கல்கி 2898 AD – மகத்தான படைப்பாக வர வாய்ப்பிருந்தும் அதை இழந்துவிட்ட ஒரு படம். கடைசி 1 மணி நேரம் படம் பிரம்மாண்டம். ஆனால் முதல் இரண்டே கால் மணி நேரம் பேசியே கொன்றுவிட்டார்கள். அதிலும் பிரபாஸ் அறிமுகக் காட்சியை இத்தனை நீளமாக எந்த அறிவார்ந்த இயக்குநரும் யோசித்திருக்க மாட்டார்.
கிட்டத்தட்ட இன்னொரு குருக்ஷேத்திரப் போரை யோசித்ததெல்லாம் நல்ல கற்பனைதான். அமிதாப் கலக்கல். பிரபாஸ் சொதப்பல். மற்ற யாருக்கும் பெரிய வேடமில்லை. முக்கிய ஹீரோவான கிராபிக்ஸ் அட்டகாசம். பல ஆங்கிலத் திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும் இந்தியா இதைச் செய்யும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
முதல் பாகத்தை முடித்த இடம் புல்லரிப்பு. இரண்டாம் பாகத்தில் கர்ணன்தான் கதாநாயகன், நல்லவன் என்று எதையாவது சொல்லி நம்மைச் சாகடிக்காமல் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லுங்கள். மார்வெல் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.