என் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்

கல்கி பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய ரமணின் பதிவு. எத்தனையோ லாம்கள். பதில் சொல்ல-லாம்தான். ஆனால் வழக்கை எதிர்கொள்ள எனக்கு இப்போது நேரமோ திடமோ பணமோ பின்புலமோ இல்லை. எனவே அவரது பதிலை என் டைம்லைனில் பதிந்து வைக்கிறேன். நண்பர்கள் படித்துக்கொள்ளுங்கள். மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ரமணனிடம் சொல்லி, அதை அவர் எனக்குச் சொல்லாமல் விட்ட அந்த நான்கெழுந்து வார்த்தைக்கும், வழக்கு வேண்டாம் என்றதற்கும் நன்றி. என்றாவது ஒரு நாள் முடிந்தால் இதற்கு பதில் சொல்கிறேன். அது என் வாழ்க்கை வரலாற்றில் வரட்டும்.

யார் யாரிடம் கேட்கலாம் என்ற ஒரு பட்டியலே போட்டிருக்கிறார். பாஜக தலைவர்கள் உட்பட. யாரிடமும் நான் பேசுவதில்லை. கருத்து கேட்பதே இல்லை. என் கருத்து, என் உரிமை, என் சுதந்திரம். அது தவறோ சரியோ அதுவே என் பாணி. தேவைப்பட்டால் பாஜக தலைவர்கள் எப்போது வேண்டுமானால் என்னிடம் கருத்துக் கேட்டுக்கொள்ளலாம் என்பதே என் நிலைப்பாடு.

என் குரு பாரா என்றிருக்கிறார். அது தவறு. எனக்கு யாருமே குரு கிடையாது. ஏனென்றால் ஒவ்வொருவருமே ஒரு வகையில் ஒரு குரு. எனவே ஒரே ஒருவர் தனிப்பட்ட குரு என்று இன்று வரை இல்லை. அதனால் பாராவும் குரு கிடையாது. நாளை இந்நிலை மாறலாம். ஆனால் இன்று, இந்நிமிடம் வரை இப்படித்தான். ஆனால், இதெல்லாம் தெரியாமல் ரமணன் பதிவிட்டதற்காக வழக்குப் போடவெல்லாம் மாட்டேன். தவறாகச் சொல்வதும் ஒரு ஜனநாயகச் செயல்பாடுதான் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஏனென்றால் அவதூறு வேறு, கருத்து வேறு. நான் சொன்னது அவதூறு என்ற அளவுக்கு எடுத்துப் போனதற்கு கம்யூனிஸ்ட்டுகள்தான் வருத்தப்படவேண்டுமே அன்றி, நானல்ல.

கருத்துச் சுதந்திரத்தைப் பேணி வளர்க்கும், வழக்குப் போடாத கல்கிக்கு நன்றியும் பாராட்டும்.

பின்குறிப்பு: கிழக்கு பதிப்பகத்தின் புத்தக விமர்சனத்துக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. நான் கிழக்கில் வேலை செய்வதால் தொட்டுக் கொண்டிருக்கலாம். தெரியவில்லை. மருதனும் கிழக்கில் என் அருகிலேயே இருக்கிறார் என்பதையும் ரமணனே சொல்லி இருக்கிறார்.

கல்கி ஆசிரியர் ரமணினின் பதிவு:

கல்கி ஆக்15க்குமேல் மின்னிதழாக வரும் என்ற அறிவிப்பைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பலர் கோபம், வருத்தம், ஆதங்கம் முடிவை மாற்றுங்கள், என்றும் இன்றைய நிலையில் இது வரவேற்கதக்க மாற்றம் என்றும் பதிவிட்டுக்கொன்டிருக்கிறார்கள். பல படைப்பாளிகளும் வாசகர்களும் கல்கிக்கும் அவர்களுக்குமுள்ள உறவை, பிணைப்பை நெகிழ்ச்சியோடு வெளியிடுகிறார்கள்.(ஒரு தொகுப்பே வெளியிடலாம்

)
ஆனால் நண்பர் ஹரன்பிரசன்னா “இது கால மாற்றம் மட்டுமே அல்ல. கம்யூனிஸ்ட்டுகள் கால் வைத்ததும், கம்யூனிஸ்ட்டுகளை உள்ளே விட்டதும் காரணம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

லஷ்மி நடராஜன் சீதா ரவி, வெங்கடேஷ், ரேவதி நான் எல்லோரும் கம்னியூஸ்ட்கள் என்கிறார். இவர்களில் யார் கம்யூனிஸ்ட், என்று அவருக்கு அடுத்த அறையிலிருக்குக்கும் தோழர் மருதனைக் கேட்டிருக்கலாம். அல்லது உலக கம்னியூஸ்ட்களின் நேற்று, இன்று, நாளை யை விரல்நுனியில் வைத்திருக்கும் அவரது குரு முன்னாள் கல்கி உதவியாசிரியர் பா. ரா வைக் கேட்டிருக்கலாம். அல்லது போலிக் கம்னியூஸ்ட்கள் உட்பட அனைத்து கம்னியூஸ்ட்களையும் நன்கு அறிந்திருக்கும் அவரது நண்பர் திராவிட மாயை சுப்புவைக் கேட்டிருக்கலாம். அல்லது இப்போது கட்டணமில்லா சேவையாக இருக்கும் கல்கி தளத்தில் கடந்த இதழ்களைகளைப் பார்த்தோ அல்லது அதில் தவறாது வெளியாகும் கிழக்கு பதிப்பகத்தின் நூல்களின் அறிமுகங்களிலாவது கம்யூனிச வாசனை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்திருக்கலாம். அல்லது கல்கிக்கு நேர்காணல்களும் கட்டுரைகளும் தந்திருக்கும் அவர் அபிமானியாக இருக்கும் பாஜக தலைவர்களான இல. கணேசன், தமிழைசை வானதி, பொன்னார், எச் ராஜா, பேரா. சீனிவாசன், முருகன் போன்றோரைவது கல்கியில் யார் கம்னியூஸ்ட் என்று கேட்டிருக்கலாம். குறைந்த பட்சம் விமர்சிக்கும் முன் சக பத்திரிகைகளில் யார், என்ன எழுதுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்ற பத்திரிகையாசிரியர்களின் பாலபாடத்தை படித்திருக்கலாம்

இப்படி எவ்வளவோ லாம்கள். ஆனால் பூனைக்காவது கண்ணை மூடிக்கொண்டால்தான் உலகம் இருட்டு. ஆனால் சில பாஜகா (கவனிக்க சில) அனுதாபிகளுக்கு பகலில் கண் திறந்திருந்தாலும் இருட்டும் அதில் கம்னியூஸ்ட்களும் தான் தெரிவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை..

ஹரனுடைய இந்த விமர்சனத்துக்கு பதிலாக ஒரு மூத்த பத்திரிகையாளர் சொன்ன 4 எழுத்து வார்த்தையை நான் இங்கு எழத நான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் கண்ணியம் தடுக்கிறது.

ஒதுக்கித்தள்ளிவிட வேண்டிய இந்த்தவறான கருத்துக்கு பதில் பதிவு வேண்டாம் என்றுதான் எண்ணினேன். எங்கள் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் (அவர் வழக்கே தொடுக்கலாம் என்றார்) மறுப்புச் சொல்லாவிட்டால் அதை ஏற்பதாகிவிடும் என்ற சட்டப்பிரிவைச் சொன்னதால் (Law of Estoppel) இந்தப்பதிவு.

Share

Comments Closed