அன்புள்ள பா. ரஞ்சித்

அன்புள்ள பா.ரஞ்சித்

அன்புடன் ஒரு கடிதம். 🙂

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க வாய்ப்பில்லை என்பது தெரியும். தெரிந்தும் செத்துப்போன தன் மனைவிக்கு பாசவலையில் கமல்ஹாசன் கடிதம் எழுதிக் கொன்றெடுத்தது போல என் பங்குக்கு நானும் எழுதிக்கொல்கிறேன்.

நீங்கள் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.

கபாலி, ரஜினியின் திரை வரலாற்றில் மிகச் சிறந்த படமாக அமைந்துவிட்டது. நீங்கள் இயக்கப்போகும் அடுத்த படமும் அப்படியே ஆகட்டும். ஆனால் கபாலி திரைப்படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரை வரலாற்றில் என்ன இடம் நீங்கள் யோசிக்கவேண்டும். ரஜினி என்ற ஒரு உச்ச நடிகராக அப்படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தாலும், ஒரு முக்கியமான வளர்ந்து வரும் இளம் இயக்குநராக அப்படம் உங்களுக்கு பெருமை தரக்கூடிய, காலாகாலம் உங்கள் பெயரைச் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்காது. சுருக்கமாக மெட்ராஸ் போன்ற ஒரு படமாக இருக்காது.

உண்மையில் உங்கள் கைக்கு வந்து அமர்ந்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு ரஜினி வில்லனை வெல்லும் காட்சிகளில் திரைக்கதை என்பதோ புத்திசாலித்தனம் என்பதோ மருந்துக்கும் இல்லை. இங்கே நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உங்கள் திரை வரலாற்றிலும், கபாலி திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். இன்று கபாலி ரஜினியின் திரைப்படமாகவும் வசூலில் சாதனை செய்த படமாகவுமே அறியப்படுகிறது. இனியும் அப்படித்தான் அறியப்படும்.

அதிர்ஷ்டம் இரண்டாவது முறை கதவைத் தட்டாது என்பது இன்று பொய்யாகி இருக்கிறது. இந்த முறையாவது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்களைத் தவிரவும் நல்ல நடிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை நம்புங்கள். பாலு மகேந்திரா செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். ஒரே நடிகர்கள் தொடர்ச்சியாக நடிப்பது தரும் அலுப்பை ஓர் இயக்குநராக நீங்கள் கடந்தே ஆகவேண்டும்.

ரஜினி படம் என்பதால் எதைச் சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் இரண்டு நாள்களில் முடிந்துவிடும். நீங்கள் படம் செய்வது ரசிகர்களுக்காக மட்டுமே அல்ல. எனவே திரைக்கதையில் சின்ன சமரசம் கூட ரஜினிக்காகச் செய்யாதீர்கள்.

வசனத்தை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பாடலாகப் போடும் சந்தோஷ் நாராயணனிம் கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல பாடலாகக் கேட்டு வாங்குங்கள். ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வேண்டாம். அல்லது உலகம் ஒருவனுக்கே போல் வேண்டவே வேண்டாம். கபாலி திரைப்படத்தில் தனியே அதிகம் பாடல்கள் வராததுதான் நல்லதாகப் போனது. சந்தோஷ் நாராயண்தான் இசை என்றால் அப்படியே இப்படத்துக்கும் செய்துவிடுங்கள். ஒரு மாற்றத்துக்கு, இளையராஜாவை அல்லது ஏ.ஆர். ரஹ்மானை யோசிப்பது நல்லது என் எண்ணம்.

ஒன்று, தீவிரமான அரசியல் படமாகவே எடுங்கள். அல்லது அரசியலற்ற படமாகவே இயக்குங்கள். அரசியலற்ற ஒரு கேளிக்கைத் திரைப்படமாக எடுத்துவிட்டு அதை அரசியல் படமாக முன்வைக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் முன்வைக்காவிட்டாலும் உங்கள் ‘நண்பர்கள்’ அதை, கபாலிக்குச் செய்தது போல, அப்படி முன் வைப்பார்கள். அப்போது அதை ஆதரிக்காதீர்கள். அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.

உங்களுக்கு இருக்கும் தீவிரமான அரசியல் உணர்வு வரவேற்கத்தக்கது. ஆனால் அதையே மேடைதோறும் பேசுவது திரையுலகில் உங்களுக்கு நல்லவற்றைத் தராது என்றே நான் நிச்சயம் நம்புகிறேன். இன்று உங்களை ஏற்றிப் பேசும் உங்கள் நண்பர்கள், உங்களது தோல்விக் காலத்திலும் உங்களிடமிருந்து அரசியல் ஆதாயம் பெற மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள் தேடல் சினிமாவில் வெற்றி என்பதாக இருக்கும். அது இல்லாதபோது நீங்கள் அரசியல் என்ற வெளிக்குள் வேறு வழியின்றி நுழையவேண்டியிருக்கும். இருபது படங்கள் செய்வது வரை உங்கள் அரசியல் உங்களுக்குள்ளே இருக்கட்டும். உங்கள் தொடர்பு மொழி சினிமா. அதை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துங்கள். மணிரத்னத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளுங்கள். இது உங்கள் திரைவாழ்க்கைக்கு நல்லது. இல்லையென்றால் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம் கொடுத்தே, சேரன், தங்கர்பச்சான், அமீர் வரிசையில் போய்ச்சேரவேண்டி இருக்கும்.

கடைசியாக ரகசியமாக ஒன்று. வழக்கம்போல் திரைப்படத்தின் பின்னணியில் ஈவெராவின் படத்தை எங்கேயும் வைக்காதீர்கள். கவின்மலர்களின் பேட்டியில் வழக்கம்போல் ஈவெராவின் பெண் விடுதலையை ரசிப்பவன் என்றும், கபாலியில் குமுதவல்லி போல இப்படத்தில் வரும் விகடவல்லி ஈவெராவின் பாதிப்பில் வந்ததுதான் என்று எதாவது சொல்லி நழுவிவிடுங்கள். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டது போல காட்டிவிடுவார்கள். நம் வேலை நமக்கு. அது வெற்றிகரமாகத் தொடரட்டும்.

ரஜினியை மீண்டும் இயக்கப் போகும் நீங்கள் தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சிறந்த இயக்குநராக வலம் வர வாழ்த்துகள்.

Share

Comments Closed