Annamalai on inter caste love marriage

கம்யூனிஸ்டுகள் இப்படி அறிவிப்பு செய்யவும் பலர் கம்யூனிஸ்ட்களை மாமா என்றும் புரோக்கர் என்றும் திட்டித் தீர்ப்பதைப் பார்த்தேன். பலவிதமான கிண்டலான கமெண்ட்டுகள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது மிக முக்கியமான விஷயம். அதை அவர்கள் செய்கிறார்கள் செய்யவில்லை என்பதல்ல பிரச்சினை. கோட்பாட்டு ரீதியாக எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பது முக்கியமானது.

கம்யூனிஸ்டுகளின் அறிவிப்பை பார்த்ததும் என் மனதுக்குள் தோன்றியது, பாஜக இதைச் செய்ய வேண்டும் என்றுதான். கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு செய்த பிறகு செய்தாலும் கூட பரவாயில்லை. கட்டாயம் இதை ஓர் அறிவிப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

நேற்றே இதைப்பற்றி எழுத நினைத்தேன். ஆனால் பல பாஜக ஆதரவாளர்கள் கம்யூனிஸ்டுகளைக் கட்டம் கட்டித் திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் எழுதினால் நான் அவர்களைச் சொல்வதாக நண்பர்கள் தவறாக நினைத்து விடக் கூடும் என்பதால் எழுதவில்லை.

இன்று பார்த்தால் இந்த அறிவிப்பு. இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்து இப்பதிவை எழுதுகிறேன். ஒருவேளை இந்தப் படத்தில் உள்ளது உண்மையல்ல என் நிலைபாடு இதுவே.

கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது. பாஜக இதை அறிவிப்பதோடு முன்னால் நின்று செய்ய வேண்டும். சட்ட ரீதியான உதவிகளையும் தர வேண்டும். உண்மையில் எந்த ஒரு கட்சியும் இதைச் சொல்வதைவிட ஹிந்துத்துவக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக இதைச் செய்வதும் அதன் ஆதரவாளர்கள் இதை வரவேற்பதும் முக்கியமான ஒன்று.

அப்டேட்: அண்ணாமலை சரியாக என்ன சொன்னாரோ அதை இணைத்து இருக்கிறேன். நான் முதலிலேயே சொன்னது போல, அண்ணாமலை சொல்லவில்லை என்றாலும் என் நிலைப்பாடு இதுதான்.

சிலர் அரசியல் கட்சிக்கு இதுவா வேலை, வேறு வேலை இருக்கிறது என்கிறார்கள். இப்படிச் சொல்வதே தவறு. அரசியல் கட்சி ஒரு வேலையை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு வர வேண்டும் என்றால் அது அரசியல் கட்சியாக இருக்கவே லாயக்கில்லை. ஓர் அரசியல் கட்சி எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் சரியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் அது அரசியலுக்குப் பொருந்தாது என்று பொருள்.

கல்யாணம் செய்த பிறகு பிரச்சினை என்றால் வாருங்கள் என்று அண்ணாமலை சொன்னதாகச் சொல்கிறார்கள். இதைச் சொல்ல அண்ணாமலை எதற்கு? வீட்டை எதிர்த்து ஓடிவருபவர்களுக்கு முடிந்தால் உதவ வேண்டும். பெற்றோர்களை அழைத்துச் சொல்வது என்ன நியாயம்?

ஆனால் அண்ணாமலை சொன்னது அது அல்ல.

அண்ணாமலை தெளிவாகவே சொல்கிறார். நாம் அதை நாம் விருப்பம் போல் புரிந்து கொள்கிறோம். அண்ணாமலை சொன்னது கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொன்னதோ அது சரி என்பதையும் அதை பாராட்டும் விதமாகவும்தான். மேலும் அதை பாஜக பலகாலமாக செய்கிறது என்பதையும்தான். அடுத்து, கூடுதலாகப் பெற்றோர்களிடமும் இன்ஸ்பெக்டரிடமும் சொல்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் அதையே முழு முடிவாக அவர் சொல்லவில்லை.

அண்ணாமலை பேசியதின் வீடியோ. Thanks: Thanthi tv

Share

Comments Closed