Avengers: End game

அவெஞ்சர்ஸ் – எண்ட் கேம்

மிக ‘எளிமையான கதை’. ஒரே நொடியில் உலகின் மக்கள்தொகையில் பாதியை அழித்துவிட்ட தானோசை அழித்து, ஆறு இன்ஃபினிட்டி கற்களையும் மீளக் கண்டடைந்து, அழிந்தவர்களையும் அழிந்த சூப்பர் பவர்களையும் மீண்டும் உலகுக்குக் கொண்டு வர ஆயத்தமாகிறார்கள் ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ப்ளாக் விடோ, ஆண்ட் மேன், வார்மெஷின், கேப்டன் மார்வெல் போன்ற பல மிச்சமிருக்கும் சூப்பர் பவர்ஸ் எல்லாரும் சேர்ந்து, காலச் சக்கரத்தில் க்வாண்டம் தியரி மூலம் பயணிக்கிறார்கள். ஐயர்ன் மேனை ஐயர்ன்மேனே பார்க்கிறார். கேப்டன் அமெரிக்காவும் கேப்டன் அமெரிக்காவும் மோதுகிறார்கள். நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் மோதல். காலவிளையாட்டு அதன் உச்சத்தில். நிகழ்கால ப்ளாக் விடோ கடந்த காலத்தில் இறந்து போகிறார். நிகழ்கால நெபுலாவின் நினைவைக் கடந்தகால தானோஸ் படித்து, தன் இறுதிக்காலத்தைப் பார்த்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வருகிறார். அதற்குள் ஆறு இனிஃபினிட்டி கற்களையும் வைத்து ஹல்க் கடந்தகாலத்தில் இறந்த மனிதர்களை உயிர்ப்பிக்கிறார். மீண்டும் பெரும் சண்டை. அனைத்து சூப்பர் பவர்களும் திரும்ப வர, தானோஸ் கையில் கற்கள் கிடைக்காமல் இருக்க ஐயர்ன் மேன் தன் உயிரைத் தியாகம் செய்கிறார். கேப்டன் அமெரிக்கா மீண்டும் கற்களை வைக்கப் போய் வயதாகித் திரும்புகிறார். நிகழ்கால 5 நொடிகள் க்வாண்டம் தியரியிலான காலச் சக்கரத்தில் பல வருடங்கள்! அந்த வருடங்களில் அங்கேயே தன் துணையுடன் வாழ்கிறார். வயதான எதிர்கால நிகழ்காலத்தில் தன் கவசத்தை சாம்-இடம் ஒப்படைக்கிறார். இதையெல்லாம் மண்டையை முட்டி மோதி, என் பக்கத்தில் இருந்த என் பையனிடமும் பெண்ணிடமும் வெட்கத்தை விட்டுக் கேட்டுப் புரிந்துகொண்டவை. இந்தப் படம் வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே இப்படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போகவேண்டும் என்று உத்தரவாதம் வாங்கி இருந்தான் அபிராம். இப்படம் புரியவேண்டும் என்றால், இதற்கு முந்தைய பாகங்களைப் பார்க்கவேண்டும் என்று சொன்னதை நான் பீலா என்றே நினைத்தேன். ஆனால் அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கவே செய்கிறது. அப்படி இல்லை என்றால், என்னைப் போல் பக்கத்திலிருக்கும் பையன்களிடம் வெட்கப்படாமல் கேட்கத்தான் வேண்டியிருக்கும்.

கற்பனைக்கெட்டாத கதைப்பரப்பு. காலத்தை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள். இனிஃபினிட்டி வார் போல சண்டைகள் அதிகம் இல்லை. 3 மணி நேரத்தில் 20 நிமிடங்கள் சண்டை வந்தாலே அதிகபட்சம். ஆனால் அந்த இருபது நிமிடத்தையும் அசரடிக்கிறார்கள்.

தமிழில் இதுபோன்ற தொடர்ந்து கைத்தட்டு பெறும் படங்களைப் பார்க்கவே முடியாது. ரஜினி விஜய் அஜித் என யார் படங்களிலும் இது சாத்தியமில்லை. ஒவ்வொரு அவெஞ்சர் வரும்போதும், ஒவ்வொருமுறை அவர்களுக்கு சக்தி வரும்போது கைத்தட்டு காதைப் பிளக்கிறது. அதிலும் அந்த 20 நிமிடச் சண்டையில் இப்படித் தொடர்ச்சியாகக் கைத்தட்டை தமிழ்நாட்டில் எந்தப் படத்திலும் நீங்கள் பார்த்திருக்கமுடியாது.

கால விளையாட்டின் போதான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பழைய மார்வெல்ஸ் படங்கள் பார்த்திருந்தால் மிக நன்றாகப் புரியும். இல்லையென்றால் திருவிழாவில் ஆட்டைத் தொலைத்தவன் போலத்தான் விழிக்கவேண்டி இருக்கும். ஐயர்ன்மேனும் அவரது அப்பாவும் சந்திக்கும் இடங்கள், தோரும் அவரது அம்மாவும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் அட்டகாசம். இன்று நேற்று நாளை என்ற நம்மூர்ப் படத்தில் பார்த்த கற்பனையை அதன் உச்சத்துக்குச் சென்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், கற்பனை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும். இசை, கிராஃபிக்ஸ், கேமரா என ஒவ்வொன்றும் அற்புதம்.

மொத்தத்தில் ஒரு மிரட்டல்.

திருஷ்டிப் பொட்டு, தமிழில் வசனங்களும் விஜய் சேதுபதியின் கொடூரமான பின்னணிக் குரலும். தாங்கமுடியவில்லை. ஐயர்ன் மேன் இவராலேயே பாதி செத்தார், மீதி கதையிலும் செத்தார். நல்லவேளை செத்தார், இல்லையென்றால் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியைப் போட்டு நம்மை நடுங்க வைத்திருப்பார்கள்.

Share

Comments Closed