நேற்றைய தி ஹிந்துவில் வெளியாகி இருந்த நவின் பாலியின் பேட்டிக்குப் பின்னர்தான் அவர் நடித்து வெளிவரப்போகும் ரிச்சி திரைப்படம், உலிதவரு கண்டந்த்தெ (மற்றவர்களின் பார்வையில்) என்ற கன்னடப் படத்தின் ரீமேக் எனத் தெரிந்தது. உடனே இப்படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டேன். டொரண்ட் சரணம். இந்த உலிதவரு கண்டந்த்தெ என்ற பெயர் மனதில் பதியவே மாட்டேன் என்கிறது. உச்சரிப்பும் இதுதான் சரியா எனத் தீர்மானமாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் தமிழில் சோதிக்காமல் ரிச்சி என்று தெளிவாக வைத்துவிட்டார்கள்.
சில படங்களை ஏன் ஆர்வம் கொண்டு ரீமேக் செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். சிலர் சில படங்களை ஏன் தயாரிக்கிறார்கள் என்பதும் புதிரே. லூஸியா அற்புதமான திரைப்படம். சமீபத்தில் வந்த இந்தியத் திரைப்படங்களில் இது முக்கியமானது என்பது என் பார்வை. அதைத் தமிழில் எடுக்க சித்தார்த் நினைத்தது எனக்குத் தந்த ஆச்சரியம் இன்னும் தீரவில்லை. இப்படம் ஓடாது என்று நிச்சயம் சித்தார்த்துக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனாலும் தமிழில் எடுத்தார். தமிழிலும் எனக்குப் பிடித்திருந்தது. சிலர் தமிழில் நன்றாக இல்லை என்றார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதேபோல், நடிகை சௌந்தர்யா த்வீபா என்ற படத்தைத் தயாரித்ததும் எனக்கு ஆச்சரியமான ஒன்றே. இப்படிச் சில ஆச்சரியங்களைத் திரைப் பிரபலங்கள் தந்தவண்ணம் உள்ளார்கள்.
தமிழில் (மலையாளத்திலும் வருகிறது எனத் தெரிகிறது) உலிதவரு கண்டந்த்தெ ரிச்சியாக வருவது இன்னொரு ஆச்சரியம். இந்தப் படம் லூஸியா போல் வணிக ரீதியாக நிச்சயம் வெற்றியடைய முடியாது என்று சொல்லமுடியாது. கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஓரளவு நல்ல வசூலைச் செய்துள்ளது எனத் தெரிகிறது. படம் நல்ல பாராட்டைப் பெற்றிருக்கிறது. இப்படியே தமிழில் எடுத்தால் இப்படம் பாராட்டப்படும் என்றாலும், வணிக வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் கொஞ்சம் தமிழுக்கு ஏற்றபடி மாற்றினால் நிச்சயம் விக்ரம் வேதா அளவுக்கு நல்ல பெயர் பெறுவதோடு நல்ல வசூலையும் செய்யலாம்.
ஆய்த எழுத்து, விருமாண்டி மாதிரியான உத்தி கொண்ட திரைப்படம். இந்த உத்தி இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையே அல்ல என்று இடதுகையில் தள்ளிவிட்டுப் போய்விடலாம். படம் பார்த்த முடிந்த பின்பும் இதில் கதையே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் படத்தை எடுத்த விதம் அசத்தலாக உள்ளது. பொதுவாக கன்னடப் படங்களில் (நான் மிகக் குறைந்த படங்களையே பார்த்துள்ளேன்) இது விஷுவலாக கொஞ்சம் மேன்மை காட்டுகிறது. (இதிலும் சில காட்சிகள் டெக்னிகலாக கொஞ்சம் பின் தங்கி உள்ளன என்பதும் உண்மையே.) இதையெல்லாம் தமிழில் பக்காவாகச் செய்தால் இன்னும் மெருகு கூடலாம்.
