மண்டேலா – அதீதம்

மண்டேலா – எதையுமே நமக்கு உரக்கச் சொல்லித்தான் பழக்கம். அதிலும் எதாவது ஒரு நாடகத்தை நுழைக்காவிட்டால் தூக்கம் வராது. ஒவ்வொரு கதை விவாதத்திலும் யாரேனும் ஒருவர் நிச்சயம் ‘இது தமிழ் ஆடியன்ஸுக்கு செட் ஆகாது சார்..’ என்று சொல்வார்கள் என நினைத்துக்கொள்வேன். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் அலுக்க வைக்கும் திரைக்கதை. எளிதாக யூகிக்கக் கூடிய நிகழ்வுகள். ஒரு ஓட்டு என்னும் செயற்கைத்தனத்தின் மேல் நம் இயக்குநர்களுக்கு இருக்கும் வெறித்தனமான ஆர்வம் ஆச்சரியமளிக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு என்பதெல்லாம் ஓவர். நாமாகவே இது தேர்தலுக்கும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படையாகச் சொன்னால் திராவிட இயக்கம் தோலை உரித்தாலும் உரித்துவிடும். ஆனால் மோடி பிரச்சினையில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஒருத்தருக்கு 15,000 ரூபாய் என்று சொல்லலாம். பாரதம் தூய்மைத் திட்டம் என்றும் சொல்லலாம். ஒரே விதிவிலக்காக இருபது ரூபாய் டோக்கன் என்ற ஒன்றைக் காண்பிக்கிறார்கள்.

நம் இயக்குநர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை வினோதமானது. அவர்கள் எடுக்க நினைப்பது 80 அல்லது 90களின் கதையை. அப்படியே எடுத்தால் எப்படி இன்றைய இந்திய அரசைக் கிண்டல் செய்வது என்று நினைப்பார்களோ அல்லது ஒரு பீரியட் படமாகச் செய்வது தேவையற்ற வேலை என்று நினைப்பார்களோ தெரியாது. அவர்களது கனவை இன்றைய நிலையில் கொண்டு வந்து பொருத்தி வைக்கிறார்கள். அது அழகான கழுதையாகவும் இல்லாமல் அசிங்கமான கழுதையாகவும் இல்லாமல் எதோ ஒன்றாகப் பிறக்கிறது. (கழுதைப் புலி உவமானத்தைச் சொல்ல விரும்பவில்லை, காரணம் இதில் ஒரு புலி கூட இல்லை!) எந்த கிராமத்தில் இத்தனை பேர் இன்னும் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற பூதாகரமான கேள்வி எழுகிறது. நிச்சயம் வாய்ப்பில்லை. உடனே முற்போக்காளர்கள், அதெல்லாம் இருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகள் திராவிட இயக்கங்கள் செய்ததுதான் என்ன என்ற கேள்வியும் சேர்ந்து எழவே செய்யும். இதையே 90கள் என்று வைத்துவிட்டால், கொஞ்சம் சமாளித்திருக்கலாம். ஆனால் இன்று நிகழ்வது போல வைக்கிறார்கள். அப்போதுதானே டிஜிடல் இந்தியா என்று சொல்லமுடியும். நான் இப்படிச் சொல்வதால், என்னவோ இந்தப் படத்தில் பூதாகரமாக அரசைக் கிண்டல் செய்திருக்கிறார்கள் என நினைக்கவேண்டாம். போகிற போக்கில் சொல்லப்படும் கிண்டல்களே. எனக்கு இருக்கும் வருத்தம், தெளிவாக அதிமுகவையோ திமுகவையோ தொடாமல் விட்டு விலகும் அந்த சாமர்த்தியத்தின் மேல் மட்டும்தான். இந்த தெளிவு இருக்கும் வரை தமிழ்நாட்டில் உருப்படியான அரசியல் பகடி படங்கள் வர வாய்ப்பில்லை.

நோட்டா, ஒரு ஓட்டில் வெற்றி என்று குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். மண்டேலா குண்டுச் சட்டிக்குள் கழுதையை ஓட்டும் ஒரு முயற்சி. முதல் இருபது நிமிடத்தில் படத்தைப் பார்க்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எப்படியோ முழுமையாகப் பார்த்துவிட்டேன். அப்படி முழுமையாகப் பார்க்க முடிந்தது ஒன்று மட்டுமே படத்தின் வெற்றி.

2021ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் அது வாக்கு இயந்திரத்தில் நடக்காது என்று இயக்குநர் நம்புகிறார் போல! இத்தனைக்கும் அந்த ஊரில் போட்டி இடுபவர்கள் இரண்டு பேர் மட்டுமே.

Share

Comments Closed