FIR – திசை தவறிய பறவை

Spoilers ahead.

FIR – மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கும் தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எப்படி வரையறுப்பது என்றே தெரியவில்லை. எல்லாவனுக்கும் நல்லவனாக இருக்கணும், அதே சமயம் முற்போக்குப் பட்டமும் வேணும் என்றால் எப்படி? ஒன்று, கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கவேண்டும், இல்லையென்றால் இந்தப் பக்கம் இருக்கவேண்டும், இரண்டும் இல்லாமல் அங்கேயும் இங்கேயும் தாண்டிக்கொண்டு, வணக்கம் போடும் வரை யோசிக்கவிட்டு மூளையைக் களைப்படையச் செய்துவிட்டார் இயக்குநர். இது இஸ்லாமியர்களுக்கான ஆதரவு என்ற போர்வையில் இந்திய அரசை எதிர்க்கும் படம் என்று பத்தாயிரம் வார்த்தைகளும், இது இந்திய ஆதரவுப் படம் என்று இன்னொரு சாரார் பத்தாயிரம் வார்த்தைகளும் எழுதலாம். நான் நினைப்பது, அப்பாவி இஸ்லாமியன் ஒருவன், தன் பெயர் இஸ்லாமியப் பெயர் என்னும் ஒரே காரணத்துக்காக அவன் இந்தியாவில் படும் பாட்டைச் சொல்லி ஆனால் அந்த அப்பாவி இந்திய முஸ்லிம் எப்பேற்பட்ட தியாகி என்பதை விளக்க முயன்றிருக்கிறார் என்பதுவே. ஒரு இந்திய முஸ்லிம் தன்னை பெருமை மிகு இந்திய முஸ்லிம் என்று அழைப்பதால் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? இங்கேதான் கதை சறுக்குக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்கள் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள் என்பது பித்தலாட்டம். இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ஒரு பெரும்பான்மை ஹிந்துவுக்கு என்ன என்ன உரிமை உண்டோ அத்தனையும் ஒவ்வொரு சிறுபான்மையினருக்கும் உண்டு, சொல்லப் போனால் கூடுதலாகவே உண்டு. மனசாட்சி உள்ளவர்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன்னை தேசிய இஸ்லாமியராக உணரும் ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இந்தப் படத்தில், அப்பாவி முஸ்லிம் ஒருவன், சூழ்நிலையால் ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தப்பட்டால் அவன் என்ன என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கவேண்டி இருக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைசியில் தேசியப் புலனாய்வு மையத்தோடு முடிச்சு போட்டு அவனைத் தியாகியாக்கி வைக்கிறார்கள்.

சூழ்நிலையால் பயங்கரவாதியாகும் இர்ஃபான், அதுவும் இந்தியாவில் ஊடுருவி இருக்கும் ஐ எஸ் தலைவன் என்று சந்தேகிக்கப்படும் இர்ஃபான், தன் ஹிந்து நண்பர்களோடு வரும்போது முக்கியமான கேள்விகளைக் கேட்கிறான். என் பேர் இர்ஃபான்றதாலதான என்னை பயங்கரவாதின்னு நினைக்கிறாங்க, இதுவே ஒரு ஹிந்துப் பெயரா இருந்தா விட்டிருப்பாங்கள்ல என்று. உடனே ஹிந்து நண்பர்கள் நடந்ததற்காக இர்ஃபானிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். கூடுதலாக ஒரே ஒரு கேள்வியை இந்திய இஸ்லாமியனான இர்ஃபானோ, உடன் வந்த ஹிந்து நண்பர்களோ கேட்டிருக்கலாம். ஏன் இப்படி ஒரு நிலைமை? எதனால் வந்தது? இப்படம் சொல்ல நினைப்பது, அப்படி ஒரு முஸ்லிமை முஸ்லிம் பெயர் இருப்பதாலேயே சந்தேகம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று. ஆனால் சொல்லி இருப்பதோ, அப்படி ஒரு சூழ்நிலை வர முஸ்லிம்களே காரணம் என்று. நான் சொல்லவில்லை, திரைக்கதையில் அப்படி அர்த்தம் வருகிறது.

ஜனநாதன் என்றொரு தீவிர கம்யூனிஸ இயக்குநர் இருந்தார். அவரது திரைப்படங்கள் எல்லாம் புரட்சி என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் திரையில் பார்த்தால், இந்தியத்துவத்தை எங்கேயும் கை விட்டிருக்கமாட்டார். இந்தப் படத்துக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. படம் முடியும்போது தியாகி முஸ்லிமுக்காக வருத்தப்படவேண்டிய நாம், இந்திய அரசின் போராட்டத்துக்காக மகிழ்ச்சி அடைந்துவிடுகிறோம்.

