இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய பிரச்சினை. அதாவது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் இருந்து, இப்போது அவை திடீரெனக் கிடைக்கும்போது வெடிக்கின்றன. அதனால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைப் பற்றிய கதை. சில நாடுகளில் இது முக்கியமான பிரச்சினை. இப்பிரச்சினையை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்ற நினைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் இத்தகைய வெடிக்காத குண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டதில்லை. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இதுபோன்ற பெரிய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைச் செயலிழக்கச் செய்வது பெரிய பிரச்சினையாக இருக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த இடத்தை விட்டே அப்புறப்படுத்தப்படுவார்கள். சில குண்டுகள் வெடித்து மக்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இது பெரிய பிரச்சினையாக இதுவரை வந்ததில்லை. எனவே இது நமக்கு வேறு ஒரு ஊரின் பிரச்சினையாகத் தோன்றிவிடுகிறது. இந்த குண்டு வெடித்தால் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்பது பற்றி நமக்குப் புரியாததால், இந்தியாவின் அப்படி நிகழ்ந்தது இல்லை என்பதால், நாம் இந்தப் படத்துடன் ஒன்ற மறுத்து விடுகிறோம். படமும் நம்முள் அந்தப் பதற்றத்தைக் கடத்தவில்லை.

அதேபோல் இத்தனை ஆயிரம் பேரைக் கொல்லப்போகும் ஒரு குண்டை இந்திய அரசு இப்படித்தான் அலட்சியமாகக் கையாளும் என்று நமக்குள் ஒரு கம்யூனிச மூளையின் சிந்தனை திணிக்கப்படுகிறது. அந்த கம்யூனிச மூளை இப்படத்தை எழுதிய எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இயக்குநராக இருக்கலாம் அல்லது தயாரிப்பாளராக இருக்கலாம். இப்படி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தியைப் போல எப்போதும் நம் அரசு நம்மைக் கொல்லத் தயாராக இருக்கிறது என்று சொல்வதை இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் குறைகளே இல்லை என்பதல்ல. ஆனால் குறைகளின் நடுவே மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்று வலிந்து உருவாக்கப்படும் சித்திரம் ஏற்கத்தக்கதல்ல. ‘முற்போக்காளர்’களின் முதன்மையான நோக்கமே இந்த சித்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குவதுதான்.

திரைப்படம் என்று வந்து விட்டால் நம் ‘முற்போக்காளர்கள்’ அன்பு அக்கறை என்றெல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் இதே கம்யூனிசம் உலகம் முழுக்க ஒன்றரை கோடி பேரை, ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றரை கோடி பேரைக் காவு வாங்கியிருக்கிறது ஹிட்லரின் இன ஒழிப்பின்போது மாண்ட மக்களுக்கு இணையான எண்ணிக்கையில் கம்யூனிஸத்தால் மக்கள் உலகம் முழுக்கக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அதைப்பற்றி இவர்கள் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கோட்பாட்டை விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குண்டு வெடித்தால் 1,000 முதல் 2,000 அப்பாவிகள் செத்துப் போவார்கள் என்று புலம்பும் ஒரு தோழர், வருடம்தோறும் மாவோயிஸ்டுகளால் இந்தியா முழுக்கக் கொல்லப்படும் குடிமக்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியா முழுக்கக் கொன்று போடும் அப்பாவி இந்தியர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவன் வலி இன்னொருவனுக்குத் தெரியவேண்டும் என்று வக்கணையாகப் பேசும் தோழர் கதாபாத்திரம், இத்தகைய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழக்கும் மனிதர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் அத்தனையுமே வெறும் புனைவு சார்ந்ததாக மட்டுமே ஆகிவிடுகிறது. உண்மையைச் சார்ந்ததாக மாறுவதில்லை. ஆனால் அடிப்படையோ உண்மை சார்ந்த நிகழ்வு என்று சொல்கிறார்கள். எனவேதான் நம்மால் இந்தப் படத்துடன் ஒன்ற முடிவதில்லை.

