Rustom (Hindi)

ரஸ்டம் (ஹிந்தி)

(ருஸ்தம் என்பதே சரியான உச்சரிப்பு என்று சொன்ன நண்பர்களுக்கு நன்றி.)

ஒரு திரைப்படமாக மட்டும் இந்தப் படத்தைப் பார்த்தபோது அது ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. இந்தப் படத்தை ஏன் பார்த்தேன் என்றால், அப்படத்தின் பை-லைன்: மூன்று குண்டுகள் இந்தியாவை உலுக்கிய கதை என்று இருந்ததால்தான். மொத்தத் திரைப்படத்தையும் பார்த்து முடித்தபோது இது ஏன் இந்தியாவை உலுக்கி இருக்கவேண்டும் என்று தேடிப் படித்ததில் – நிஜமாகவே உலுக்கத்தான் செய்தது. முதலிலேயே இவற்றையெல்லாம் படித்துவிட்டுப் பார்த்திருந்தால் இப்படம் வேறொரு பரிமாணத்தில் பார்க்கக் கிடைத்திருக்கலாம். ஆனால் எதையும் வாசிக்காமல் படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி படத்தைப் பார்த்துவிட்டு, தேடிப் பிடித்து வாசித்தேன்.

அனைத்து முன்னணி ஆங்கில இதழ்களும் இந்த வழக்கைப் பற்றி மிக விரிவாக எழுதி உள்ளன. சின்ன சின்ன விவரங்கள்கூட சுவாரஸ்யமானதாகவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் உள்ளன. அத்தனையையும் இந்தப் படத்தில் ஓரளவு நியாயமாகவே கையாண்டிருக்கிறார்கள். இரண்டு ஜாதிக்குரிய பிரச்சினைகளை மட்டும் அணுகாமல் விட்டுவிட்டார்கள். பார்ஸி சமூகத்தின் ஆதரவை மட்டும் காட்டியவர்கள், சிந்தி சமூகத்தின் கருத்தைக் காட்டியதாகத் தெரியவில்லை. நுணுக்கமான சித்திரிப்புகள் மூலம் செய்திருந்தார்களா என்பது எனக்குப் பிடிபடவில்லை. ஒருவேளை, இப்படம் முடிவடையும் தறுவாயில் தொடங்கும் வரலாற்றில்தான் சிந்தி சமூகத்தின் பிரச்சினை தொடங்கி இருக்கலாம்.

கமாண்டர் கவாஸ் மேனக்ஷா நானாவதியின் மனைவி சில்வியா, உண்மையில் இங்கிலாந்துக்காரர். இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இவருக்கு உண்டு. திரைப்படத்தில் இதையெல்லாம் விட்டுவிட்டார்கள். அதிகம் சிக்கல் இல்லாமல் மிக நேரடியாக, ஹீரோ நல்லவர், வில்லன் கெட்டவன் என்று காண்பிக்கவும் சில்வியாவின் திரைப்பட கதாபாத்திரமான சிந்தியாவுக்குக் கொஞ்சம் கருணைப்பார்வையைக் கொண்டு வரவும் ஏற்றவாக்கில் திரைக்கதை அமைத்துவிட்டார்கள். இது மட்டுமே படத்தில் கற்பனை, இதுவே மைனஸ் பாய்ண்ட்டும் கூட. கமாண்டர் சுட்டுக் கொல்ல ஒரு இந்தியப் பற்று ரீதியிலான காரணம் ஒன்றைக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படம் என்ற அளவில் கூட இது தேவையில்லை என்றே நினைக்கிறேன். இது இல்லாமலேயே இத்திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஈர்ப்பை உண்டாக்கவே செய்திருக்கும். 1960களில் நடக்கும் இந்த வழக்கு, அந்தக் காலகட்டத்தைக் கண்முன் கொண்டு வரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

சிந்தியாவின் திருமணத்துக்கு வெளியிலான தொடர்பை கமாண்டர் கண்டுபிடிக்கிறார். ஆனால் உண்மை வாழ்க்கையில், தன்னால் மறைக்கமுடியாது என்று வெளிப்படையாகவே சில்வியா சொல்லி இருக்கிறார். பிரேம் அஹுஜா தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், சம்மதம் தெரிவித்திருந்தால் கமாண்டரை விவாகரத்து செய்துவிட்டுத் திருமணம் செய்துகொண்டிருப்பார் என்றும் தெரிகிறது. கமாண்டர் தற்காப்புக்காகக் கொன்றார் என்று ஜூரி பெரும்பான்மையாகத் தீர்ப்பளிக்கிறது. திரைப்படத்தில் பார்த்தபோது இதை எப்படி நம்பமுடியும் என்று யோசித்த எனக்கு, அப்படித்தான் உண்மையில் நடந்தது என்று அறிந்தபோது, சிரித்துக்கொள்ளவே முடிந்தது.

