தினமலர் தேர்தல் களம்

தினமலர் தேர்தல் களத்தில் வெளியான கட்டுரைகள்:

நிரம்பாத வெற்றிடம் (கட்டுரை 1)

2019க்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் ஒட்டுமொத்த களமும் பரபரப்படைந்துள்ளது. முன்பெல்லாம் தேர்தல் நடக்கும் காலத்தில் மட்டுமே ஒருவிதப் படபடப்பு நிலவும். ஆனால், சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலம் இது. செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னெப்போதையுவிட மிகத் துரிதமாகச் செய்திகளைக் கொண்டு போகவேண்டிய கட்டாயத்தில் நிலவும் சூழல் இது. அதனால், தேர்தல் நடக்காதபோதும்கூட, எல்லா நாளுமே பரபரப்பாகவே கழிகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் அது ஒரு திருவிழா மனப்பான்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. இப்போக்கினால் பலமும் உள்ளது, பலவீனமும் உள்ளது. பரபரப்பையும் கண்ணை மறைக்கும் செய்திக் குவியல்களையும் வெறுப்புச் செய்திகளையும் புறம் தள்ளிவைத்துவிட்டே தேர்தல் செய்திகளை அணுகவேண்டி உள்ளது. அதீதச் செய்திகளே சாபமாகிவிட்ட ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இத்தேர்தல் மிகப் வித்தியாசமானது. கடந்த 30 வருடங்களாக தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் இத்தேர்தல் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மௌனமானது ஆகப்பெரிய ஆச்சரியமே. இதனாலேயே மிகப்பெரிய ஒரு வெற்றிடம் நிலவியது. தமிழகத்தின் அரசியல் போக்கை மிக மோசமாக்கியவை இந்த இருபெரும் கட்சிகளே என்று நினைப்பவர்கள், இந்த வெற்றிடம் ஒரு ஆக்கபூர்வமான அரசியலைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே வெற்றிடம் இப்போதும் நிலவுகிறது.

வெற்றிடத்தைப் போக்க, உறுதியான தலைவருடன் கூடிய வலுவான கட்சி ஒன்று வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் நிறைந்துள்ளது. பழைய கட்சிகளின் புதிய பதிப்புகளை மக்கள் ஏற்கவில்லை. ஒரே கட்சி இரண்டாக நான்காக உடைந்து புதிய கட்சியாக மலரும்போது மக்கள் சலிப்பில் அவற்றை நிராகரிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைத்துப் பழைய கட்சிகளையும் உறுதியோடு எதிர்க்கும் வலிமையான கட்சி இன்று வரை முகிழவில்லை. இதனால் இத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் எப்படிச் சிதறும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை.

இதுவரை தமிழகத் தேர்தல்களில் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் ஓர் ஆய்வைச் செய்து எத்தனை இடங்களில் எந்த எந்தக் கட்சிகள் வெல்லக்கூடும் என்று சொல்வதே பொதுவான நடைமுறை. இதை ஒட்டியே வெற்றி தோல்வி அமையும் என்பது நம்பிக்கை. ஆனால் இத்தேர்தலில் அந்தக் கணக்குகள் எடுபட வாய்ப்பில்லை.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்று தெரியாது. அக்கட்சியின் மரபான வாக்குகளில் எத்தனை சதவீதத்தை தினகரன் பிரிப்பார் என்பதைக் கணிக்கமுடியாது. ஆர்.கே நகர் தேர்தலைப் போலவே தமிழகம் முழுக்க நடக்க வாய்ப்பே இல்லை. அதேசமயம் ஆர்.கே நகர் தேர்தல் தந்த அதிர்ச்சியையும் மொத்தமாகப் புறக்கணிக்க முடியாது. ஜெயலலிதாவின் ஒன்றிணைந்த அதிமுக பெற்ற வாக்குகளை, இன்றைய அதிமுகவும் தினகரனின் அமமுகவும் எப்படிப் பிரிக்கும் என்பதே இந்த இரண்டு கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. இடையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்த தீபாவை மக்கள் மறந்துவிட்டார்கள் என்பதால் அவரை விட்டுவிடலாம்.

