கெடை காடு

ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவல் படித்தேன். முன்பே வாங்கி வைத்திருந்த நாவல். அப்போது காவ்யா வெளியீடாக வந்தது. தற்போது டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது.

100-00-0002-258-9_b-01

நாவலின் சிறப்பு, கதை என்று எதுவுமில்லை. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு மாடுகளைப் பத்திக்கொண்டு போய் குள்ராட்டி என்னும் மலைக்காட்டுக்குச் சென்று அங்கே தங்கி இருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதனூடாகச் சொல்லப்படும் பல்வேறு நினைவுகள், சிறு கதைகள், நிகழ்வுகள் இதுதான் நாவல்.

இதனால் ஒட்டுமொத்த நாவலும் விவரணைகளாகவே இடம்பெறுகின்றன. காட்டையும் ஊரையும் அதன்வழியே கோனார்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஏக்நாத். இதில் இன்னும் சிறப்பு என்பது, நாவலின் விவரணைகளில் பயன்படுத்தப்படும் தமிழும் வார்த்தைகளும்தான். அப்படியே மண் மனம் கமழ, காட்டு மணம் கமழ மிகப் பிரமாதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பேச்சு வழக்கில் நெல்லை வட்டார வழக்கு சுத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. வட்டார வழக்கின் பயன்பாட்டை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி இருப்பது அழகு. இல்லையென்றால் முழுமையாக நாவலில் உட்புகமுடியாமல் போயிருக்கலாம். இவ்வழக்குக்கு ஈடாக கதை சொல்லியின் நடை அமர்க்களப்படுத்துகிறது.

நாவலின் காலம் 70கள் என்று கொள்ளுமாறு பல குறிப்புகள் உள்ளன. இன்று வாசிக்கும்போது காட்டில் வசிப்பது குறித்த ஏக்கத்தைக் கொண்டு வருவதில் இந்நாவல் வெற்றி பெறுகிறது என்றே சொல்லவெண்டும். (இந்த இடத்தில் தேவையில்லை என்றாலும் ஒன்று – நாவலில் ஓரிடத்தில் அனைவரும் சிவாஜி எம்ஜியார் பாடல்களைப் பாடும் இடம். அதுவும் எதோ ஒரு ஏக்கத்தைத் தந்த ஒன்றே.)

சில குறைகள் என்று பார்த்தால் – நாவல் வெறும் கதை சொல்லல் என்ற போக்குக்கு மேல் எழவே இல்லை. நாவலின் பின்னணியாக எவ்வித அரசியல் வரலாற்றுப் பின்னணியும் வரவில்லை. இப்படி நிச்சயம் வரத்தான் வேண்டுமா என்பது ஒரு பக்கம். இப்படி வராததால் நாவல் மிக மிக நேர்க்கோட்டுப் பாதையில் வெறும் நிகழ்வுகளைப் பட்டியலிடும் ஒன்றாகக் குறுகிப் போய்விடுகிறது. இன்னொரு குறை என்றால், வாசகர்களை ஊகிக்கவிடாமல் அதை நாவலாசிரியரே சொல்வது. இதனால் ஒரு வைரமுத்துத்தனம் நாவலில் வந்துவிடுகிறது. கெடைக்குப் போய்விட்டு நாள்கழித்து வரும் மகனுக்கு அம்மா கோழி அடித்துக் குழம்பு வைக்கிறாள் என்பதே போதுமானது. பல நாள் நல்ல சாப்பாடு சாப்பிடாதவனுக்கு எந்த ஒரு தாயும் செய்வது இதைத்தான் என்பது யாருக்கும் புரியும். தாயுள்ளம் இதை ஏற்கெனவே அறிந்திருந்தது என்று எழுதுவது ஒரு திணிப்பு. இதை வாசகனே புரிந்துகொள்ளும்போது வரும் ஒரு இன்பத்தை இவ்வரிகள் குலைக்கின்றன. இதைப் போன்ற பயன்பாடு நாவல் முழுக்க பல இடங்களில் வருகிறது. உச்சிமகாளியின் காதல் முயற்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கெடையை மேய்த்துக்கொண்டு காட்டைப் பற்றிய சித்திரங்களில் ஊர் பற்றிய நிகழ்வுகள் அதிகம் சொல்லப்படுவதும் ஒரு வகையில் சலிப்பே. கோனார்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த சித்திரம் நாவலில் உருவாகி வந்தாலும், மற்ற சாதிகளைப் பற்றிய விரிவான பதிவோ அவர்களுடனான உறவின் எல்லைகளோ சொல்லப்படவில்லை. எல்லா சாதியும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பது போன்ற சித்திரம் ஒன்று மட்டும் எப்படியோ மேலோட்டமாக உருவாகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாவல் நம்மைக் காட்டுக்குள் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். காட்டைப் பற்றிய ஏக்கம் எல்லா நவீன மனங்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை இந்நாவல் சரியாகப் பிடித்துவிடுகிறது. அந்தக் காட்டைப் பற்றிய விவரணைகளில் நாவலாசிரியர் சொல்லும் பல விஷயங்கள், எத்தனை தூரம் இவர் காட்டைப் படித்திருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறது. காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதுவது அல்ல, காட்டிலேயே வாழ்ந்து எழுதுவது. அவ்வகையில் இந்நாவல் ஒரு முக்கியமான பதிவுதான்.

நாவலை வாங்க: http://www.nhm.in/shop/1000000022589.html

Share

Comments Closed