முதல் திரைப்படம் என்ற வகையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பெரிய நம்பிக்கையைத் தருகிறார். படம் எடுக்கப்பட்ட விதம் மிக நன்றாக இருக்கிறது. மிகச் சரியான கதையைக் கையில் எடுத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தால் இப்படம் பெரிய அளவு பேசப்பட்டிருக்கும். நமக்கு அனுபவப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளாதது முதல் மைனஸ். அதில் காதல் வர்க்க ஜாதி வேறுபாடு என்று எல்லாவற்றையும் சேர்த்து, எதையும் தீவிரமாகக் காட்டாமல் போனது இரண்டாவது மிகப்பெரிய மைனஸ்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் யாமகுச்சி என்ற ஒரு ஜப்பானியர் வருகிறார். அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவராகச் சொல்லப்படுகிறது.  ஒரு வரலாற்று அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் வரும் இந்தக் கதாபாத்திரமும் உண்மையான ஒன்றாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முழுக்க இது புனைவு என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஜப்பானியர் தன் மகள் குறித்த ஒரு கதை சொல்கிறார். உலகம் முழுக்க பிரபலமான அந்தக் கதை நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட ஒரு குண்டு தந்த புற்றுநோயைச் சுமக்கும் பெண்ணைப் பற்றியது.  ஸடகோ ஸஸகி என்னும் அந்தச் சிறுமி 1000 காகிதப் படகுகள் செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்று அவளுடன் படிக்கும் இன்னொரு சிறுமி சொல்கிறாள். இந்தப் பெண்ணும் படகுகள் செய்கிறாள். அந்தப் பெண்ணின் தந்தைதான் இந்தப் படத்தில் வரும் ஜப்பானியர் என்றும் இரண்டு நோபல் பரிசுகள் பெற்றவர் என்றும் காட்டப்படுகிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் தந்தைக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு முறை நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியலில் எந்த யாமாகுச்சியும் கிடையாது. அதேபோல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என்ற இரண்டு குண்டு வீச்சிலும் உயிர் பிழைத்த யாமாகுச்சி என்பவருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை. அவரது மகள் ஸடகோ ஸஸகி அல்ல. இத்தனை குழப்பமான ஒரு கதாபத்திரத்தை ஏன் க்ளைமாக்ஸில் கொண்டு வந்தார்கள் என்று புரியவில்லை. உண்மைக்கு அருகில் என்றால் அது உண்மையில் உண்மைக்கு அருகில் இருந்தாக வேண்டும்.

காகிதப் படகுகள் செய்யும் பெண்ணின் கதை இரண்டு நிமிடமே வந்தாலும் அது நெஞ்சை உருக்குகிறது. ஏனென்றால் அதில் நெஞ்சை உருக்கும் உண்மை உள்ளது. இந்தப் படம் தோற்றதும் இந்த இடத்தில்தான்.

படத்தின் ஹீரோ தினேஷ் மிக நன்றாக நடிக்கிறார். சில காட்சிகளில் அதீத நடிப்பு. தோழர் தோழர் என்று அழைத்துக் கொண்டே வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் காமெடியான கதாபாத்திரமாகவே எஞ்சுகிறது. யாரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிறார். போலீசை விட தோழர்கள் இரவு பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பார்ப்பதெல்லாம் பெரிய நகைச்சுவையாக மட்டுமே இருக்கிறது. முதலாளி வர்க்கம் உலக மக்களை ஒருவர் விடாமல் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற கம்யூனிச வெற்று அலப்பறைகளை எல்லாம் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்பும் தமிழ்த் திரையுலகம் தாங்கிக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்!

ஒரு வித்தியாசமான திரைப்படம் என்றால் அதில் எப்படியாவது தெருக்கூத்து தொடர்பான காட்சிகள் வந்துவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் இருந்து நம் இயக்குநர்கள் எப்போது வெளியே வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஒரு தெருக்கூத்துக் காட்சி வருகிறது. அந்தத் தெருக்கூத்துக் காட்சி அதனளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றாலும் கூட, இது போன்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவது ஒரு க்ளிஷேவாகி எரிச்சலை மட்டுமே வரவழைக்கிறது.

தமிழ் இயக்குநர்கள் தாங்கள் எடுக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் அரசியல் குறியீடுகளையும் அரசியல் தொடர்பான பின்னணிகளையும் தேவையே இல்லாமல் புகுத்துவதன் மூலம் உண்மையான அரசியல் திரைப்படம் வருவதைத் தடுக்கவே போகிறார்கள். இதனால், திரைப்படத்தை எவ்விதக் கோட்பாடும் இன்றிப் பார்க்க விரும்பும் பொது ரசிகர்களைத் தங்களிடமிருந்து விலக்கி வைக்கப் போகிறார்கள். எல்லாப் படங்களிலும் அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கான கொள்ளி. இதை இவர்கள் வைக்காமல் விடப் போவதில்லை.

நன்றி: ஒரேஇந்தியா

Share

Comments Closed