தேஜஸ்வி சூர்யா – பெங்களூரு படுக்கை ஊழல்

பெங்களூருவில் நடந்த கொரானா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான ஊழலை தேஜஸ்வி சூர்யா வெளிப்படுத்தும்போது சொன்ன பெயர்கள் அனைத்தும் இஸ்லாமியர்களின் பெயர்கள். இதை வைத்துக்கொண்டு அங்கே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் இதில் இருக்கும் மத அரசியலைப் பாரீர் என்று ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் அந்தப் பெயர்களை அவர் சொன்னார், அந்தப் பெயர்கள் யாருடையவை, அவை யார் தந்தவை என்பதையெல்லாம் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பார்கள். நடிகர் சித்தார்த் கிடைத்தது இன்னொரு வாய்ப்பு என்று மதச்சார்பின்மை ஒளிவட்டத்துடன் ஒரு பதிவும் போட்டு, அஜ்மல் கஸாப்பையும் விட பின் தங்கிவிட்டதாக ஒரு ட்வீட் செய்துவிட்டார். அதையும் சேர்த்துக்கொண்டு கன்னட ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ஆரம்பித்துவிட்டன – தேஜஸ்வி சூர்யாவின் ஊழல் தோலுரிப்பில் மத அரசியல் என்று.

Youtube link for the interview of Tejasvi Surya https://www.youtube.com/watch?v=7cera26EkDM

இந்நேரம் பார்த்து தேஜஸ்வி சூர்யாவை பேட்டி எடுத்தது இந்தியா டுடே. வழக்கம்போல இந்தியா டுடேவின் நோக்கம் தேஜஸ்வி சூர்யாவிடம் இல்லாத மத அரசியலை, இஸ்லாமிய வெறுப்பை எப்படியாவது வெளியே கொண்டுவந்து அவரை அம்பலப்படுத்துவது. ஆனால் வழக்கம்போல நடந்தது வேறு. தேஜஸ்வி சூர்யா சொன்ன பதில்களில் வாயடைத்துப் போய்விட்டது இந்தியா டுடே. ஒரு கேள்வியையும் தேஜஸ்வி சூர்யா விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். ஏன் அந்த இஸ்லாமியர்ப் பெயர்கள் என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் இது ஹைலைட். அந்தப் பெயர்ப் பட்டியல் தேஜஸ்ட் சூர்யா தயாரித்ததே அல்ல! மருத்துவமனை தந்தது. அந்தப் பட்டியலை மருத்துவமனைக்குத் தந்தது ஒரு ஏஜென்ஸி. அந்த ஏஜென்ஸி இப்போது காவல்துறை வளையத்துக்குள். இதோடு நின்றிருந்தால் இது அரசியல் பதிலாக மட்டும் போயிருக்கும். அடுத்து என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. நந்தன் நீல்கேனியின் உதவியுடன் இப்போதிருக்கும் வலைத்தளம் மற்றும் ஆப்பை எப்படி உயர்த்தலாம் என்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். நந்தன் நீல்கேனி அதற்கென 100 தொழில்நுட்ப உதவியாளர்களை நியமித்து, அந்த ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த பதில்களை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா டுடே அடுத்த கேள்வியை வெட்கமே இல்லாமல் கேட்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமா என்று. இவர்களுக்குத் தேவை பரபரப்பு மட்டுமே. அதற்கான நேர்மையான பதில் அல்ல!

Share

Comments Closed