ஜகமே தந்திரம் – முற்போக்குத் தந்திரம்

ஜகமே தந்திரம் (Spoilers ahead) – பக்கா கேங்ஸ்டர் படமாக வந்திருக்கவேண்டியது, தேவையற்ற அலைச்சல்களில் வீணாகிறது. துரோகம், துரோகத்துக்கு துரோகம் என்பதால் அதுவே நியாயம் என்று அலைபாய்கிறது திரைப்படம். தமிழின் முக்கிய இயக்குநர்கள் அனைவருமே தங்கள் வீர தீர இந்திய எதிர்ப்பு முற்போக்கு அரசியலில் காணாமல் போகப் போகிறார்கள். இதற்கு முன்பும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இனியும் பட்டியல் நீளும். இன்று கார்த்திக் சுப்புராஜ்.

ஜோஜு ஜோர்ஜ் மிக நன்றாக நடித்திருக்கிறார். அவரும் பிரிட்டன் வில்லனும் தனுஸும் மோதிக்கொள்ளும் இடங்கள் அனைத்துமே பட்டாசு. அப்படியே கலக்கலாகப் போயிருக்கவேண்டிய படம், ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்குள் போய், இன்ன்னொரு திருப்பத்தையும், அதிலிருந்து இன்னொரு திருப்பத்தையும் எடுத்துக்கொண்டு, அதுவரை எப்படியோ தக்க வைத்துக்கொண்டிருந்த விறுவிறுப்பை விட்டுவிடுகிறது. தமிழ்நாட்டில் வாழும் சேட்டுகள் மீது எரிச்சல் காண்பிக்கும் வசனங்கள் ஆரம்பத்தில் வர, எரிச்சலான எனக்கு, பிற்பாதியில் இயக்குநர் ஒரு நியாயம் செய்தது சந்தோஷம். ஆனால், யார் எங்கே வந்து பிழைக்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் இயக்குநர், அதேபோல் மற்ற ஊர்களுக்குப் பிழைக்கப் போகும் பிற நாட்டுக்காரர்கள் செய்யும் ரௌடியிஸத்தைப் பற்றிப் பேசவே இல்லை. ஏனென்றால் தனுஷின் கதாபத்திரமே அப்படிப்பட்ட ஒன்றுதான்.

ஜோஜு ஜார்ஜின் கதாபாத்திரத்தை பிரபாகரன் என்று கொண்டால், தனுஷின் துரோகத்தை இந்தியாவின் துரோகம் என்று கொண்டால், இந்தியாவே மீண்டும் உதவவேண்டும் என்று சொல்ல வருகிறார் என்றும் பார்க்கலாம். அப்படியானால், ஈழத்துக்கு ஆதரவாக இந்தியாவை உதவச் சொல்லும் குரல்கள் எல்லாம் நியாயமாக எந்தப் பக்கம் இருந்து ஒலிக்கவேண்டும்? இந்திய தேசியத்தின் பக்கம்தானே? ஆனால் தமிழ்நாட்டில் ஒலிக்கும் இந்தக் குரல்கள் எல்லாம் இந்திய எதிர்ப்புக் குரல்களாகவே இருக்கின்றன. இது தற்செயல் அல்ல. இவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் வரை இந்தக் குரல்களோடு சேர்ந்து ஒலிக்கும் நியாயமான குரல்களுக்கும் நியாயம் கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்துகொள்வதில்தான் ஈழத்துக்காக ஒலிக்கும் குரல்களின் வெற்றி இருக்கிறது.