அதிமுக இப்படி இருக்கும்போது, திமுக மிகவும் பலமாக இருந்திருந்தால் தேர்தலில் அக்கட்சி பெரிய வெற்றியைச் சுலபமாகப் பெற்றிருக்கும். தொடக்கத்தில் அப்படி ஒரு நிலை இருக்கத்தான் செய்தது. ஆனால் ரஜினியின் வரவு அதைக் கொஞ்சம் முதலில் அசைத்துப் பார்த்தது. ஸ்டாலினிக்கு நிம்மதி தரும்படியாக, ரஜினி எப்போது தேர்தலில் பங்கெடுக்கப் போகிறார் என்பது ரஜினிகே கூட தெரியாத நிலையில், திமுக வெல்லும் வாய்ப்பு அப்படியே தொடர்ந்தது. தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளே ஸ்டாலினிக்குப் பெரிய பின்னடைவைத் தருகின்றன. ஒருவகையில் திமுகவினர் பிறருக்குச் செய்தவை அவர்களுக்கே திரும்ப வருகின்றன என்றே சொல்லவேண்டும். எப்படியோ ஸ்டாலின் வலிமையற்ற ஒரு தலைவர் என்ற கருத்து திமுக அல்லாதவர்களிடம் வெற்றிகரமாகப் பரப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில் கருணாநிதி இருந்தபோது திமுக பெற்ற வாக்குகளைத் திரும்பப் பெற்றாலே பெரிய விஷயம். அப்படிக் கிடைக்கும் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது போதாது. கூடுதல் வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரிக்காமல் வெல்லமுடியாது. திமுகவின் வாக்குகள் குறைந்தாலும் குறையலாம் என்ற கணிப்பையும் ஒதுக்கிவிடமுடியாது. இப்படியான சிக்கலில் உள்ளது திமுக.

கூட்டணி மூலம் இப்பிரச்சினையைச் சமாளிக்கமுடியும் என்று இரண்டு கட்சிகளுமே புரிந்துகொண்டுள்ளன. அதனால்தான் கூட்டணிக்கு இத்தனை முயற்சி. இதுவரை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இறங்காத அளவுக்குக் கூட்டணிக்காக இரண்டு கட்சிகளும் இறங்கிப் போய்ப் பேசின. அதிலும் அதிமுக இனி இழக்க ஒன்றுமில்லை என்ற முடிவோடு விடாமல் சென்று கூட்டணிக்காகப் பேசியது. எப்போதும் கூட்டணிப் பேரத்தை முதலில் துவங்கும் திமுக, அதைச் சரியாகக் கோட்டை விட்டுவிடும். இம்முறையும் அதுவே நடந்தது. பழம் நழுவிப் பக்கத்து டம்ளர் பாலில் விழுந்துவிட்டது. இந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தாங்கிக்கொள்ள முடியாத ஸ்டாலின், அதுவரை பாமகவிடம் திமுகவும் கூட்டணி பேசியது என்பதையெல்லாம் மறந்து, மிகக் கடுமையாக ராமதாஸைத் தாக்கிப் பேசினார். ஒரு அரசியல் தலைமை செய்யக்கூடாத தவறு இது. இதையே ஒரு படி மேலே போய், தேமுதிகவுக்கு துரைமுருகன் செய்ய, பிரேமலதா இன்னும் ஒரு பங்கு மேலே போய் தவறு செய்தார். கூட்டணித் தலைவர்களை எந்த எல்லையில் நிறுத்தவேண்டும் என்பதை ஜெயலலிதாவிடமிருந்து ஒவ்வொரு கட்சித் தலைமையும் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. கூட்டணிக்காக அதீதமாக ஒட்டிக்கொள்வது பிறகு வெட்டிக்கொள்வதும் எல்லாம் பழைய காலத்து வழி. கூட்டணி என்பதுகூட தன் கட்சியை வளர்க்கத்தான் என்ற நிதர்சனத்தை வெளிப்படையாகவே சொல்வதுதான் இன்றைய வழி. ஜெயலலிதா கூட்டணித் தலைவர்களை முடிந்தவரை அலட்சியம் செய்தார். அலட்சியம் செய்வதே ஜெயலலிதாவின் அணுகுமுறை. ஆனால் அவர்களோ மீண்டும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்கள். ஜெயலலிதா அளவுக்கு அலட்சியமும் இன்றி, கருணாநிதி போல அளவுக்கு மீறிய நட்பாகவும் இன்றி, இரண்டுக்கும் இடையில் இருக்கமுடியும் என்பதை உணர்வது அனைத்துக் கட்சிகளுக்கும் நல்லது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருணாநிதிக்குச் செய்தது என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் இதை உணரலாம்.

