என் டி ஆர்: மகா நாயகடு

ஏற்கெனவே ‘கதா நாயகடு’ பற்றி எழுதி இருந்தேன். இது அதன் இரண்டாம் பாகம், ‘மகா நாயகடு.’ கதா நாயகடு, என்.டி.ஆர் கட்சி ஆரம்பிப்பதோடு நிறைவடைகிறது. இது அவர் அரசியலில் வெல்வதைக் காட்டுகிறது. முதல் பாகத்தில் பாலகிருஷ்ணா என்.டி.ஆரின் இள வயது சேஷ்டைகளை நடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் வயதான என்.டி.ஆராக அட்டகாசமாக நடித்திருக்கிறார். என்.டி.ஆர் பேசும்போது அவர் செய்யும் உடல்மொழியை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். என்.டி.ஆர் தமிழில் நடித்த திரைப்படங்களிலும் இந்த உடல்மொழியை நாம் பார்த்திருக்கிறோம்.

தெரிந்த கதையை மிக நன்றாகவே திரையாக்கம் செய்திருக்கிறார்கள். பாஸ்கர் ராவ் உதவியோடு கட்சியைத் தொடங்கி, வென்று, முதலமைச்சர் ஆகும் என்.டி.ஆர்., அதே பாஸ்கர் ராவால் கவிழ்க்கப்படுகிறார். இந்திராவின் பின்னணி உதவியுடன் இது நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடுவின் உதவியுடன் அதை முறியடித்துக் காட்டுகிறார் என்.டி.ஆர். இவருக்குப் பின்னணியில் ஆந்திராவின் மக்கள் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு இதே பாணியில் என்.டி.ஆரிடமிருந்து ஆட்சியை இதே சந்திர பாபு நாயுடு பறிப்பது வரலாற்றில் பின்னர் நிகழ்கிறது. இது இப்படத்தில் வரவில்லை. ஏனென்றால் என்.டி.ஆர் பாஸ்கர் ராவையும் காங்கிரஸையும் முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

இந்திரா ஜனாதிபதியிடம், ‘என்.டி.ஆர் டெல்லி வந்தால் நீங்கள் அவரைப் பார்க்கலாம்’ என்று உள்ளர்த்தத்தோடு சொல்கிறார். ரயிலில் ஏறி டெல்லி வரும் எம்.எல்.ஏக்களை சில குண்டர்கள் தாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் டெல்லிக்கு வந்துவிடக்கூடாது என்பதே இந்திராவின் எண்ணம். எம்.எல்.ஏக்கள் தாக்கப்படும்போது, உதவிக்கு திடீரென ஒரு கூட்டம் வருகிறது. காக்கி டவுசருடன் வந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டு பாரத் மாதா கி ஜே சொல்லிவிட்டுப் போகிறார்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதற்கு முந்தைய காட்சியில், என்.டி.ஆர் காக்கி உடை அணிந்து இந்தியக் கொடியை வணங்குகிறார். அவரது கம்பீரமான வணக்கத்தை சிலாகிக்கும் கட்சிக்காரரிடம் சந்திரபாபு நாயுடு சொல்கிறார், ‘எனக்குப் பார்க்க ஒரு கொடியே இன்னொரு கொடியை வணங்குவது போல இருக்கிறது’ என்று. அந்தக் காட்சியில் வான்வெளியில் இந்தியக் கொடி பறக்க காவிக்கொடி போன்ற என்.டி.ஆர் வணங்குகிறார்.

ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகச் சித்தரிக்கப்படும் படங்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். இப்படத்தில் வரலாற்றில் நிகழ்ந்ததை எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் என்.டி.ஆர் அப்பழுக்கற்றவர் என்றோ, தூய ஹிந்துத்துவ அரசியலைக் கைகொண்டார் என்றோ நான் சொல்லவில்லை. படத்திலும் அப்படிக் காட்டப்படவில்லை. தொடர்ந்து அனைத்து முற்போக்கு ஸூடோ செக்யூலர் கட்சித் தலைவர்களும் அவர்களது கொடிகளும் காட்டுப்படுகின்றன. இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் உதவியைப் பதிவு செய்தது மகிழ்ச்சி அளித்தது என்பதை மட்டுமே இங்கே சொல்கிறேன்.

ஜனாதிபதி முன்பு என்.டி.ஆர் பெரும்பான்மையை நிரூபித்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கொடுக்கும் அனைத்து தடங்கலையும், சந்திர பாபு நாயுடு எதிர்கொள்ளும் விதம், இன்றும் நம் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்வது, எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஏகப்பட்ட ‘முதல்’களை வழங்கியது ஆந்திராதான் போல.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காக எப்படியாவது கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாஸ்கர  ராவ் தரப்பு செய்யும் தூண்டல்கள் அட்டகாசம். என்.டி.ஆரை மோசமாகத் திட்டுவது, அவர் முன்பே வளையல்களை உடைப்பது, இதனால் என்.டி.ஆர் கட்சிக்காரர்கள் கோபம் கொண்டு சட்டசபையில் அமளிதுமளி ஏற்படுவது என நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இந்தக் காட்சிகளெல்லாம் படு சுவாரஸ்யம். தெலுங்கர்கள் இப்படத்தைக் கொண்டாடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இதே போன்று ஒரு படத்தை உருவாக்கலாம். திரைப்பட நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர் அரசியலிலும் இருந்தார் என்பதும், அப்போது அவர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்பதும் கூடுதல் சுவையுள்ள பரபரப்புக் காட்சிகள். எம்.ஜி.ஆரின் அரசியல் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கும் எம்ஜியாரின் ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வெல்வது அட்டகாசமான திரைத் தருணத்தைக் கொண்டுவரும். நடிக்க மோகன்லால் என்ற தலைசிறந்த நடிகரை ஏற்கெனவே ‘இருவர்’ படத்தில் மணிரத்னம் அடையாளம் காட்டிவிட்டார்.

Share

Comments Closed