இர்ஃபான் ஒரு பெருமைமிகு இந்திய முஸ்லிம் என்றால், இர்ஃபான் தீவிரவாதி என்று நம்பி, அவனைக் கொன்று இந்தியாவைக் காப்பாற்ற நினைக்கும் அந்த இஸ்லாமியப் பெண் யார்? இர்ஃபான் ஒரு காட்சியில் நானும் முஸ்லிம் நீயும் முஸ்லிம் என்று சொல்ல, அடுத்த நொடி இர்ஃபானின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் இஸ்லாமியப் பெண் அதிகாரி. அவரும் பெருமை மிகு இந்திய முஸ்லிமே.

ஒரு கட்டத்தில், இர்ஃபான் தன் நிலைக்குக் காரணமான இந்தியாவுக்கு எதிராக மாறுகிறான். இந்தியாவை ஒழிக்க நினைக்கும் ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவாக அவர்கள் கேட்கும் கெமிகல் கேஸ் வெபன் (ரசாயன வாயுவை வைத்துக் கொல்வது) தயாரிக்க உதவுகிறான். கடைசி ஐந்து நிமிடத்தில் இர்ஃபானின் குடும்பமே எப்பேற்பட்ட தியாகிகள் என்று சொல்லப்படுகிறது. இர்ஃபான் உதவும் ஐ எஸ் அமைப்பில் அத்தனை பேரும் முஸ்லிம்களே. இந்தியாவை வெறுக்கும் முஸ்லிம்கள். தலைவன் முஸ்லிம் ஒரு முன்னாள் ஹிந்து. மதம் மாறி, ஐ எஸ்ஸில் சேர்ந்து, என்னவெல்லாமோ சொல்கிறார்கள். சொல்லிவிட்டு, கார்த்திக் என்ற பெயர் இருப்பதால் அவனை போலிஸ் சந்தேகிக்கவில்லை, ஆனால் இர்ஃபான் என்ற பெயர் இருப்பதால் ஒரு அப்பாவி முஸ்லிமை சந்தேகித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

FIR Tamil movie poster.jpg

படம் பார்க்கும் அத்தனை இந்திய வெறுப்பாளர்களை அல்லது இஸ்லாமியர்களுக்கு இப்படித்தான் நடக்கிறது என்று நம்பும் நடுநிலையாளர்களை இந்தக் கதை பதைபதைக்கச் செய்திருக்கவேண்டும் இல்லையா? ஆனால் செய்திருக்காது. ஏன்? படத்தின் திரைக்கதையே காரணம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

* ஐ எஸ் அமைப்பு என்பது எத்தனை பெரிய கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று உலகுக்கே தெரியும். இந்திய முஸ்லிம்கள் தங்களை எந்த இடத்திலும் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி யோசித்துக் கூடப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு அமைப்பின் தலைவனாக இர்ஃபான் இருப்பானோ என்ற சந்தேகம் வந்தால், இந்தியா அல்ல, அது எந்த நாடாக இருந்தாலும் ஊராக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும். கதையை யோசிக்கும்போது ஐ எஸ் அமைப்பின் ஒரு தலைவன் இந்தியாவில் இருந்தால் என்று யோசித்துவிட்டார்கள். இந்த ஒரு வரியில் மயங்கிவிட்டார்கள்.

* இந்தியப் புலனாய்வு மையம் என்பது பக்கத்து வீட்டில் மாங்காய் அடித்துத் திருடித் திங்கும் அமைப்பு அல்ல. பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்வது, எதிர்த்தாக்குதல் நடத்துவது என்று இந்தியாவின் தலையாய பிரச்சினையை தினம் தினம் எதிர்கொள்பவர்கள். அந்த அமைப்பு சட்டென திருவல்லிக்கேணி இர்ஃபானை எப்படி ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதி என்று நம்பும்? இதற்குக் கடைசியில் வேறு ஒரு கதை சொல்கிறார்கள். ஆனால் அந்த நொடி வரை இதே நினைப்பில் கதை பார்க்கும் பார்வையாளர் நம்பகத்தன்மை இல்லாமல்தானே பார்ப்பான்?

* ஒரு ஹீரோ கெட்டவனாக இருக்கமுடியாது என்று நமக்குத் தெரியாதா? கடைசியில் ஒரு நொடியில் என் ஐ ஏ-வின் திட்டங்கள் தெரியும்போது நமக்கு அதிர்ச்சி வருவதற்குப் பதிலாக, இதுக்காடா இவ்ளோ சீன் என்ற கேள்விதான் வருகிறது.

* கதையின் மையம் என்ன? பெயரில் என்ன இருக்கிறது என்பதுதானே? ஆனால், ஹீரோ இர்ஃபான் தன் பெயர் இர்ஃபான், தான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே தேசியப் புலனாய்வு மையம் தன்னைத் தேர்ந்தெடுக்கிறது என்று தெரிந்தே ஒப்புக்கொள்கிறான். அப்படியானால் இது கதையின் அடிப்படைக்கே எதிரானதல்லவா? தேசியப் புலனாய்வு மையத்திடம் அவன் என்ன கேட்டிருக்கவேண்டும்? என் பெயர் கார்த்திக் என்றால் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா என்றுதானே? அங்கே கேட்காமல் ஊரெல்லாம் கேட்டுத் திரிகிறான் இர்ஃபான்.