விஜய்காந்த்தின் உடல்நிலை இன்றிருக்கும் நிலையில் அக்கட்சியின் செல்வாக்கு, முன்பு அக்கட்சி பெற்ற வாக்குகளுக்கு இணையாக இருக்கமுடியும் என்று சொல்லமுடியாது. குறைந்துவரும் தன் கட்சியின் செல்வாக்கை அக்கட்சி புரிந்துகொண்டாலும், விட்டுக்கொடுத்துப் போக அக்கட்சியின் செயல்தலைமையால் முடியவில்லை. இதனால் அக்கட்சிக்குப் பின்னடைவுதான் ஏற்படும். ஜெயலலிதா போல இருக்க நீங்கள் ஜெயலலிதாவாக இருக்கவேண்டும் என்பதை பிரேமலதா புரிந்துகொள்வது அக்கட்சியின் எதிர்காலத்துக்கு, அப்படி ஒன்று இருந்தால், நல்லது.

கமல்ஹாசன் கட்சி யாருக்கான மாற்று என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. அவரது நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1% வாங்கு வாங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை நடத்துவதே அவரது நோக்கம் என்று தெரிகிறது. நல்லது செய்வதே நோக்கம், அதுவே கொள்கை என்பதையெல்லாம் திரைப்படங்களில் பார்த்துக் கை தட்டலாம். பொதுவில் அவை ஆழமற்ற பேச்சாகவே பார்க்கப்படும்.

அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இத்தேர்தல், ஒட்டுமொத்த இந்தியத் தேர்தலைப் போலவே, இந்திய ஆதரவுக்கும் இந்திய எதிர்ப்புக்கும் இடையே நிகழ்வதாகவே நான் பார்க்கிறேன். திமுக நேரடியான இந்திய எதிர்ப்புக் கட்சி அல்ல. அதேசமயம் அக்கட்சியின் ஒட்டுமொத்த கூட்டணியின் தோற்றம், அது ஒரு இந்திய எதிர்ப்புக் கூட்டணி என்பதாகவே அர்த்தம் தருகிறது. வெகு நீண்ட காலமாகவே திமுக தேசிய நீரோட்டத்தில்தான் இருக்கிறது. என்றாலும், தொடர்ச்சியாக அது இந்திய எதிர்ப்பு மனோபாவமுள்ள கட்சிகளுடனேயே தன் தோழமையை அமைத்தும் வந்திருக்கிறது. இன்றைய நிலையில், காங்கிரஸ் கட்சிகூட, பாஜகவை எதிர்க்கும் வேகத்தில், இந்திய எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதரவு தருவது போலப் பேசுகிறது. இதனால், இக்கூட்டணியின் இந்த நிறத்தைத் தவிர்க்க முடியாது. உண்மையில் இகட்சிகள் இந்திய எதிர்ப்பில் நம்பிக்கை இல்லாதவையாக இருக்கலாம். ஆனால் மக்களின் பார்வை இருமைக்குள் சிக்கும்போது, ஒரு பக்கம் தேசிய நோக்கத்தை ஆதரிக்கும் கூட்டணியாக பாஜக கூட்டணியையும், அதை எதிர்க்கும் கூட்டணியாக காங்கிரஸ் கூட்டணியையும் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

தமிழ்நாட்டுத் தேர்தலைப் பொருத்தவரை, இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடம் இன்னும் அப்படியே உள்ளது என்பதையே காட்டுகிறது. இருபெரும் திராவிடக் கட்சிகளின் அதீத ஆதிக்கம் குறைவதும் ஒருவகையில் நல்லதுதான். ஏதேனும் ஒரு தேசியக் கட்சி இங்கே பலம் பெறவேண்டியதும் முக்கியம். அது பாஜகவாக இருப்பது நல்லது என்பது என் பார்வை. இத்தேர்தலின் முடிவு தெரிந்த பின்னர்தான், எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்பது தெரியும்.

