என் டி ஆர்: கதாநாயகடு – என் டி ராமாவின் மகன் பாலகிருஷ்ணா என்டிஆரைப் போலவே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆரின் உடல்மொழியை ஓரளவுக்கு தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார் என்றாலும் ஆரம்பகால என் டி ஆராக இவர் நடிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. இவர் என்டிஆரைப் போலவே இருக்கிறார். ஆனால் நிஜ ஆரம்ப கால என் டி ஆர் அழகாக இருந்தார்! இவரை பார்க்க எரிச்சல்தான் வருகிறது.
பாலகிருஷ்ணா மீசையை எடுத்த பிறகு ஓரளவு என்டிஆரின் கெட்டப்பை நெருங்கினாலும், கிருஷ்ணன் போன்ற மேக்கப்பில் கொஞ்சம் ஒப்பேற்றினாலும், பெரும்பாலான காட்சிகளில் எவ்வித முகபாவனையும் இல்லாமல் அப்படியே சும்மா இருப்பது கடுப்பாகிறது. ஸ்ரீதேவியுடன் என் டி ஆர் ஆடுவது போன்ற காட்சிகளையெல்லாம் பாலகிருஷ்ணா சிறப்பாகவே செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆர் போல பாலகிருஷ்ணா நடனமாடும் காட்சிகள் அப்படியே அச்சு அசலாக இருக்கக் காரணம், இருவருக்குமே ஆட வராது என்பதாக இருக்கலாம். இதுபோன்று தன்னை இளமையாகக் காட்டும் காதல் சில்மிஷக் கொடூரங்களை அந்தக் கால சிவாஜிகணேசனும் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாகேஸ்வரராவும் ராஜ்குமாரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துவிட்டார்களோ? நாகேஸ்வரராவும் ராதிகாவும் ஆடும் ஒரு பாடல் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கிறது என்றாலும், சிவாஜி என் டி ஆர் அளவுக்குப் போயிருப்பாரா என்பது தெரியவில்லை.
இதுபோன்ற பயோ பிக்சர்ஸ் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எதை எந்த நோக்கத்தில் எடுக்கிறோம் என்பது முக்கியமானது. பாலகிருஷ்ணா, என் டி ஆரின் புகழையும், அவரது மகனான தனது புகழையும் இந்தப் படத்தின் மூலம் தனக்குப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கிறார் என்பது தெரியாமல் நான்தான் சிக்கிவிட்டேன் போல.
கடைசி 20 நிமிடங்கள், அதாவது அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போன்ற காட்சிகள், கொஞ்சம் பரவாயில்லை ரகம். எமர்ஜென்ஸியின்போது தனது படத்தின் சுருளை எடுக்க அந்த பஞ்சகச்ச வேட்டியை மடக்கிக்கொண்டு வரும் ஒரு காட்சி, பாலகிருஷ்ணா என் டி ஆரை நெருங்கிய காட்சிகளில் ஒன்று. என் டி ஆர் நடித்த பழைய படங்களில் இருந்து காட்சிகளை எவ்வித உயிர்ப்பும் இன்றி உருவாக்கி இருக்கிறார்கள். பழைய ஒரிஜினலைப் பார்த்துவிடமாட்டோமா என்றிருந்தது! படம் முழுக்க ஒரு அமெச்சூர்த்தனம் இருந்தது. நாடகம் போன்ற, நாடகத்தனமான காட்சிகள். இவற்றையெல்லாம் மீறி இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். நடிகையர் திலகம் படம் போலவே இந்தப் படத்திலும் மிகக் கொடூரமான பின்னணி இசை.
அரசியலுக்கு என் டி ஆர் வந்தது, ஆந்திர அரசியலில் மிக முக்கியமான திருப்பம். அதிலும் சந்திரபாபு நாயுடு அவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும், சிவபார்வதியுடனான என் டி ஆர் உறவும், இந்தச் சூழலில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் என் டி ஆர் பெரிய வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் என் டி ஆர் மரணமடைகிறார். இந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் வேறு ஒரு படமாகத்தான் வர வேண்டும். ஏனென்றால், தெலுகு தேசம் என்ற அறிவிப்புடன் இப்படம் நிறைவடைகிறது. அரசியல் நிகழ்வுகளின் படம் இந்தப் படத்தைவிட நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இத்திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. எம்ஜியார் பெயரில்லை, சிவாஜி கணேசன் பெயரில்லை, முத்துவேலர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் பெயர்! எமர்ஜென்ஸியில் அவர் பட்ட கஷ்டத்தைச் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. எந்த அளவுக்குப் பரப்புரை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்தத் திரைப்படத்தில் மிகவும் நன்றாக உருவாகி வந்தது, நாகேஸ்வரராவ் என் டி ஆர் இடையிலான உண்மையான ஆத்மார்த்தமான நட்பு மட்டுமே. நம் சிவாஜி கணேசன், எம்ஜியார் (தனித்தனியாக) பற்றிய படங்களையும் நாம் இப்படி இல்லாமல் நன்றாக உருவாக்க முடியும். நடிகராக அவர்களது வெற்றிகளில் அதீத கவனம் குவியாமல் திரைக்கதையில் பார்த்துக்கொள்வது நல்லது. அவர்கள் மனம் எதிர்கொண்ட அழுத்தத்தை மையமாக வைத்து, அதீத புகழ்ச்சிகளைக் கைவிட்டு, சரியான நடிகர்களைக் கொண்டு (இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சி மட்டுமே வந்தாலும் சந்திரபாபு நாயுடுவாக வரும் ராணா, நாகேஸ்வர ராவாக நடிக்கும் அவரது பேரன் சுமந்த் இவையெல்லாம் இதற்கு உதாரணம்) முன்னும் பின்னுமாகக் கதை பின்னிணால் சரியாக வரலாம் எனத் தோன்றுகிறது. இருவர் திரைப்படம் முழுமையான ஒரு படமில்லை என்றாலும், அதனளவில் அது எத்தனை அருமையான முதிர்ச்சியான முயற்சி என்று தெரிகிறது.
பின்குறிப்பு: இப்படத்தில் ஒரு புதுமை, வித்யா பாலன் என் டி ஆரின் மனைவியாக வருகிறார். இழுத்துப் போர்த்திக்கொண்டு, சில காட்சிகளில் முகம்கூடத் தெரியவில்லை!