எஸ். விஜய் குமாரின் சிலைத் திருடன்

சிலைத் திருடன் – எஸ். விஜய் குமார் – கிழக்கு பதிப்பகம், விலை ரூ 250

தி ஐடல் தீஃப் என்று ஆங்கிலத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம், பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. நான் வாசித்த புத்தகங்களில் எப்போதும் எனக்குப் பிடித்த ஒன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கு. காரணம், அதன் பரபரப்பு, அதே சமயம் சற்றும் குறையாத தரம் மற்றும் அதிலிருக்கும் நம்மை உறைய வைக்கும் உண்மை. அதற்கு இணையான புத்தகம் சிலைத் திருடன்.

நம் நாட்டில் நிகழும் பெரும்பாலான, அதிகாரிகள் மட்டத்திலான ஊழல்களுக்குப் பெரிய காரணம், லஞ்சமும் அலட்சியமும். ஒரு பெரிய அரசியல்வாதியின் படுகொலை முதல் சிலைத் திருட்டு வரை, அது நடந்து முடிந்தபின்பு நமக்குத் தோன்றுவது, இதை எளிதாகத் தவிர்த்திருக்கலாமோ என்பதுதான். சிலைத் திருட்டிலும் அப்படியே. இதைக்கூடவா பார்த்திருக்கமாட்டார்கள், இதைக்கூடவா யோசித்திருக்க மாட்டார்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பார்த்துப் பதறிப் போகிறோம்.

நமது பிரச்சினை, எதைப் பற்றியும் நம்மிடம் ஒரு தகவல் திரட்டு இல்லாதது. நம் பாரம்பரியத்தைக் காப்பதிலிருந்து நம்மை நாமே தெரிந்துகொள்ள இதுபோன்ற தகவல் களஞ்சியம் அவசியம். ஆனால் இது குறித்த அக்கறை மக்களுக்கும் இல்லை, அரசுக்கும் இல்லை. மெல்ல மெல்ல இப்போதுதான் இது குறித்து யோசிக்கிறோம், செயல்படுகிறோம், முக்கியமாக இணையக் காலத்துக்குப் பிறகு.

எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது… இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், எந்தச் சிலைகள் கடத்தப்பட்டன என்று நமக்குத் தெரியவே சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகின்றன. சிலை கடத்தப்பட்ட விவரமே தெரியாமல் அக்கோவிலுக்கு பாதுகாப்புக் கதவு செய்து பூட்டுகிறார்கள் அதிகாரிகள். களவு போன சிலையை மீட்டெடுக்க அச்சிலை குறித்த தகவல்களும் ஆவணங்களும் நம்மிடம் இல்லை. பின் எப்படி சிலைத் திருட்டைத் தடுப்பது, சிலைகளை மீட்பது?

1972க்கு முன்னர் இச்சிலைகள் விற்கப்பட்டது போன்ற போலி ஆவணங்களை உருவாக்கிக் கடத்துகிறார்கள். காரணம் 1972ல் உருவாக்கப்படும் பன்னாட்டுச் சட்டம் சிலைகள் உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களின் விற்பனையில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறது. சுபாஷ் கபூர் மிக புத்திசாலித்தனமாகத் தனது எல்லாத் திறமைகளையும் இறக்கி சிலைகளைக் கடத்திக்கொண்டே இருக்கிறார். சலிப்பதே இல்லை. ஏனென்றால், இங்கே அவருக்கு உதவும் சிறு திருடர்களுக்கு சில லட்சங்களில் பணம் தந்துவிட்டு, பன்னாட்டு அரங்கில் பல கோடிகளில் பணம் பெறுகிறார்.

உண்மையில் இச்சிலைகளுக்கு இத்தனை கோடியெல்லாம் தருவார்களா என்றெல்லாம் முன்பு யோசித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. கோடிகளில் புரள்கிறது பணம். விஜய் மல்லையா போன்றவர்களை இச்சமூகம் கண்டுகொள்கிறது, ஆனால் அதற்கு இணையான இது போன்ற சிலைத் திருடர்களை நமக்குத் தெரிவதில்லை என்பதோடு அவர்களுக்கு மிகப் பெரிய கௌரவத்தையும் மரியாதையையும் தருகிறோம் என்னும் விஜய் குமாரின் ஆதங்கம் நியாயமானது.

சில கொடுமைகளில் அதீத கொடுமைகளையும் இப்புத்தகத்தில் படிக்கலாம். தன் மகளின் நினைவாகச் சுடுமண் சிற்பத்தை ஒரு அருங்காட்சியகத்துக்குத் தானமாகத் தருகிறார் சுபாஷ் கபூர்! இன்னொரு கொடுமை, சுபாஷ் கபூரும் அவரது தோழியும் பிரிந்த பின்பு, சிலைகள் யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றத்தில் மோதிக்கொள்வது. இருவருக்குமே சிலைகள் சொந்தமல்ல, இந்தியாவுக்குச் சொந்தம்! கைது செய்யப்பட்ட பின்பும் சிலைகளை எப்படி எங்கே விற்கவேண்டும், மாற்றவேண்டும் என்ற குறிப்புகளை எல்லாம் சிறைக்குள் இருந்தே அனுப்புகிறார் சுபாஷ் கபூர்! நம் சட்டத்தின் கடுமையும் அதிகாரிகளின் புத்திசாலித்தனமும் இப்படி இருக்குமானால் நாம் என்றைக்கும் எதையும் தடுத்துவிடமுடியாது.

