அந்நியன்

முனியப்பன் என்கிற வெங்கடேஷ் திருநெல்வேலியின் பஸ் ஸ்டாண்டில் கதிர்வேலைப் பார்த்தபோது, இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னால் அப்படியே தூக்கி வீசப்பட்டான். தன்னை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து, கதிவேலைப் பார்த்து ஒரு நொடி சிரித்து, இவன் வெங்கடேஷ் அவன் அடுத்த நொடியில் கண்டுபிடித்து அவனும் சிரித்து, ‘நீ எங்கல இங்க?’ என்ற கேள்விக்கு வெங்கடேஷ் சொன்ன பதில், ‘சீராளன் நம்பர் இருக்கால உன்கிட்ட?’ சீராளன் பள்ளியின் சூப்பர் ஸ்டார். ஆங்கிலம் பொளந்து கட்டுவான். கதிர்வேல் சொன்னான், ‘அமெரிக்கால இருக்கானாம்.’

தானும் சீராளனும் சேர்ந்து அடித்த கொட்டங்கள் ஒவ்வொன்றாக வெங்கடேஷுக்கு நினைவுக்கு வந்தன. உயிரியியல் வாத்தியார் வரும் முன் அவரைக் கரப்பான் பூச்சி போல வரைந்து வைத்தது, ஒரு சிட்டிகை போட்டால் நூறு முறை தும்மும் பொடியை எல்லாருக்கும் கொடுத்து தமிழ் வாத்தியார் வரும்போது ஒவ்வொருவரும் நூறு முறை தும்மி அவரை அலறி ஓட்ச வைத்தது, மாஸ் கட் அடித்துவிட்டு கலைவாணி தியேட்டருக்கு ஓடியது, நாடோடித் தென்றல் படத்துக்குப் போய் ‘ஒரு கணம் ஒரு யுகமாக’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்டு ராயல் தியேட்டரில் சண்டை போட்டது, பெண்ணின் படம் வரைந்து பாகங்களைக் குறித்து வைத்தது..

உணர்ச்சிப் பெருக்கில் வெங்கடேஷ் கண்ணீர் துளிர்க்க சீராளனுக்கு வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினான். ‘யார்னு தெரியுதால?’ ஐந்து நிமிடம் காத்திருந்தான். பதில் இல்லை. ‘வெங்கடேஷ்ல’ என்று அனுப்பினான். அதற்கும் பதில் இல்லை. தான் அனுப்பிய மெசேஜை சீராளன் படித்துவிட்டதாக வாட்ஸப் சொல்லியது. தன்னை மறந்துவிட்டானோ என்று வெங்கடேஷுக்குத் தோன்றியது. மீண்டும் தெளிவாக ‘வெங்கடேஷ், ப்ளஸ் டூல ஒண்ணா படிச்சோம்’ என்று மெசேஜ் அனுப்பினான். அப்போதும் பதில் இல்லை. வெங்கடேஷால் நம்பவே முடியவில்லை. சீராளனா இப்படி? இருக்காது என்று நினைத்து அவனை போனில் அழைத்தான். அழைப்பு கட் செய்யப்பட்டது. உடனே வாட்ஸப்பில் ஒரு மெசேஜ் வந்தது. ‘பிஸி.’ வேலையாக இருப்பான் போல என அமைதியாகக் காத்திருந்தான். அவனதுநினைவுகள் அவன் படித்த பள்ளியையே சுற்றி சுற்றி வந்தன.

அன்று முழுவதும் சீராளன் அழைக்கவோ மெசேஜ் அனுப்பவோ இல்லை. அன்று இரவு முழுவதும் சீராளன் நினைவாகவே இருந்தது வெங்கடேஷுக்கு. மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாக அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் வெங்கடேஷ். ‘ஃபீரியால?’ சீராளனிடம் இருந்து எந்தப் பதில் இல்லை. பத்து நிமிடம் காத்திருந்துவிட்டு, மீண்டும் போனில் அழைத்தான். அந்த அழைப்பையும் சீராளன் கட் செய்தான். உடனே வாட்ஸப்பில் இன்னொரு மெசேஜ் அவனிடம் இருந்து வந்தது. ‘பிஸி.’

இவன் எப்பவுமே இப்படி பிஸியாத்தான் இருப்பானா என்கிற எண்ணம் வந்தது வெங்கடேஷுக்கு. அவன் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த மெசேஜை சீராளன் அனுப்பி இருந்தான். ‘விஜயலட்சுமி நம்பர் இருந்தா அனுப்பி வை.’ வெங்கடேஷுக்குள் இருந்த முனியப்பன் அடுத்த மெசேஜை அனுப்பினான். ‘நீ பிஸின்னா தாயோளி நான் என்ன இங்க செரச்சிக்கிட்டால இருக்கேன்? நானும் பிஸி மயிருதான்.’

Share

Comments Closed