சென்ற ஞாயிற்றுக் கிழமை இரவு. சென்னை மழையில் குளிர்ந்துகொண்டிருந்த வேளையில் என்ன செய்வது என்று தெரியாமல், மூளைக்கு வேலையே வைக்காத படம் எதாவது பார்ப்போம் என்று அமேஸான் ப்ரைமில் தேடினேன். கிட்டத்தட்ட 40 நாள்களாக எந்தப் படமும் பார்த்திருக்கவில்லை. தேடுதலில் கண்ணில் பட்டது, ஆயுஷ்மான்பவ என்ற கன்னடப் படம். ஷிவராஜ்குமார் நடித்தது. இயக்கம் பி.வாசு என்று கண்ணில் படவும், இதுதான் நான் தேடிய படம் என்று பார்க்கத் துவங்கினேன்.
வாசுவுக்கு இசையின் மீது என்னவோ அடங்காத வெறுப்பு இருக்கிறது. அதை இசையின் மீதான காதல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். இசை எல்லாவற்றையும் சரி செய்கிறது. குடும்பத்துக்குள் இருக்கும் சண்டையை, பைத்தியத்தைக் கூட குணம் செய்கிறது. ஏன் ஷிவ்ராஜ்குமார் இதையெல்லாம் செய்கிறார் என்றால், அவர் டாக்டர், மனோதத்துவ நிபுணர், பாட வரும், ஆட வரும், சண்டை போட வரும், சமைக்க வரும், அன்பு பொழிய வரும். சந்திரமுகி ரஜினிக்கும் அண்ணன்! பைத்தியக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய், காடெல்லாம் சுற்றி, கிராஃபிக்ஸ் புலி துரத்த, குத்துப் பாட்டு ஆட, போலிஸ் தேட, இசையாலே அந்தப் பெண்ணைக் குணப்படுத்துகிறார். உதவுவது எப்போதும் நெற்றியைச் சுருக்கியபடியே பேசும் சுஹாசினி அக்கா! பத்தாததற்கு ஷிவராஜ் குமாரின் அப்பா நம்ம ஊர் பிரபு. அவரால் உட்காரவோ எழுந்திருக்கவோ முடியவில்லை. பாவமாக இருந்தது. சின்னதம்பி நினைவுக்கு வந்தது! கடைசியில் ஷிவ்ராஜ் குமார் அந்தப் பெண்ணையே கைப் பிடிக்கிறார். ஆனந்த் நாக்தான் தாத்தா.
இடைவேளை வரை கொஞ்சம் அறுவையாக இருந்த படம், இடைவேளைக்குப் பிறகு தாங்கவே முடியாத அறுவையாகிவிட்டது. இரண்டே இரண்டு விஷயங்கள் கொஞ்சம் பரவாயில்லை, ஒன்று பாடல்கள். இன்னொன்று, காமெடி. காமெடி என்றால் சாது கோகிலாவின் இரட்டை அர்த்த காமெடி அல்ல. அது சந்திரமுகியின் வடிவேலு-ரஜினி காமெடியின் நகல். இங்கே நன்றாக இருந்தது, ரங்காயன ரகுவின் காமெடி. கலக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். ஷிவராஜ்குமார் மிக நன்றாகவே நடித்தார். படம் நொந்து நூலாகி முடிந்தபோது ஞாயிறு முடிந்துவிட்டிருந்தது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்த்து நம்மை நாமே திட்டிக் கொள்ள ஏற்ற படம். தேவைப்படுபவர்கள் பார்க்கவும்.