ரஞ்சித் முழுமையான அரசியல்வாதியாகவே மாறிக்கொண்டிருக்கிறார். நல்லது. திரைப்படங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, வெளிப்படையாகத் தெரியாத வரை மட்டுமே வேகும் பருப்பு. அதற்குள் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்நெருப்பு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாது. நீர்த்துப் போகத் துவங்கும். அந்நிலையில் முழுமையாக அரசியலுக்குள் போகவேண்டி இருக்கும். படைப்பாளியின் சமூகத்துடனான உறவு என்பது ஒரே மட்டத்தில் கண்கூடாகப் என்பது மாறி, மேலிருந்து கீழே நோக்குவது என்றாகும். அப்போது உயிரைத் தொடும் திரைப்படங்களுக்குப் பதிலாக அறிவுரை சொல்லும், நியாயம் கேட்கும் படங்கள் என்றாகும். அவை முழுமையாக ஏற்கப்படாதபோது அரசியலே முழுப் புகலிடம். ஏனென்றால் அடிப்படையில் திரைப்படம் என்பது ஒரு வணிகம். அதை நீங்கள் எதற்குப் பயன்படுத்தினாலும் அதில் வணிகம் என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.
தனித் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியல் சாதிக் கட்சிகள் போட்டியிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்க இது மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகக் கஷ்டமானது. இங்கிருக்கும் பட்டியல் சாதிக் கட்சிகளுக்கு இது தெரியாததல்ல. இது தெரிந்தும் அவர்கள் தனியாகவே இயங்குகிறார்கள், இயங்க விரும்புகிறார்கள். காரணம், அரசியலில் அவர்கள் இருப்பு.
ரஞ்சித் சொன்னதை திருமாவளவன் மறுத்திருக்கிறார் என்று பார்த்தேன். திருமாவளவன் மறுத்திருப்பது சரியான ஒன்றே. இதற்குக் காரணம், தனது அரசியலுக்கு ரஞ்சித்தின் செய்கை போட்டியாக வந்துவிடும் என்று நினைப்பதாலும் இருக்கலாம். அல்லது தனது அனுபவத்தில் இது சரிப்பட்டு வராது என்று புரிந்துகொண்டதாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரது முடிவு சரியானதே. ரஞ்சித், ஒரு வேகத்திலும் அரசியலுக்குள்ளே களத்தில் நின்று போட்டியிடுவது தரக்கூடிய சிக்கல் குறித்த அனுபவமின்மையாலும் பேசுகிறார்.
பட்டியல் சாதி மக்களின் ஒட்டுமொத்த வாக்கையே பட்டியல் சாதிக் கட்சிகளால் பெறமுடியாது என்னும் நிதர்சனத்தில் இருந்து துவங்கவேண்டும். அப்படியானால், பட்டியல்சாதிக் கட்சிகளைப் போலவே தத்தம் சாதிகளின்மீதுள்ள பிடிப்பால் தம் சாதிக் கட்சிக்கும் தம் சாதியினருக்கும் வாக்களிக்க விரும்பும் மக்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி? சாதி பார்த்து வாக்களிக்கக்கூடாது என்பவர்கள் பட்டியல் சாதிக்கு வாக்களிக்கலாம். ஆனாலும் மற்ற கட்சிகளைவிட்டுவிட்டு அவர்கள் பட்டியல் சாதிக்கட்சிகளின் பொது வாக்காளருக்குத்தான் வாக்களிப்பார் என்று சொல்லமுடியாது. தொடர்ச்சியாக மற்ற சாதியினர் மீதான விமர்சனங்களை வைத்துவிட்டு (ஒருவேளை அது மிக நியாயமானது என்றபோதும்) வாக்கரசியல் என்று வந்ததும் மற்றசாதியினர் அதை மறந்துவிட்டு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ரஞ்சித்தின் வேகத்தில் இதெல்லாம் அவருக்கு எளிதாக வெல்லப்படக்கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது. திருமாவளவனின் அரசியல் அனுபவத்தில் இதைமீறித் தனியே நின்று வெற்றி பெறுவது அத்தனை எளிதானதல்ல என்று தோன்றுகிறது.
கூடவே ரஞ்சித், அம்பேத்கரை ஆர் எஸ் எஸ் சொந்தம் கொண்டாடவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். நியாயமாக இப்படிச் சொல்லவேண்டும். இதை அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்திலேயே சொல்லிவிட்டார். சொந்தம் கொண்டாட ஒருவேளை முடியுமென்றால் ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்பால்தான் முடியும். நிச்சயம் மற்ற மதங்களால் முடியாது. ஹிந்து மதம் / அமைப்புகளுடனாவது அம்பேத்கர் தொடர்ச்சியான விவாதத்தில் இருந்தார். எனவே ஆர் எஸ் எஸ்ஸாவது உரிமை கொள்ளமுடியும் என்பதுதான் சரி. மற்ற மதத்தினரே அம்பேத்கரைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது ஹிந்து அமைப்புகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அது ரஞ்சித் போன்றவர்களைக் கலவரப்படுத்தும்போது, கோபப்படுத்தும்போது, அது மிகச்சரியானது என்பதையே காட்டுகிறது.
செய்தி: https://tamil.news18.com/news/tamil-nadu/politics-should-be-dealt-accordingly-thirumavalavan-replies-to-pa-ranjith-77289.html
ரஞ்சித் பேசிய வீடியோ: https://youtu.be/844Vu3F1Z7E?t=685