Byju’s learning app

அபிராம் 7வது படிக்கிறான். யூ ட்யூப் மற்றும் ஆப் மூலம் என்ன ஆக்கபூர்வமாக அவனுக்குச் செய்யலாம் என யோசித்து சில ஆப்களை தரவிறக்கினேன். பல ஆப்களைத் தேடினால் நிச்சயம் பலனுள்ளது கிடைக்கும். அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. இது குறித்து இன்னும் தேடலில் இருக்கிறேன்.

இந்த சமயத்தில் தினமலர் தீபாவளி மலரில் (ஐயோ வாங்கவில்லையே என்று யாரும் நினைக்கவேண்டாம், வாங்கும் அளவுக்கு இதில் ஒன்றுமில்லை!) ‘நேசமுடன்’ வெங்கடேஷ் பைஜூ ஆப்பினருடன் நடத்திய நேர்காணல் கண்ணில் பட்டது. இம்பரஸ் ஆகி உடனே தரவிறக்கினேன். இன்னும் முழுமையாக அதை எப்படிப் பயன்படுத்துவது என்று நான் பார்க்கவில்லை. அந்த ஆர்வம் இல்லாததற்குக் காரணம், அந்த ஆப்பின் கட்டணங்கள். 7ம் வகுப்புப் பாடங்களுக்கு 23,000 ரூபாய் என்று கண்ணில் பட்டதும் கொஞ்சம் ஷாக் அடித்தது போன்ற உணர்வு. ஒரு வருடப் பள்ளிச் செலவே இதைவிடக் கொஞ்சம் அதிகம் இருக்கும். பள்ளிக்கான கட்டணங்களே அதீதம் என்று சொல்லிக்கொண்டிருக்கதையில் ஒரு ஆப்புக்கான இச்செலவை என்னால் ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியாது என்பதால் ஆப்பை அப்படியே தள்ளி வைத்துவிட்டேன். இதன் அர்த்தம், அந்த ஆப் கொள்ளை அடிக்கிறது என்பதல்ல, அவர்களுக்கான நியாயங்கள் (!) இருக்கலாம். ஆப்பைப் பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும்.

இந்நிலையில் பைஜூ ஆப்பும் தி ஹிந்து குழுவினரும் அனைத்துப் பள்ளிகளிலும் (சென்னை மட்டுமாகக் கூட இருக்கலாம்) ஒரு தேர்வு வைத்ததாக என் பையன் சொன்னான். கேள்வித்தாளையும் கையில் கொண்டு வந்திருந்தான். நேஷனல் டேலண்ட் ஹண்ட் என்ற பெயரில் இருந்தது. இதில் வென்றவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதெல்லாம் தெரியவில்லை. பள்ளிகளிலும் அதிகம் ஆர்வம் காட்டியதைப் போலத் தெரியவில்லை. பள்ளி மாணவர்களுக்குத் தெளிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை போல.

கேள்வித் தாளைப் பார்த்தேன். அபிராம் ஏழாம் வகுப்பில் இரண்டாவது டெர்ம் படிக்கிறான். கேள்வித் தாளில் ஒரு கேள்வியைக் கூட ஏழாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் மாணவர்கள் சரியாகப் போட்டுவிடுவார்கள் என்று சொல்லமுடியாது. அத்தனை கடினம். அதைவிட, அவர்களுக்கு இதுவரை அறிமுகம்கூட ஆகியிராத பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள். செட் 2 தேர்வு என்று கேள்வித் தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களின் நோக்கம் என்ன என்றே தெரியவில்லை. அபிராம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் இங்கிபிங்கிபாங்கி போட்டுத்தான் விடையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தங்கள் பெயரை எழுத்துக்கிரமமாக உச்சரித்து அது முடியும் விரலையெல்லாம் பதிலாகக் குறித்திருக்கிறார்கள் சில விஷமக்காரர்கள்.

நான் இதிலுள்ள 20 கேள்விகளைப் போட்டுப் பார்த்தேன். அரை மணி நேரம் ஆனது. ஓரளவுக்கு எல்லா கேள்விகளுக்குமே பதில் தெரிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அபிராம் அதிகபட்சம் 2 கேள்விகளுக்குச் சரியாக பதில் சொல்லி இருக்கலாம். அதிர்ஷடத்தில் எத்தனை சரியாகத் தேர்வு செய்திருப்பான் என்பது தெரியாது.

பைஜுவின் நோக்கம் என்ன? அவர்கள் நேஷனல் டேலண்ட் ஹண்ட்டில் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

கேள்வித்தாளை இணைத்திருக்கிறேன்.

பைஜு வலைத்தளத்தில் பாடங்களுக்கான விலை: https://byjus.com/products/all-products/cbse-icse/?orderby=price

Share

Comments Closed