Jaanaki V Vs Kerala State (M) – கிறித்துவரான சுரேஷ் கோபியின் கதாபாத்திரம், ‘கன்னியாஸ்திரிகளுக்கத் தொல்லை கொடுக்கும் பாதிரியாருக்கு எதிரான வழக்கை நடத்தாமல் விடமாட்டேன், நேர்மையே முக்கியம்’ என்பதாக அறிமுகம் ஆகிறது. இதுதான் கதை என்று நினைத்தால் கதை வேறு ஒரு பக்கம் நகர்கிறது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனக்கு நீதி வேண்டும் என்று போராடுகிறாள். அவளது தந்தை இறந்ததற்கு ஒரு வகையில் ஹீரோவின் பிரபலம் காரணமாக இருக்க, பிரச்சினை பெரிதாகிறது. அந்தப் பெண்ணுக்கு எதிராக ஹீரோ சகட்டுமேனிக்கு வாதாட, அந்தப் பெண் கற்பழிக்கப்படவே இல்லை என்று நீதி வழங்கப்படுகிறது.
முன்பு ‘மன்னிக்க வேண்டுகிறேன், என்று ஒரு திரைப்படம் வந்தது. டப்பிங் திரைப்படம். டாக்டர் ராஜசேகரின் திரைப்படம். மேக்கிங் வகையில் மொக்கையாக இருந்தாலும், கதையாக எனக்கு அந்தத் திரைப்படம் அந்த வயதில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளைக் கொலை செய்வதற்காகத் தான் இறந்ததாக உலகை நம்ப வைத்து விடும் ஹீரோ, அவளை கொல்லச் செல்லும் போது அவள் நிரபராதி என்பதைப் புரிந்து கொள்கிறான். தான் இறந்தது போல ஊரை நம்ப வைப்பதற்காக அவன் ஆடிய நாடகம் அவனுக்கே எதிராகிறது. தன்னை நல்லவன் என்று நம்ப வைக்க மீண்டும் போராட ஆரம்பிப்பான். குன்ஸாக இதுதான் திரைக்கதை.
அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் போல இந்தத் திரைப்படம் நகரும் என்று நினைத்தேன். அதே மாதிரிதான் ஆனது.
ஆனால் பெரிய மைனஸ் பாயிண்ட் என்னவென்றால், சுரேஷ்கோபி தான் முன்பு வாதாடியதற்கு எதிராக வாதாடுவதற்குப் பதிலாக தனது தங்கை வாதாடுவார் என்று சொல்லிவிடுகிறார். படத்தின் தலைப்பான ஜானகி வெர்ஸஸ் கேரளா ஸ்டேட் என்பதற்குள் அப்போதுதான் வருகிறார்கள்.
எத்தனையோ மலையாளிகள் திரைப்படத்தில் இருக்க, படத்தின் கருவுக்கான பழியை ஒரு ஹிந்திக்காரன் மேல் போட்டு விடுகிறார்கள். அவன் இந்திக்காரன்தானா என்பதிலும் ஒரு சந்தேகம் இருக்க, எத்தனையோ தேடிப் பார்த்தேன். யாரும் எங்கேயும் அதைப்பற்றி எழுதவே இல்லை. அவன் திடீரென்று பெண் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு நம்ம ஊர் குலசேகரப்பட்டினம் திருவிழா போல கேரளக் கிராமம் ஒன்றில் ஆடுகிறான். அங்கே சென்று ஹீரோ பந்தாடி அவனைத் தூக்கிக்கொண்டு வர, படம் முடிவடைந்து விடும் என்று நினைத்தால், படத்தின் ஆதாரக் கேள்வி அப்போதுதான் ஆரம்பமாகிறது.
பலாத்காரம் மூலம் உருவான குழந்தையை தான் ஏன் சுமக்க வேண்டும் என்பதுதான் கதாநாயகியின் கேள்வி. அதற்காகத்தான் அந்தப் பெண் அரசை எதிர்த்துப் போராடுகிறார்.
ஜானகி எதிர் கேரள மாநிலம் என இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்கள் உண்டாகி இருக்கின்றன. ஜானகி என்பது சீதையைக் குறிக்கும் சொல் என்பதால் இந்தப் படம் ஹிந்து மதத்தினைப் புண்படுத்தக் கூடும் என்று சென்ஸாரில் பெயரை மாற்றச் சொல்லி விடுகிறார்கள். அதற்கு எதிராக தயாரிப்பாளர்கள் கேரள ஹை கோர்ட் செல்ல, நீதிபதி படத்தைப் பார்த்துவிட்டு, அப்படி ஒன்றும் இல்லை ஜானகி என்பது சாதாரணப் பெயர்தான் என்று தீர்ப்பு சொல்லி, இருந்தாலும் ஜானகி வி அதாவது அவரது தந்தை பெயர் வித்யாதரன் எதிர் கேரள மாநிலம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
இப்படி மூன்று கதைகளை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ரொம்ப சுமார். மிக மோசமான நடிப்பு, சுரேஷ் கோபி உட்பட. ஹீரோயினாக வரும் பெண் மட்டுமே மிக நன்றாக நடிக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் சுமாராகவாவது தோன்றலாம். மற்றபடி இந்தப் படத்தில் பார்க்க ஒன்றுமே இல்லை.
பார்க்க ஒன்றுமே இல்லாத படத்திற்கு எத்தனை பெரிய விமர்சனம் என்று நீங்கள் நினைக்கலாம். என் வாழ்க்கை உங்களுக்காகத் தியாகம் செய்யப் பட்டது என்பதை நான் ஏன் மீண்டும் சொல்ல வேண்டும்? இனி தியாகம்.
மலையாளப் படங்களுக்கே உரிய கிறித்துவத்தன்மை போலப் படம் முழுக்க கிறிஸ்தவ மயம். ஹீரோ உட்பட பல கதாபாத்திரங்கள் கிறித்துவர்கள். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் வருகிறது. அட்டகாசமாக அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு மரணத்திற்குத் தான் நேரடியாகக் காரணம் இல்லை என்ற போதும், தானும் அதற்கு ஒரு காரணம் என்று நினைக்கும் அந்தக் கதாபாத்திரம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பிரச்சினைக்குரிய ஹிந்திக்காரன் மதம் இந்து மதமாக இருக்கிறது.