தி இண்டியன் கிச்சன் – வெற்றுச் சமையல்

MMM (Malayala Movie Mafia)க்களும் பெண்ணியவாதிகளும் இந்த அற்பனை மன்னித்துவிடுங்கள்.

தி இண்டியன் கிச்சன் படம் பார்த்தேன். இருபது நிமிடத்தில் எடுத்திருக்கவேண்டிய அசல் முற்போக்கு பெண்ணிய குடும்ப எதிர்ப்பு குறும்படம். அதை இரண்டு மணி நேரமாக எடுத்திருக்கிறார்கள். தினமும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவது, வீடு துடைப்பது என எல்லாவற்றையும் இன்ச் இன்சாகக் காட்டுகிறார்கள். பொதுவாக மலையாளப் படத்தில் ஒரு முதியவர் மெல்ல நடந்து போய் ஒரு மரத்துக்கு அருகே நின்று சிறுநீர் கழித்துவிட்டு (அதன் சத்தம் காதை அடைக்கும்) மீண்டும் நடந்து வருவதைக் காண்பிப்பார்கள். நல்லவேளை அப்படியெல்லாம் இல்லை. ஒரு கட்டத்தில் என்னல்லாம் சமைக்கிறாங்க, எப்படில்லாம் சமைக்கிறாங்க என்று பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அந்தப் பெண் கஷ்டப்படுவது போய் அடுத்து அவள் என்ன சமைப்பாள் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. பூரி மட்டும் வரவில்லை. மற்ற எல்லாம் வந்துவிட்டது.

இப்படியே போகும் படத்தில் சட்டென இல்லறத்தில் பெண்ணுக்கு திருப்தி இல்லாதது மற்றும் ஐயப்பன் பூஜையை சாமர்த்தியமாகச் செருகிறார் இயக்குநர். இந்த இரண்டும் இல்லாவிட்டாலும், இன்னும் சொல்லப் போனால், இல்லாமல் இருந்திருந்தால்தான் சரியான படமாக இருந்திருக்கும். ஆனால் இயக்குநர் முற்போக்காளர். இந்த பெண்ணிய முற்போக்காளர்களுக்கு குடும்பம் என்கிற அமைப்பில் இருக்கும் போதாமைகளைக் களைவதை விட, குடும்பம் என்கிற அமைப்பைச் சிதைப்பதிலேயே ஆர்வம் அதிகம் இருக்கிறது. இது தற்செயல் அல்ல. குடும்ப அமைப்பே இந்தியாவின் ஆதார சுருதி. அதனால்தான் இதில் கவனம் கொள்கிறார்கள்.

குடும்ப அமைப்பில் பெண்கள் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார்கள் என்று நான் உளறமாட்டேன். நிச்சயம் அவர்களுக்கே பெரும் சுமை இருக்கிறது. ஆண்கள் வீட்டு வேலை செய்வதையே பெரும் அவமானமாக நினைக்கிறார்கள். இவை எல்லாமே மாற வேண்டும். ஆனால் அதை ஐயப்ப பூஜையோடு முடிச்சி போட்டிருப்பதெல்லாம் பயங்கர ஐடியா. எந்த ஒரு முஸ்லிம் வீட்டிலும், இந்த ஒரு கிறித்துவ வீட்டிலும் அடுப்பாங்கரை இப்படித்தான் இருக்கும். ஒரு சந்தேகமும் வேண்டாம்.

படத்தில் என்ன காட்டுகிறார்களோ அதை வைத்துப் பார்த்தாலும் கூட, அந்தப் பெண் மூன்று நாள் ஒதுங்கி இருக்கும்போது உதவ ஒருவர் வருகிறார். அதாவது ஐயப்பனுக்கு மாலை போடுவதற்கு முன்பாகவே இது நடக்கிறது. மூன்று நாள் தீட்டு என்பது நிறைய சமூகத்தில் உள்ளதுதான். படித்த ஒரு பெண்ணுக்கு இந்த அறிவு கூடவா இருக்காது? ஐயப்ப சாமிமார் டீ கேட்டால் பாத்திரம் கழுவிய நீரைத் தருவது அந்தப் பெண்ணின் திமிரையும் கிறுக்குத்தனத்தையும்தான் காட்டுகிறது. கேட்டால், அவள் அடக்கி வைத்திருந்த கோபம் அப்படி வெளிப்படுகிறது என்று சொல்வார்கள். அறிவு இருப்பவள் அன்று அமைதியாக டீ போட்டுக் கொடுத்துவிட்டு மறுநாள் வெடித்திருப்பாள். ஆனால் இந்தக் கதாபாத்திரம் ஒரு அறிவற்ற கதாபாத்திரம்.