கூட்டணியை ஏற்பது (கட்டுரை 2)

ஜெயலலிதாவின் காலத்துக்கு முன்புவரை கூட்டணி என்பது, கூட்டணித் தலைவர்களுடனான நட்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி முதலில் ஏற்பட்டபோது, பிறகு ஏற்பட்டபோதும்கூட, அது பொருந்தக் கூட்டணி என்றே சொல்லப்பட்டது. அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது அது இயல்பான கூட்டணி என்று நம்பப்பட்டது. இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.

கூட்டணிகள் மாறுவதும், கூட்டணி குறித்த கருத்துகள் மாறுவதும், மாநில சிறு கட்சிகள் ஓரளவுக்கு வாக்குகள் வாங்கத் தொடங்கியதில் இருந்து இயல்பாகிப் போகின. பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு பிரதான கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது. தொடர்ந்து வெற்றி முகத்திலும் இருந்தது. கூட்டணி மாறும்போது ஏற்படும் குரல் மாறுபாடுகளை மிக எளிதில் பாமக கடந்தது. என்ன காரணம்? வெற்றிக் கூட்டணியாக அவை அமைந்ததுதான்.

தோல்விக் கூட்டணியாக அமைந்தபோதெல்லாம், கூட்டணி மாறும்போது, மிகக் கடுமையான காரணங்களைத் தேடி தேடி பாமக சொல்ல வேண்டி வந்தது. மீண்டும் அடுத்த கூட்டணியின்போது அதைவிடக் கடுமையான சாடல்களை, காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே பதில் சொல்லமுடியாத சிக்கலிலும் மாட்டிக்கொண்டது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதனை வேறு வகையில் கையாண்டார்கள்.

கருணாநிதி இதயத்தைப் பிழியும் வண்ணம் கட்டுரை எழுதுவார். கூட்டணி முறிந்தாலும், கொள்கை ரீதியாக அவர்களது நட்பு தேவை என்பதை கவனத்தில் வைத்திருப்பார். மீண்டும் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி எந்நேரத்திலும் ஏற்படக்கூடும் என்பது குறித்து அவருக்குச் சந்தேகமே இருந்தது இல்லை.

ஜெயலலிதா கையாண்டது இதற்கு முற்றிலும் எதிரான வகையில். கூட்டணிக்கும் முன்பும் பின்பும் கூட்டணியின் போதும் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி எதுவும் பேசமாட்டார். பாராட்டியோ திட்டியோ எதுவும் செய்யமாட்டார். அப்படி அவர் பாராட்டினால் அது கூட்டணிக் கட்சிகளுக்கு இனிய அதிர்ச்சி என்ற வகையில் மிக அபூர்வமாகவே இருக்கும். அதேபோல் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நட்பு என்ற ஒன்றே கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிரூபித்தவண்ணம் இருப்பார். கூட்டணிக்கு வரும் கட்சிகளைப் பொதுவில் துதிபாடுவது, புகழுரைப்பது என்ற எதுவும் இருக்காது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போதே அதிமுகவின் தொகுதிப் பட்டியலை வெளியிடுவார். இதற்குப் பின்னும் கூட்டணிக் கட்சிகள் அவரிடம் கூட்டணி வைத்ததன் காரணம், வெற்றி என்ற ஒற்றைச் சொல்லுக்காத்தான்.

