ஆர்.கே.நகர் – பொருட்படுத்தத் தகாத ஒரு படம். முழுமையாகப் பார்ப்பதே பெரிய கொடுமை. இப்படிப் படம் எடுக்கும் லட்சணத்தில் நம் இயக்குநர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் குறியீட்டை வைக்கவும், அரசியலைக் கிண்டல் செய்யவும் மட்டும் ஆசை வந்துவிடுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுக் கதை வசனம் எழுதுகிறார்கள்.
ஆர்.கே. நகர் என்ற பெயரே நமக்குச் சொல்லும், இது அரசியல் படமாக இருந்தால் எதைப் பற்றிப் பேசவேண்டும், எந்தக் கட்சிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று. இந்தப் படத்தில் அதைப் பற்றிய மூச்சே இல்லை. பின்னணியாகப் பள்ளி சிறுவர்களின் சீரழிவே கதை. ஆனால் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அரசியல் தொடர்பானவை. சந்தான பாரதி ஒரு கவுன்சிலர். செல்வாக்கு மிக்க கவுன்சிலர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கவுசின்லர், அடிதடி கவுன்சிலர், ரௌடி கவுன்சிலர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கமுடியும்? அதைக்கூட விடுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக நிச்சயம் இருக்க முடியாது? பாஜக காரராக இருக்க வாய்ப்பில்லைதானே? இந்தப் படத்தில் வரும் சந்தான பாரதி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வருகிறார். காவி வேட்டி கட்டி வருகிறார். எந்தக் கழக அரசியல்வாதி காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறார்? இவர்களுக்குக் கழக அரசியல்வாதிகளைக் காண்பிக்க பயம்.
அத்தோடு நிற்கவில்லை. சந்தான பாரதியும் வாஜ்பேயியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. குறியீடாம்! இதிலும் திருப்தி அடையவில்லை இயக்குநர் சரவணன் ராஜன். இந்த சந்தான பாரதி கோவில் நிலத்தை ஆட்டையைப் போடுகிறார். தமிழ்நாட்டில் யார் கோவில் இடத்தை ஆட்டையைப் போட்டிருப்பவர்கள்? யார் தொடர்ந்து 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள்? இயக்குநர் பச்சைக் குழந்தை என்பதால் இதெல்லாம் தெரியாது. கைச்சூப்பிக்கொண்டு, அப்படியே மக்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அப்படியும் திருப்தி வரவில்லை குழந்தை இயக்குநருக்கு. கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவதைத் தடுக்கும் ஒரு கட்சியின் உதவிக்குப் போகிறார் கோவில் பட்டர். அவருக்கு உதவுபவர்கள் பக்தியில் நம்பிக்கையில்லாத ஆனால் நல்லவர்களாம்!
இந்த இயக்குநருக்கும் இதன் தயாரிப்பாளரான வெங்கட் பிரபுவுக்கும் ஏன் ரஜினி மேல் இத்தனை காண்டு, வெறுப்பு எனத் தெரியவில்லை. சந்தான பாரதியை ரஜினியின் கதாபாத்திரமாக்கி திட்டித் தீர்க்கிறார்கள். போர் வரும்போது வருவேன் என்ற வசனத்தை சந்தான பாரதி சொல்கிறார். சந்தான பாரதி கவுன்சிலர் என்றால் ரஜினியை எப்படித் திட்டுவது என்பதற்காகவே சந்தான பாரதியை ஒரு நடிகர் என்று காட்டி இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று காட்டினால் கவுன்சிலராகக் காட்ட முடியாதே என்பதற்காக சின்ன நடிகர் என்று காட்டிவிட்டார்கள். எவ்வளவு கற்பனைப் பஞ்சம் பாருங்கள். அதாவது வசனமும் காட்சிகளும் மட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கானவை! அவரோ ஒரு கவுன்சிலர்! ஒரு காட்சியில் சந்தான பாரதி ரஜினியுடன் இருக்கும் படம் வருகிறது. அதாவது சந்தான பாரதியும் வாஜ்பேயியும் புகைப்படத்தில் வரும் அதே காட்சியில் இந்த சந்தானபாரதி – ரஜினி படமும் அதற்கு இணையாக வருகிறது. குறியீட்டுக்குள் குறியீட்டுக்குள் குறியீடாம். இதில் சந்தான பாரதியை எந்திரன் போல கிராஃபிக்ஸ் செய்து ஃப்ளக்ஸ் எல்லாம் பின்னணியில் குறியீடாக வருகிறது. இரண்டு முறை ‘நீ என்ன எம்ஜியாரா?’ என்ற வசனம் வருகிறது.
ஒழுங்காக ஒரு படம் எடுக்க முடியவில்லை. ஆக்ரோஷமான அரசியல் சட்டையர் எடுக்க வக்கில்லை. தமிழ்நாட்டில் கோலோச்சும் கட்சிகளை விமர்சித்து, தாக்கி, தீவிரமான அரசியல் படம் எடுக்க துணிவில்லை. ஆனால் வாய் மட்டும் இருக்கிறது இவர்களுக்கு.