காற்று வெளியிடை – கதையே இல்லை. கார்கில் பிரச்சினை தொட்டுக்கொள்ள ஊறுகாய். பாகிஸ்தானைத் திட்டினால் முஸ்லிம்களுக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம். இந்தியாவைக் குறை சொன்னால் இந்திய அளவில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்ற பயம். எனவே அரசியலையும் நாட்டுப் பிரச்சினைகளையும் இம்மி கூடத் தொடாமல் கார்கில் பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்து சாதனை செய்திருக்கிறார் மணிரத்னம். ஒரு முக்கியப் பிரச்சினையை பின்னணியாக எடுத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வது மணிரத்னத்துக்கும் நமக்கும் புதியதல்ல என்றால், இப்படம் இன்னும் ஒரு படி மேல். இதற்கு முந்தைய படங்களில் அப்பிரச்சினையைப் பற்றி எதாவது சொல்லவாவது முயற்சிப்பார். இதில் அந்த முயற்சியும் கிடையாது.
பாகிஸ்தானில் கார்த்தி சிக்குவதும் பாகிஸ்தானிலிருந்து தப்பிப்பதும் மனைவி குழந்தையுடன் சேருவதுமான காட்சிகளில் எது சிறந்த காமெடிக் காட்சி என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணத்துக்கு முன்னரே உடலுறவு என்ற கருத்துத் திணிப்பை இப்படத்திலும் கடைப்பிடிக்கிறார் மணிரத்னம். என் செல்லக்கிளியே, உங்க அருமை பேத்தி என்பது போன்ற ஒட்டாத மணிரத்னத்தின் ட்ரேட் மார்க் செயற்கை வசனங்கள், வண்ணப்பொடி தூவி ஒரு கல்யாணப் பாடல், டாக்டரைத் தேடிப் போன மாதவனைப் போல ஒரு டாக்டர் காதலைத் தேடிப் போவது, டெண்ட் போட்டு வைத்தியம் பார்க்கும் ஹீரோயின் என மணிரத்ன க்ளிஷேக்கள் இப்படத்திலும் உள்ளன.
படத்தின் ப்ளஸ் என்ன? ப்ளஸ் அல்ல, பல ப்ளஸ்கள். ஒன்று, ஒளிப்பதிவு. தமிழில் இத்தனை சிறந்த ஒளிப்பதிவுள்ள படங்கள் மிகக்குறைவு. உயிரே திரைப்படத்துக்குப் பிறகு இப்படி அசரடிக்கும் ஒளிப்பதிவை த்மிழ்ப்படங்களில் பார்த்ததாக நினைவில்லை. அதையும் தாண்டிச் செல்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு விருது உறுதி. ஒளிப்பதிவுக்காகவே இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
இரண்டாவது ப்ளஸ், அதிதி ராவ். முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நடிக்குமா? நடிக்கிறது. கண் காது மூக்கு என சின்ன சின்ன அழுத்தமான அசரடிக்கும் பாவங்களில் அதகளப்படுத்துகிறார் அதிதி ராவ். சான்ஸே இல்லை.
மூன்றாவது ப்ளஸ், மணிரத்னத்தின் இயக்கம். படம் முழுக்க பத்து காட்சிகளாகவது பிரமாதமாக இருக்கின்றன. வழக்கமான மணிரத்னத்தின் படங்களைப் போல இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதுதான் பிரச்சினை.
பின்னணி இசையா அது பாடலா என்று கண்டுபிடிப்பதற்குள் அது முடிந்துவிடுகிறது. நல்லை அல்லை பாடல் இரண்டு வரி காதில் விழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பிரச்சினை, மெலடி பாடல் என்றால் இசையே இல்லாமல் இசைப்பதுதான் என்ற முடிவுதான்.
மெல்ல நகரும் மணிரத்னத்தின் படங்களின் ரசிகர்கள் இப்படத்தைப் பொறுமையாகப் பார்ப்பார்கள். நான் பார்த்தேன். ரசித்துப் பார்த்தேன். கதையே இல்லை என்பது தந்த எரிச்சலை மீறி, மணிரத்னத்தின் சில செயற்கையான காதல் வசனங்களை மீறி, பிரமிக்க வைக்கும் பல காட்சிகளை ரசித்துப் பார்த்தேன். இரண்டாம் முறையும் பார்க்கப் போகிறேன். மற்றவர்கள் நொந்து போவார்கள். அப்படி நொந்து போனவர்கள் நம்மையும் நிம்மதியாகப் பார்க்கவிடாமல் கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இன்று நான் பார்த்த திரையரங்கில் என்னைத் தவிர எல்லாருமே இப்படி நொந்து போய் கமெண்ட் அடித்துக்கொண்டுதான் இருந்தார்கள். இரண்டரை மணி நேரப் படம் இருபது மணி நேரம் ஓடுவது போல் பிரமை ஏற்படுத்துவது உறுதி என்பதால் கட்டுச்சாதம் கட்டிச் செல்லவும். மிகத் தெளிவாக இது ஈகோ க்ளாஷ் படம் என வகைப்படுத்தி இருந்தால், ஒரு கட்டுக்குள்ளாவது இருந்திருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் மணிரத்னம்.
பின்குறிப்பு: இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று வருகிறது. பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வருகிறது. கூடவே இன்னொருவர் பெயரும் வருகிறது. அதோடு ஒரிஜினல் ஸ்கோர் என்று அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்?