வெற்றி கிடைக்காத சமயத்தில் கூட்டணிக் கட்சிகள் விலகும்போது ஜெயலலிதாவிடம் இருந்து அது குறித்த, மனதைப் பிசையும் அறிக்கைகள் எதுவும் இருக்காது. மறந்தும் கூட்டணித் தலைவர்களின் பெயரைக்கூட உச்சரித்துவிடமாட்டார். இந்த வகையில், மாநில சிறு கட்சிகளின் இடத்தை அவர்களுக்குக் காண்பித்தது ஜெயலலிதான். இது திமுகவுக்கும் சேர்ந்தே உதவியது என்றே சொல்லவேண்டும். அப்படிக் கூட்டணி இல்லாமலும் அதிமுக வென்றதில், ஜெயலலிதாவின் அதிர்ஷ்டத்துக்கும் ஒரு பங்கு இருந்தது.

முன்பெல்லாம் கூட்டணி என்ற ஒன்று அமைந்தால், அனைத்துக் கூட்டணித் தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவது முக்கியமான ஒன்றாக அமையும். ஜெயலலிதா இதையும் புறக்கணித்தார். வெற்றிக் கூட்டணியாக அமைந்துவிடும்போது, இதெல்லாம் மறக்கப்பட்டுவிடும். தோல்விக் கூட்டணியாக அமைந்தால், இது முக்கியக் காரணமாக இருக்கும்.

கூட்டணி அமைப்பது போலவே முக்கியமானது அதனை எடுத்துச் செல்வது. ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது அதனை ஏற்றுக்கொள்வது. 2004ல் ரஜினி, அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தார். எந்த ஒரு இடத்திலும் ஜெயலலிதா இதைக் குறிப்பிடவே இல்லை. அதிமுகவினரும் அதிகம் இதைப் பற்றிப் பேசவில்லை. ரஜினியும் ஆதரவுக்குப் பின்பு அமைதியானார். அந்தத் தேர்தலில் இக்கூட்டணி தோல்வியுற்றது.

அப்போது சோ சொன்ன கருத்து முக்கியமானது. ஆதரவைப் பெற்றுக்கொள்வதும், அதனைப் பரப்புவதும், ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது என்றார். இது நடக்காமல் ஆதரவின் அடுத்த கட்டம் நடக்காது. ரஜினியைக் காப்பாற்ற சோ இக்கருத்தைச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் அதனளவில் இக்கருத்து முக்கியமானது.

இன்று திமுக எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. பாமக, தேமுதிக அதிமுக கூட்டணி அமைந்துவிட்டது. திமுக கூட்டணி கொள்கை ரீதியாக, ஹிந்து மதத்தை எதிர்க்கும் கூட்டணி என்றாகிவிட்டது. திருமாவளவன் தெளிவாகவே சனாதனத்தை எதிர்க்கும் கூட்டணி என்று சொல்லிவிட்டார். சனாதனம் என்பது ஹிந்து தர்மம்தான். எனவே இவர்களுக்குக் கூட்டணித் தலைவர்களுடன் பேசுவதில் சிக்கல் இல்லை.

அதிமுக கூட்டணிக்கு அந்தச் சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்தச் சிக்கலை இவர்கள் எளிதாகக் கடந்துவிடமுடியும். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி, எவ்வித ஈகோவும் இன்றிப் பேசுவதால், கூட்டணி மாயம் நிகழும் வாய்ப்பு உண்டு. அதிமுக கூட்டணியின் தலைவர்கள் மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பது, திமுகவுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு. இதனை அதிமுக பயன்படுத்திக்கொள்ள, கூட்டணியைப் பெற்றுக்கொள்வதில், பரப்புவதில் முனையவேண்டும். அதுதான் முக்கியமானது. முதல் ஒன்றிரண்டு கூட்டங்களில் இந்த மாயம் நிகழத் துவங்கிவிடும். பழைய சாடல்கள் மறக்கப்பட்டுவிடும். தொடர்ந்து ஒரே மேடையில் கூட்டணித் தலைவர்கள் பேசும்போது, அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். இல்லையென்றால் பெரிய அபாயத்தையே சந்திக்கும்.

நன்றி: தினமலர்

Share

Comments Closed