நானு அவனல்லா, அவளு (கன்னடம்)

நானு அவனல்லா, அவளு (கன்னடம்)

மரத்தடி யாஹூ குழுமத்தில் (2002வாக்கில் இருக்கலாம்) ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது. ஒரு கவிதை அனைவரையும் திடுக்கிட வைத்தது. அனைவரையும் அக்கவிதையைப் பற்றிப் பேச வைத்தது. ஒரு கவிதையை யாரோ எழுதுவதற்கும், பாதிக்கப்பட்ட ஒருவர் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை மிகத் துல்லியமாகக் காட்டியது அக்கவிதை. கவித்துவம் என்ற தூய அளவுகோல் கூட உணர்ச்சிக் குவியலின் நேர்மையின் முன்பு தகர்ந்துபோகும் என்பதற்கு அக்கவிதை ஒரு உதாரணம். அக்கவிதையை எழுதிய லிவிங் ஸ்மைல் வித்யா ஒரே நாளில் மரத்தடி யாஹூ குழுமத்தில் பிரபலமானார்.

2005/06 வாக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகம் அனைவரையும் பேச வைத்தது. புத்தகக் கண்காட்சியில் மட்டும் ஆயிரம் புத்தகங்களுக்கு அருகில் விற்ற முதல் புத்தகம் அதுவாக இருக்கலாம் என நினைக்கிறேன். கிழக்கு பதிப்பகம் அப்போதுதான் தோன்றியிருந்த புதிய பதிப்பகம். அந்தப் புத்தகம், நான் (சரவணன்) வித்யா.

2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது விஜய் என்ற நடிகருக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் விஜய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிந்ததாலேயே யார் இந்த விஜய் என்று பார்க்க ஆர்வம் வந்தது. படத்தின் பெயர், நானு அவனல்ல அவளு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொண்டுவந்தது. பின்னர்தான் தெரிந்தது, இப்படம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட லிவிங் ஸ்மைல் வித்யாவின் நான் வித்யா புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று. இப்படத்தைப் பார்க்க நினைத்தேன்.

 

தமிழ்நாட்டில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களைப் பார்த்துவிடலாம். கன்னடப் படங்களைப் பார்ப்பது கடினம். சிடியும் கிடைக்காது. (இன்று வரை ஒரு மொட்ட்யின கதா பார்க்கக் கிடைக்கவில்லை.) பெங்களூருவில் இருக்கும் ஒருவர் மூலம் நானு அவனல்லா அவளு கிடைக்குமா என முயன்றேன். கிடைக்கவில்லை அல்லது விலை அதிகம் என்று என்னவோ காரணங்கள்.

நேற்று தற்செயலாக யூ டியூப்பில் தேடினேன். இப்படம் சிக்கியது. உடனே பார்த்தேன். கொஞ்சம் மோசமான் ப்ரிண்ட் தான், ஆனாலும் வேறு வழியில்லை.

படத்தை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், அட்டகாசம். கண்டிப்பாகப் பாருங்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருமே அற்புதம்தான். அதிலும் திருநங்கையாக வரும் விஜய் என்ற நடிகரின் நடிப்பு, வாய்ப்பே இல்லை. படத்தின் இயக்குநரின் தெளிவு, இப்படத்தை உணர்ச்சிகரக் குவியலாக மாற்றாமல் அப்படியே எடுத்ததுதான். மிகப் பொறுமையாக நிதானமாகச் செல்லும் திரைக்கதை. திருநங்கைகளின் உலகம் விரியும் காட்சிகள் எல்லாம் பொக்கிஷம். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இசையும் பாடலும் படத்தோடு அப்படியே பொருந்திப் போகிறது.

இது போன்ற மாற்றுத் திரைப்படங்களுக்கு தொடக்கம் முடிவு என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இப்படத்தின் முடிவு ஒரு மெல்லிய கீற்று தென்படுவதாகக் காட்டப்படுகிறது. மகிழ்ச்சி. யாரையும் குற்றம் சொல்லாமல் யாரையும் திட்டித் தீர்க்காமல் மிகப் பொறுமையாக சமூகத்தை எதிர்கொள்கிறது இத்திரைப்படம். மனிதர்கள் இயல்பிலேயே கெட்டவர்கள் அல்ல. அதேசமயம் இதே மனிதர்களே மிகக் கோரமாகவும் திகழ்கிறார்கள். இந்த முரணுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் திரைப்படம் இது. நிச்சயம் பாருங்கள்.

நடிகர் விஜய்க்கு விருது கொடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. சரியாக எப்படி விருது கொடுத்தார்கள் என்று வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளை ஆண்களின் ஆபாச நகல்களாகவே காட்டுவார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு (பாம்பே, நான் கடவுள், அருவி) மெல்ல வளர்ந்து வருகிறது என்றாலும் முழுமையான திருநங்கைப் படம் என்று ஒன்று வரவில்லை என்றே நினைக்கிறேன். (அல்லது சந்தோஷ் சிவனின் படம் ஒன்று வந்திருக்கிறதா? நவரசா? இதை நான் இன்னும் பார்க்கவில்லை.) உண்மையில் இப்படம் தமிழில் வந்திருக்கவேண்டும். கன்னடத்தில் வந்தது ஆச்சரியம்.

படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், நடிகர் விஜய்யின் தற்போதைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படத்தைப் பாருங்கள். எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்று தெரியும். குடும்பத்துடன் பார்க்கலாம்.

யூ ட்யூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=bZSy3SNy1kA&t=213s

பின்குறிப்பு: லிவிங் ஸ்மைல் வித்யாவின் அரசியல் நிலைப்பாடு, கொள்கைத் தேர்வு எல்லாம் எனக்கும் தெரியும். எனவே அதை முன்வைத்து இப்பதிவை அணுகவேண்டாம்.

Share

Comments Closed