* கடைசியில் இர்ஃபான் குடும்பமே இந்தியத் தியாகிகள் என்று சொல்லி, அதன் பின்னால் இருக்கும் திட்டத்தை என் ஐ ஏ இயக்குநர் விவரிக்கும்போது அதுவரை கதையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையும் அடியோடு போய்விடுகிறது. என் ஐ ஏ இயக்குநராக வரும் கௌதம் மேனன் கொஞ்சம் தமிழில் அவ்வப்போது பேசுகிறார். மற்றபடி இவர் எப்போதும் போல் ஹாலிவுட் நடிகராகவே வலம் வருகிறார்.

* மோடி போன்ற கெட்டப்பில் வரும் பிரதமர் கடைசியில் சொல்கிறார், பயங்கரவாதியின் பெயர் இர்ஃபானா அப்துல்லா, சரி, பெயர் எதுவாக இருந்தால் என்ன, பயங்கரவாதி பயங்கரவாதிதானே என்று சொல்லிவிட்டுப் போகிறார். அதாவது இர்ஃபான் குடும்பம் செய்த தியாகத்தை என் ஐ ஏ இயக்குநர் பிரதமரிடம் இருந்து மறைத்துவிடுகிறார். இதனால் இர்ஃபான் இந்திய ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவனாகவே இறந்தும் போகிறாராம்.

* இப்படி எத்தனையோ முஸ்லிம்களின் தியாகம் வெளியே வராமல் போய்விட்டது என்று சொல்கிறார்கள். விட்டுருவீங்களாய்யா நீங்க என்றுதான் கேட்கவேண்டும். அதைவிட இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள், இப்படி இர்ஃபான் பயங்கரவாதி என்று சந்தேகம் வரக் காரணம், அதை உடனே நம்பிய மீடியா என்று. தமிழ் ஊடகங்களா? சுத்தம்!

* சிரியாவில் போய் ஐ எஸ்ஸில் சேர்வது வீட்டுக் கொல்லையில் இருக்கும் புளியம் பழம் பறிப்பதைப் போல சுலபமானது போல. அதுவும் இந்திய ஐ எஸ் காரன் முன்னாள் ஹிந்து என்பதெல்லாம் அதீத நகைச்சுவை.

இப்படி நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும், இலக்கு என்ன என்பதைத் தீர்மானமாக நிர்ணயிக்காததாலும், அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலைக் கைதியாகிறான் என்பதைக் காட்டுவதற்கு தரப்படும் முன்னொட்டுக் காட்சிகளின் நீளத்தாலும், இப்படம் மொத்தத்தில் எரிச்சலைத்தான் தருகிறது. இதனால் விஷ்ணுவிஷால் பட்ட கஷ்டம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிறது.

இதில் இன்னொரு காமெடியை வேறு செய்து வைத்திருக்கிறார்கள். இர்ஃபான் தன்னைப் பற்றித் தானே ஒரு பிம்பத்தை உருவாக்குகிறான். அதில் வருவது ஒரு காதல். அதுவும் எப்படி? ஒரு பிராமணப் பெண் இர்ஃபானை விழுந்து விழுந்து காதலிக்கிறாளாம். இதை உலகமே நம்புகிறதாம். சொல்வதோ ஊரை ஏமாற்ற ஒரு கதை என்றாகிவிட்டது, அதில் ஏன் ஒரு பிராமணப் பெண் இர்ஃபானைக் காதலிக்கவேண்டும்? அந்தப் பெண்ணும் ஒரு முஸ்லிமாக இருந்துவிட்டால் அது கதையை எப்படிப் பாதித்துவிடும்? இயக்குநருக்கே வெளிச்சம்.

இன்னும் தமிழில் உருப்படியான இஸ்லாமியத் திரைப்படம் வரவில்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்ட யதார்த்தமான இஸ்லாமியச் சூழலுடன் வரும் படம் ஒன்றில்தான் ஒரு அப்பாவி முஸ்லிமின் கஷ்டத்தைச் சரியாகக் காட்டமுடியும். இல்லையென்றால், குறைந்தபட்சம் அந்த அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலையால் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுகிறான் என்பதை உள்ளூர் அளவிலாவது யோசிக்கவேண்டும். இப்படி ஐ எஸ் என்றெல்லாம் யோசித்தால் எடுபடாது. கடைசியில் FIR என்று போட்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முஸ்லிம் பெயரைப் போடுவதால் மட்டும் நாம் சொல்ல நினைத்ததை சொன்னதாகிவிடாது. இந்திய தேசிய முஸ்லிம்களுக்கும் இந்திய தேசிய ஹிந்துக்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, எந்தப் பெயரில் வந்தாலும் அவர்கள் இந்தியர்களே. அப்படி இல்லாமல் போவது ஏன் என்பதை இந்திய தேசிய ஹிந்துக்களை போலவே இந்திய தேசிய முஸ்லிம்களும் யோசிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான விடை கிடைக்கும்.

Thanks: https://oreindianews.com/?p=7553

Share

Comments Closed