இண்டி என்று பெயர் சூட்டப்படும் அந்த அதிகாரி இந்தியர்களால் வணங்கத்தக்கவர். அத்தனை அருங்காட்சியகத்துடனும் இண்டியும், நம் விஜய்குமாரும் அவரது குழுவும் போராடும் அத்தியாயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்கவை. அதேபோல் நம் ஊர் காவல்துறை அதிகாரி செல்வராஜும் போற்றத் தக்கவர். சவுக்கு சங்கரின் ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகத்தைப் படித்தபோது திலகவதி ஐபிஎஸ் குறித்து ஏற்பட்ட ஏமாற்றம், இப்புத்தகத்தின் மூலம் கொஞ்சம் விலகியது என்றே சொல்லவேண்டும்.

சிலைத் திருட்டு வகையில் இது முதல் புத்தகம் என்ற வகையில் இப்புத்தகம் பல இருட்டு இடங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறது. தன் வாழ்வையே அர்பணித்தால்தான் இப்படி ஒரு புத்தகம் சாத்தியம். அதுவும் இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும் அற்ற ஒரு நாட்டில் இது போன்ற ‘உலகளாவிய’ விஷயத்தை எதிர்ப்பது பெரிய சவால். அதை எதிர்கொண்டு மிகத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் விஜய் குமார். அதைவிட முக்கியம் இவரது முயற்சியில் நம் தெய்வங்கள் தனக்கான இடங்களில் மீண்டும் ஆராதனை பெறத் துவங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்யப்படும் பூஜையின் புண்ணியம் என்றைக்கும் விஜய் குமாரின் சந்ததிக்கும் கிடைக்கு என்பதில் ஐயமில்லை.

அரசியல்வாதிகளின் ஊழல்களைவிட அஞ்சத்தக்கது அதிகாரிகளின் ஊழல் என்பது என் பொதுவான எண்ணம். அவர்களது அலட்சியப் போக்கே நம்மை மிக நேரடியாக உடனே தாக்கும் வல்லமை கொண்டது. இப்புத்தகத்தில் ஒரு வரி வருகிறது. ஒரு அதிகாரி மூன்று முறை தன் அறையைவிட்டு வெளியே வருகிறார். ஒரு தடவை டீ குடிக்க, இரண்டு தடவை தம் அடிக்க. அவர் அறைக்குள் இருக்கும்போது அவரைச் சுற்றித்தான் சிலைகள் கடத்தப்படுகின்றன. அவரே மௌன சாட்சி மற்றும் உதவியாளர்!

தமிழ் மொழிபெயர்ப்பை மிகக் குறுகிய காலத்தில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார் பி.ஆர். மகாதேவன். எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர்களில் இவரும் ஒருவர். (இன்னொரு முக்கியமானவர் கிருஷ்ணன் சுப்பிரமணியன்.) மிகக் கடினமான நூல்களைக்கூட அழகாக மொழிபெயர்ப்பவர் பி.ஆர். மகாதேவன். இந்நூல் ஆங்கிலத்திலேயே மிக சரளமான நடையில் எழுதப்பட்ட ஒன்று. கூடுதலாக, விஷயத்தைப் பொருத்தவரையில் தமிழின் மண்வாசனை இயல்பாகவே இருந்தது. இதனால் அதகளம் செய்துவிட்டார் மகாதேவன். மகாதேவனின் மொழிபெயர்ப்பில் ‘அழகிய மரம்’ அவரது வாழ்நாள் சாதனையாக மதிப்பிடப்படும் என்று ஏற்கெனவே நான் எழுதி இருக்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பி.ஆர். மகாதேவன் நிச்சயம் நினைவுகூரப்படுவார். இந்த நூலில் மிகச் சில திருத்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த பதிப்பில் அவர் சரி செய்வார் என்று நம்புகிறேன்.

எஸ். விஜய் குமாருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பி.ஆர். மகாதேவனுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டியிருக்கிறது. நன்றியும் வாழ்த்தும்.

பின்குறிப்பு: நாத்திகம் வேறு, பாரம்பரியக் கலைச் சின்னங்கள் வேறு. இச்சிலைகள் என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டபோது அதன் பின்னே இருந்தது பக்தியும் கலையும்தான். இன்று பக்தியைக் கைவிட்டிருப்பதுதான் நாம் நம் கலையையும் மறப்பதற்கான வழி என்றாகிவிட்டது என்றே கருதுகிறேன். இத்தனை பல்லாயிரம் ஆண்டுகளாக இச்சிலைகள் காப்பாற்றப்பட்டது பக்தியை முன்னிட்டே ஒழிய கலையைப் பாதுகாக்க வேண்டிய உந்துதலில் அல்ல. பக்தி அழிக்கப்படும்போது இந்த உந்துதல் நிச்சயம் குறையும். பக்தியையும் கலையையும் பிரிப்பதுகூட நமக்கு என்றைக்குமே பிரச்சினைதான். சிலர் இதை வேண்டுமென்றே செய்கிறார்கள். சிலர் நிஜமாகவே கலையை ஆராதிப்பதற்காகச் செய்கிறார்கள். ஆனால் இப்போக்கு நமக்கு ஆபத்தானதுதான்.

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939491.html

Share

Comments Closed