படம் முதலில் அரை மணி நேரம் நோகடித்துவிட்டது. தொடர்ந்து பார்க்கத்தான் வேண்டுமா என்றெல்லாம் தோன்றியது. ஆனால், அதற்கடுத்த ஒரு மணி நேரம், குறிப்பாக ஜோஜு ஜார்ஜ் கொல்லப்படும் வரை, அதகளம். (லாஜிக் சுத்தமாக இல்லை என்பதைத் தாண்டி ஒரு மாயம் நிகழ்கிறது.) தனுஷ் அப்படியே ரஜினியை பிரதியெடுக்கிறார். இன்னும் கொஞ்சம் கவனமாக திரைக்கதையை எழுதி இருந்தால், தலைவன் நிச்சயம் மீண்டும் வருவான், நாங்கள் நம்புகிறோம் என்றெல்லாம் எதையாவது எழுதி யாரையாவது ஏமாற்றும் திரைக்கதையை எல்லாம் தவிர்த்து இருந்தால், இன்னும் தீவிரமான கேங்வார் படமாக வந்திருக்கும்.

எந்த ஒரு அரசியலையும் அதன் ஆழத்துக்குள் சென்று பேசாமல், ஃப்ளாஷ் பேக்குக்காகத் தொட்டுக்கொண்டால் அந்தப் படம் அரசியல் படமாகிவிடாது. இயக்குநரின் அரசியல் சார்பு தெரியலாம், அதைத் தவிர வேறு பலன் எதுவும் இருக்காது. இந்தப் படமும் இயக்குநரின் அரசியல் சார்பைச் சொல்வதோடு நின்று விட்டிருக்கிறது. மக்களுக்கு எதைப் பிடிக்குமோ அதைச் சொல்லும் பாதுகாப்பு அரசியலைப் போல, மக்களுக்கு எதைப் பிடிக்குமோ அதை மட்டும் காட்டித் தப்பித்துக்கொள்ளும் படங்கள்தான் இன்றைய ட்ரெண்ட். இது தப்பித்துக் கொள்ளுதல் மட்டும் அல்ல, அதைத் தாண்டிய ஆதாரங்களும் கிடைக்குமோ என்னவோ. கடவுளுக்கே வெளிச்சம்.

ஈழப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை உணர்வுரீதியான ஒரு தொடர்பு மட்டுமே அன்றி தினசரி அரசியல் பிரச்சினை அல்ல. இதுதான் யதார்த்தம். ஆனால் என்னவோ தமிழக மக்கள் அனைவரும் ஈழப் பிரச்சினைக்காக இன ரீதியாக உயிரையே தரத் தயாராக இருப்பதாக இயக்குநர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தீராதவரை ஈழ மக்களின் நிஜ அரசியல் திரைப்படம் தமிழ்நாட்டில் வர வாய்ப்பே இல்லை. நான் தமிழன் நான் தமிழன் என்று ஒரு ஐடி கார்டாக ஒரு படம் அதன் இயக்குநருக்கு உதவலாம். அதுதான் நோக்கமே என்றால் நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்யும் மிகப் பெரிய உதவி, இப்படி அரைகுறையாக எதையாவது சொல்லாமல் இருப்பதுதான். இந்தப் படத்தைப் பார்க்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு பிரிட்டனில் ஈழத் தமிழர்கள் ரௌடிகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கவேண்டும். இதையே ஃபேமிலிமேன் போன்ற ஒரு தொடரில் காட்டி இருந்தால் தமிழர்கள் என்ற முற்போக்க்காளர்கள் தோரணம் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். நல்லவேளை, ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தை நல்ல கேங்க்ஸ்டராக்கி தப்பித்துக் கொண்டார் இயக்குநர். இந்த புத்திசாலித்தனமே ஒரு நியாயமான படத்துக்கான எதிரி!

பின்குறிப்பு: பிரிட்டன் வில்லனுக்கு ஆங்கில வசனம் எழுதியது யார் என்று தெரியவில்லை. சப்டைட்டிலிலும் கூடப் புரியாது. இரண்டு முறை படிக்க வேண்டி இருக்கிறது. அத்தனை லோக்கல், அத்தனை தீவிரம்!

(படம் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கக் கிடைக்கிறது.)

Share

Comments Closed