கன்னடத்தில் உடுப்பியைக் களமாகக் கொண்டு ஜன்மாஷ்டமி தினம் நடக்கும் மாறுவேடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. நேற்றைய தி ஹிந்து பேட்டியில் திருநெல்வேலி வட்டார வழக்கைப் பேசத்தான் 50 நாள்கள் ஆகியது என்றும் படம் எடுக்க 30 நாள்தான் ஆனது என்றும் நவின் பாலி சொன்னதை வைத்துப் பார்த்தால், குலசேகரன் பட்டணத்தில் நடக்கும் தசராவை எடுத்துக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது. டீஸரை வைத்து இதை முடிவு செய்யமுடியவில்லை. படம் வந்தால்தான் தெரியும்.
உலிதவரு கண்டந்தெ படத்தில் நாயகன் ரக்ஷித் ஷெட்டி (இவரே இயக்குநரும் கூட என அறிந்தபோது ஆச்சரியம் இரண்டு மடங்காகிவிட்டது) அசரடித்துவிட்டார். உண்மையில் படம் பார்க்க ஆரம்பிக்கும் முன்பு, கன்னடத்தில் யார் நடித்திருந்தாலும் அதைவிடப் பல மடங்கு நிச்சயம் நவின் பாலி நன்றாக நடிப்பார் என நினைத்துக்கொண்டுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் படம் பார்த்தபின்பு, ரக்ஷித் ஷெட்டி அளவுக்கு நவின் பாலியால் நடிக்கமுடியாது என்று எண்ணம் வந்துவிட்டது. ரக்ஷித் ஷெட்டியின் நடையும் துள்ளலும் அலட்டலும் வசனம் பேசும் விதமும் அந்த பெல்ட்டை அணிந்துகொண்டிருக்கும் விதமும் – என்ன சொல்ல, அற்புதம். (இவரே கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு படத்தில் நடித்தவர். அந்தப் படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார். உண்மையில் அந்தப் படத்தில் அவர் அப்பாவுடன் சேர்கிறாரோ இல்லையோ, அவரது காதலியுடன் சேரவேண்டும் என்ற நினைப்பைக் கொண்டு வந்தது அவரது நடிப்பு!) நவின் பாலியும் நிச்சயம் கலக்குவார் என்பது உறுதி. ஆனால் திருநெல்வேலி வட்டார வழக்கு என்பதுதான் கொஞ்சம் நடுக்கத்தை வரவழைக்கிறது.
இந்தப் படத்தை ஏன் நவின் பாலி நடிக்க எடுத்தார் என்பது இன்னொரு ஆச்சரியம். ஏனென்றால் இப்படத்தில் மூன்று நடிகர்களுக்குச் சமமான வாய்ப்பு. தமிழில் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறு ஒரு தமிழ் நாயகன் என்றால் கூறு போட்டிருப்பார். இது நவின் பாலி என்பதால் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். கன்னடத்தில் நாயகியாக வரும் நடிகையைவிட தமிழில் வரப்போகும் ஸ்ரெத்தா அதிகம் நம்பிக்கை தருகிறார்.
உலிதவரு கண்டந்த்தெ மிக மெதுவாகவே நகர்கிறது. தமிழிலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். எனவே படம் வந்தவுடனேயே பார்த்துவிடவேண்டும். நவின் பாலியின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள். நேரம் படமும் தமிழ்ப்படம்தானே? இருமொழிப் படம் என்றுதான் நினைவு. இதுவும் இருமொழிப் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தால் மலையாளத்தில் நிச்சயம் ஒரு ப்ளாக் பஸ்டராக இருக்க வாய்ப்பு அதிகம். தமிழில்தான் என்ன நடக்கும் என்று சொல்லமுடியவில்லை. என் கணிப்பில் நல்ல பெயர் வாங்கி, அதிலுள்ள குறைகள் முன்னிறுத்தப்பட்டு படம் வசூலில் சுணங்கும் என்றே தோன்றுகிறது. அப்படி நடக்காமல் இருக்கட்டும்.