சுட்டுக்கொன்றுவிட்டுச் சரணடையும் கமாண்டரைக் காப்பாற்ற ஒரே வழி, இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை அல்ல என்று நிரூபிப்பது. ‘ஒரு இரவு படுத்துவிட்டால் உன் மனைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டுமா’ என்று பிரேம் அஹுஜா கேட்டதால் கொன்றதாகச் சொல்லப்படும் காரணத்தை ஜூரி ஏற்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்தில் கமாண்டருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. உச்ச நீதி மன்றம் அதை உறுதி செய்கிறது.

ஜூரியின் முடிவில் விடுதலையாகும் கமாண்டர் தன் மனைவியுடன் சுவிஸ்ஸில் குடியேறுவதோடு திரைப்படம் முடிவடைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவங்கள் அதற்குப்பிறகுதான் விறுவிறுப்படைந்திருக்கின்றன.

மக்கள் மத்தியில் கமாண்டருக்கு ஆதரவு பெருகிறது. அவர் செய்தது சரிதான் என்று ஒரு தரப்பு உருவாகி வர ப்ளிட்ஸ் பத்திரிகை தீவிரமாகச் செயல்படுகிறது. கமாண்டர் ராமன், சில்வியா சீதை, அஹுஜா சீதாவைக் கவர்ந்த ராவணன். மேலும் அஹுஜா ஒரு ப்ளே பாய். இப்படிச் செய்திகளை மிகத் தெளிவாகப் பரப்புகிறது பத்திரிகை. 25 பைசா மதிப்புள்ள பத்திரிகையை 2 ரூ கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். தெருவில் அஹுஜாவின் டவலும் நானாவதியின் பிஸ்டலும் விற்கப்படும் அளவுக்கு வழக்கு பிரபலமாகிறது. ஜூரியின் உறுப்பினர்களும் இப்பத்திரிகையின் கருத்தையே தங்கள் கருத்தாக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அப்பத்திரிகை தொடர்ச்சியாக இது தொடர்பான செய்திகளை வெளியிடுகிறது. பின்னர் ஜூரி முறையே ஒழிக்கப்பட இவ்வழக்கு ஒரு முக்கியமான காரணமாகிறது.

பார்ஸி சமூகத்தினர் பங்கேற்கும் ஒரு ஊர்வலத்தை பத்திரிகை நடத்துகிறது, கமாண்டருக்கு ஆதரவாக. கமாண்டர் விடுதலை செய்யப்படக்கூடாது என்கிறது சிந்தி சமூகம். விஜயலக்ஷ்மி பண்டிட் (நேருவின் சகோதரி) கவர்னர். சிந்தி சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு வியாபாரிக்கும் கமாண்டருக்கும் மன்னிப்பு தந்து இப்பிரச்சினையை புத்திசாலித்தனமாக (!) கையாளுகிறார்.

இதற்குப் பின் சில்வியா, தன் கணவர் கமாண்டர் நானாவதியுடனும் தன் குழந்தைகளுடனும் கனடா செல்கிறார். பின்னர் பொது உலகத்துடன் தொடர்பே இல்லை. 2003ல் கமாண்டர் மரணமடைகிறார்.

சில்வியா ஆங்கிலேயர் என்பதை வைத்து இதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது. அவர் இந்தியராக இருந்தால் ஒரு இந்திய மனம் இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதை யோசிக்கவே மலைப்பாகத்தான் இருக்கிறது. இத்திரைப்படம் ஒரு கற்பனையான சந்தோஷத்தைத் தரவும் செய்கிறது.

திரைப்படத்துக்குப் பின்னான தேடல் ஒரு திரைப்படத்தைவிட சுவாரஸ்யம் மிகுந்ததாக இருந்தது ஆச்சரியம். இந்த சுவாரஸ்யம்தான் இத்திரைப்படத்தைக் கூட, படம் பார்த்த பின்பு, பிடித்த ஒன்றாக மாற்றுகிறது.