கதாநாயகன் தெளிவாக கதாநாயகியிடம் சொல்கிறான். இப்போதைக்கு வேலை வேண்டாம், கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று. இதில் ஒரு தவறும் இல்லை. அவள் வேண்டுமென்றே அப்போதே வேலைக்கு மனு போடுகிறாள். தூரமாக இருக்கும்போது துளசி மாடத்தில் இருக்கும் துளசியைப் பறித்து உண்ணுகிறாள். இப்படிப்பட்ட பெண் திருமணத்துக்கு முன்பே தன் தேவை என்ன என்று பேசி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பேசவில்லை. அதைவிட ஆச்சரியம் என்ன என்றால், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக் கூடாது என்பதை கதாநாயகன் முதலிலேயே பெண் வீட்டில் சொல்லிவிடுவதாகவும் ஒரு வசனம் வருகிறது. அப்படியானால் அந்தப் பெண் பாத்திரம் கழுவிய நீரை யார் முகத்தில் கொட்ட வேண்டும்? அவளது அப்பா அம்மா முகத்தில்தானே? ஆனால் ஐயப்ப சாமிமார் முகத்தில் கொட்டுகிறாள். ஏனென்றால் அப்போதுதான் முற்போக்குப் பெண்ணியப் படம் எடுக்கமுடியும்.

இறுதிக் காட்சிகள்தான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. திருமண அமைப்பில் இருந்து கதாநாயகி விலகி தனக்குப் பிடித்த துறைக்குப் போகிறாள். இந்தக் கருமத்தை அவள் திருமணத்துக்கு முன்பே சொல்லித் தொலைத்திருக்கலாம். ஆனால் ஐயப்பன் தன் பக்தர்களைக் கைவிடவில்லை. கதாநாயகனுக்கு ஏற்ற, அவன் குடும்பத்துக்கு ஏற்ற பெண் அமைகிறாள். வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் பெண்ணுக்கு மரியாதை என்பது மேற்கத்திய கலாசாரம் கற்றுத் தரும் பொய். அதற்கு இணையான மேம்பட்ட ஒன்று, குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணின் நிலை. கூடவே, பெண் வேலைக்குப் போய் ஆண் குடும்பத்தை நிர்வகித்துக் கொண்டால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டுமே இழிவில்லை. யார் யாருக்கு எது சரியாக வருமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் ஒரு தவறுமில்லை.

திருமணத்துக்கு முன்பு பெண்களுக்குத் தன் கருத்தைச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி. அப்படி உரிமை இல்லாத பெண்ணாக இந்தக் கதாநாயகி படைக்கப்படவில்லை. எனவே முற்றிலும் கிறுக்குத்தனமாகவே இப்படம் எடுக்கபட்டிருக்கிறது.

தன் வீட்டில் தன் தம்பி அம்மாவை தண்ணீர் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்கும்போது கதாநாயகி எரிந்து விழுகிறாள். இதுதான் ஒரே உருப்படியான காட்சி. இதையே நாம் நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்கும் செய்யவேண்டியது. மற்றபடி எல்லாமே இப்படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. என்ன பிரச்சினை என்றால், அத்தனை இயற்கையாக நடிக்கிறார்கள் அனைவரும். ஒரு வீட்டுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் கேமராவை வைத்துவிட்டு வந்துவிட்டது போல. அத்தனை இயல்பு. இப்படித்தான் ஒரு படைப்பு அதன் ஆதார நோக்கத்தையும் தாண்டி சாமானியர்களின் மனதுக்குள் அவர்கள் அறியாமலேயே இதுதான் சரி என்று நுழைந்துவிடுகிறது.

Share

Comments Closed