ஊடகங்களின் இருட்டடிப்பு இது. முதல் பக்கத்தில் செய்தியை வெளியிடக் கூட இவர்களால் முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதில் உள்ள மோகம். பணமே அரசியலை நிர்ணயிக்கிறது.
கேஜ்ரிவால் செய்தியை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு, அண்ணாமலை சொன்னதை 2ம் பக்கத்தில் போட்டிருக்கிறது தமிழ்த்திசை. அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்னும் முக்கியச் செய்தியை தமிழ்த்திசை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
மற்ற செய்தித்தாள்களின் உட்பக்கங்களை நான் பார்க்கவில்லை.
தந்தியும் தினகரனும் ஒரே குரலில் முதல் பக்கத்தில் பேசுகின்றன.
தினமலர் ஒன்றே தைரியமாக, முதல் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறது.
தினமணியின் முதல் பக்கத்தை இணையத்தில் இருந்து ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்தேன். கொடுமை. இதற்கு எதற்கு தினமணி?
பத்திரிகைகள் எல்லாம் எப்படி வெட்கமே இல்லாமல் நேர்மை, உண்மை என்றெல்லாம் பேசுகின்றன? அசிங்கமாகவே இருக்காதா? செய்தியைச் சொல்லிவிட்டு, அதை எதிர்த்து பல கட்டுரைகளைக் கூட வெளியிடட்டும். அது அவர்களின் கொள்கைச் சாய்வு. அதில் தவறில்லை. ஆனால் செய்தியையே சொல்லாமல் சாய்ஸில் விடுவதெல்லாம் எவ்வளவு அசிங்கம்!
***
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார். டிவிட்டரிலும் இதுவே.
வானதி ஶ்ரீனிவாசன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது செயல்பாடுகளைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளன. டிவிட்டரில் விஷு ஆஷாம்ஷகள் என்று மலையாளத்திலும் வாழ்த்து வெளியிட்டிருக்கிறார் வானதி.
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இல்லை.
சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் இன்று என்ற செய்திகளையும், அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற முக்கியமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஹெச்.ராஜா பற்றிச் சொல்லவேண்டும். எஸ்.வி.சேகருக்கான விருதில் ராஜா கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட அளவில் பெரிய வருத்தம். ஆனால், ஹெச்.ராஜா ஒருவரே அண்ணாமலையின் சொத்துப்பட்டியல் பற்றிய குறிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தவும் செய்திருக்கிறார். ஹெச்.ராஜா மதிப்பிற்குரியவர்.
இந்நிலையில், மற்ற பத்திரிகைகள் பாஜகவின் செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது என்று சொல்ல பாஜகவினருக்குத் தகுதியே இல்லை என்பதுதான் உண்மை.