என்று தெரியவில்லை. பார்த்தால் நஸ்லேனுக்காகப் பார்க்கவும். மற்ற எதற்காகவும் பார்க்கவே தேவையில்லை.
இதில் இது சாப்டர் 1 மட்டும்தானாம்! இன்னும் எத்தனை சாப்டர்களோ! செத்தோம்.
வில்லனாக வருபவர் கௌடா என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் பேசுகிறார். அவரது அம்மாவும் பார்க்க பிராமணப் பெண் போல் இருக்கிறார். ஆனால் பிராமணர் என்று எங்கேயும் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை. ஏன் இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை.