Rebel (T) – தமிழ்ப் படத்துக்கு ஆங்கிலப் பெயர் வைப்பது ஃபேஷனாகிவிட்டது. ஆங்கிலப் பெயர் வைத்தால் 10% கூடுதல் வரி என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசுக்கு நல்ல லாபமும், தமிழ்க்குடி காத்தான் என்கிற பாராட்டும் கிடைக்கும்.
எப்படி நான் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறேனோ அப்படித்தான் படமும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. கல்லூரிக்குள் நடக்கும் அரசியலை, அதுவும் கலைக்கல்லூரிக்குள் நடக்கும் அரசியல் என்னும் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிக் காட்டுகிறார்கள். ஒட்டவே இல்லை. மூணாற்றில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களைக் காண்பிக்க நினைக்கும் படத்தில் நம் மனதில் நிற்பது கேரள கம்யூனிஸ காங்கிரஸ் அரசியல் சண்டைகள்தான்!
கம்யூனிஸ்ட்டுகளை முதலில் நல்லவர்களாகக் காண்பித்து, பின்பு அவர்களையும், பாவாடையைக் கழற்றிவிடும் கெட்டவர்களாக்கி, அதற்கொரு முட்டுக் கொடுக்கும் விதமாக, ‘நீ பாத்து வளந்த கம்யூனிஸம் வேற இந்த கம்யூனிஸம் வேற’ என்று என்னவோ சொல்லி… அடேய்களா… ரெண்டு கம்யூனிஸத்துக்கும் என்ன வித்தியாசம்னு எனக்குத் தெரியும். அது கறுப்பா பயங்கரமா இது. இது பயங்கரமா கறுப்பா இருக்கும். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் கம்யூனிஸம் என்ன செய்யும் என்பது வரலாற்றில் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது இயக்குநருக்குத் தெரியாது போல.
காங்கிரஸ் சார்பாக வரும் இளைஞர் பட்டையைக் கிளப்புகிறார். நன்றாக நடிக்கும் அத்தனை பேரும் மலையாளிகள்! இந்த மலையாளிகள் நடிக்கும் காட்சிகள் அநியாய மண்மணத்தோடு பளபளப்பாக இருக்கின்றன. இயக்குநருக்கு கேரளத் திரையுலகில் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.
படத்தில் வசனம் எழுதியவர் என்னவோ எழுத, காட்சியாக வேறு என்னவோ வருகிறது. வேட்டி கட்டியவனைப் பார்த்ததும் தமிழ் உணர்வு பொங்கி வருது என்று ஒரு பக்கம் வசனகர்த்தா பிலாக்கணம் வைக்க, அங்கே தமிழ்த் தடியர்கள் பேண்ட் சட்டையில் வர, மலையாளக் ‘குடி வெறியர்’களோ அழகாக, பாந்தமாக வேட்டியில் இருக்கிறார்கள். இன்னொரு காட்சியில் வசனகர்த்தா உணர்ச்சிவசப்பட்டு திமுகவின் கொடியை, கறுப்பும் சிவப்புமே நம் நிறம் என்று புல்லரிப்புடன் பேச, கொடியில் கறுப்பு வெள்ளை சிவப்பு என்று அதிமுக கொடி போலக் காண்பிக்கிறார்கள். அதிமுகவுக்கும் புரட்சிக்கும் என்னய்யா சம்பந்தம்?
பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில் வரும் அதே எரிச்சல் இதிலும். ஆம், கேரள மாணவர்களுள் ஒருவன் கூட நல்லவனில்லை. தமிழ் மாணவர்களுள் ஒருத்தன் கூட கெட்டவனில்லை. இங்கேயே ஒரு படம் பிரசாரப் படமாக மாறித் தோற்றுப் போய்விடுகிறது.
படம் முழுக்க சிவப்பு, புரட்சி, ஈவெரா, சேகுவேரா என்று குறியீடுகள். 80களின் ரஜினி மற்றும் இளையராஜாவைச் சரியாகப் பின்னணியில் வைத்தவர்கள், என்னதான் கம்யூனிஸம் மூணாற்றில் வலுவாக இருந்தது என்றாலும், திமுக அதிமுக தலைவர்களை ஒரே ஓர் இடத்திலாவது வைத்திருக்கலாம்.
80கள் என்பதால் இளையாராஜாவின் தமிழ்ப் பாடல்கள் பின்னணியில். அத்தனையும் மனதை வருடுகின்றன. அதுவும் ஒரு காட்சியில், ‘பூங்காற்றினோடும்’ என்னும் மலையாளப் பாடல் மனதை வருட, அப்படியே படத்தை நிறுத்திவிட்டுப் பாட்டைப் போட்டுக் கேட்டால் என்று மனம் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. இன்று காலை அந்தப் பாட்டை பலமுறை கேட்டபின்பே இதனை எழுதுகிறேன்.
மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், செயற்கைத்தனமான புரட்சி என்று எரிச்சலை ஏற்படுத்தும், மனதோடு ஒட்டாத இன்னுமொரு தமிழ்ப்படம். மலையாளிகளும் கேமராவும் அருமை.