குளித்துவிட்டு வெளியில் வரும் பிரேம் அஹுஜாவைக் கொன்றிருந்தால் எப்படி டவல் கொஞ்சம் கூட அவிழவில்லை என்ற கேள்வியின்மூலம் கமாண்டருக்குத் தண்டனையை உறுதி செய்யக் காரணமாக இருந்தவர் ராம் ஜெத்மலானி. இவரது வாழ்க்கையின் வெற்றிகரமான துவக்கப்புள்ளி இந்த வழக்கு என்கின்றன பல பத்திரிகைகள். இந்த டவல் தொடர்பான கேள்விக்குச் சரியான பதிலைத் திரைப்படத்தில் இயக்குநர் அளிக்கவில்லை. அதை அப்படியே விட்டிருக்கிறார். அது ஏன் என்று படம் பார்த்தபோது உறுத்தியது. ஆனால் வரலாற்றில் இந்த டவலின் இடம் இதுதான் என்று அறிந்தபோது, இயக்குநர் தெளிவாகவே இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.

உண்மை வரலாற்றில் சில்வியா விரும்பியே அஹுஜாவுடன் உறவு கொண்டிருக்கிறார். தன் கணவர் தன்னைவிட்டு பல நாள்கள் பிரிந்து கப்பலில் சென்றுவிடுவதால் ஏற்படும் தனிமையில் அவர் இந்த முடிவுக்கு வருகிறார். அஹுஜா தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதை அறிந்தே அவர் விலகுகிறார். திரைப்படத்தில் அது சரியாகப் படமாக்கப்பட்டுள்ளது என்றாலும், பிறகு இந்திய மனங்களை திருப்திபடுத்துவதற்காக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. விக்ரம் மஹிஜா (அஹுஜா என்ற நிஜத்தின் திரைப்படப் பாத்திரம்) கமாண்டரைப் பழி வாங்க இப்படி திட்டம் தீட்டினார் என்று பின்னால் காட்டப்படுகிறது.

*

வரலாற்றை ஒட்டிய திரைப்படம் ஒன்று தரும் சுவாரஸ்யம் எல்லையற்றது. தல்வார் திரைப்படம் சிறந்த உதாரணம். இத்திரைப்படத்தை தல்வார் திரைப்படத்தின் மேன்மையுடன் ஒப்பிட முடியாது என்றாலும், உண்மையிலிருந்து கொஞ்சம் மட்டுமே விலகி ஓரளவு நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். இலியானா சரியான தேர்வு. அக்ஷய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான விருதெல்லாம் அராஜகம்.

தமிழில் இதுபோன்ற வரலாற்றை ஒட்டிய திரைப்படங்கள் வருவதே இல்லை. ஆனால் ஹிந்தியில் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். எமர்ஜென்ஸி, மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம், தினகரன் நாளிதழில் வேலை செய்த இரண்டு பேர் எரிக்கப்பட்டது, வாச்சாத்தி, கீழ்வெண்மணி, திராவிட இயக்கத்தின் அரசியல், ஈழப் பிரச்சினை என எதையும் நாம் தொடவே இல்லை. எங்காவது ஒரு வசனமாகவோ அல்லது ஒரு காதல் திரைப்படத்தில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு காட்சியாகவோ மட்டுமே வைக்கிறோம். அரசியல் திரைப்படமாக எடுப்பதே இல்லை. நம் ஆட்சியாளர்கள் எடுக்கவிடுவதும் இல்லை. நாம் பார்ப்பதும் இல்லை. இதில் யாரைக் குறை சொல்லி என்ன செய்ய? மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவற்றையெல்லாம் பார்க்கும்போது பெருமூச்சு விடத்தான் வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று இதைக் கொஞ்சம் முயன்றிருக்கிறது. ஆனாலும் முழுமையாகக் கைகூடவில்லை. வணிக ரீதியான வெற்றிக்காகப் பலியிடப்பட்டுவிட்டது. தமிழில் எல்லாப் படங்களுக்குமே இந்த அவலம் தவறாமல் நேர்ந்துவிடுகிறது. தமிழ்த் திரைப்பட உலகம் இதிலிருந்து விரைவில் மீளும் என்று நம்புவோம்.

பின்குறிப்பு: ரஸ்டம் திரைப்படம் பார்த்துவிட்டு, கூகிள் தேடிப் படித்த கட்டுரைகள், பேட்டிகளின் வழியாக எனக்குத் தெரிந்தவற்றை எழுதி இருக்கிறேன். மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் சொல்லுங்கள். நன்றி.

Share

Comments Closed