Archive for August 24, 2015

மெஹர் Vs பாயம்மா

பிரபஞ்சனின் புனைவுகள் என்றாலே படிக்க எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான். ஆரம்பகாலங்களில் அவர் எழுதிய சில கதைகளைப் படித்ததனால் வந்த நடுக்கமாகவே அது இருக்கவேண்டும். அவரது கட்டுரைகளைப் படிப்பேன். இன்று அவரது சிறுகதையான பாயம்மாவைப் படித்தேன். விஜய் டிவி சித்திரத்தில் தாமிரா இயக்கத்தில் வெளியான மெஹர் என்னும் சித்திரத்தைப் பார்த்தபின்னர், அவரது இந்தச் சிறுகதையைப் படிக்க ஆர்வம் கொண்டு, இன்று படித்தேன். இந்த பாயம்மா கதை நற்றிணை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘யாசுமின் அக்கா’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.

மெஹர் ஒரு நல்ல முயற்சி. தமிழில் இதுவரை முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நேர்மையான ஒரு திரைமுயற்சி கூட வந்ததில்லை. மலையாளத்தில் பல படங்கள் இப்படி வந்துள்ளன. ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. எதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் அது முஸ்லிம்களின் படமல்ல. அப்படி இருந்த ஒரு நிலையில் இந்த மெஹர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். அந்த அளவில் தாமிரா பாராட்டப்படவேண்டியவர். ஒரு திரைப்படத்தின் முக்கியப் பங்கு இப்படி யதார்த்தங்களை தன்னளவில் தொடர்ந்து பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வரும் மெகா தொடர்களும் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. முன்பு சுஹாசினி இயக்கிய சில குறுந்தொடர்களும், பாலுமகேந்திரா இயக்கிய குறுந்தொடர்களும் மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. இதுபோன்ற ஒரு சித்திரம் முயற்சி முன்பு தூர்தர்ஷனிலும் நடந்தது. நீங்காத நினைவுகள் என்றொரு நாடகம் ஒளிபரப்பப்பட்டது. ஜெயபாரதி நடித்தது என்று நினைக்கிறேன். இன்னொரு நாடகம் ஜெய்சங்கர் நடித்தது. ஆனால் அவையெல்லாம் நல்ல முயற்சியாகக் கைகூடவில்லை.

இந்நிலையில் தாமிராவின் மெஹர் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம், அதன் தரம். இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பதிவு. இந்த இரண்டுமே இச்சித்திரத்தை முக்கியத்துவம் பெற வைக்கின்றன. சல்மாவின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அதைவிட சல்மாவின் மகனாக வருபவரது நடிப்பு அட்டகாசம். பவா செல்லத்துரைக்குக் குரல் கொடுத்தவரின் குரல் பொருந்திவரவில்லை என்பது ஒரு குறை. இன்னொரு குறை என்று சொன்னால், சரியாக கையாளப்படாத நெல்லை வட்டார வழக்கு. மாப்பிள்ளையின் அண்ணன், கடன் தர மறுத்து இரண்டாம் தாரத்துக்கு வாழ்க்கைப்படச் சொல்லும் இன்னொருவர் என இருவரும் மிக இயல்பு. பின்னணி இசை மிக அழகாக இருந்தது. கதைக்கு ஏற்றபடி எவ்வித உறுத்தலும் இன்றி கூடவே முழுக்கப் பயணித்தது.

சிறுகதை என்று பார்த்தால் பாயம்மா மிகத் தட்டையான கதை. நுணுக்கங்களெல்லாம் எதுவுமே இல்லை. தவறு செய்யத் தயாராக இருக்கும் ஒரு பையன், அவனுக்குள் எவ்விதப் போராட்டங்களும் இல்லை. கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்பதால் திருடுகிறான். பாயம்மாவே போலிஸிடம் சொல்கிறாள். வழக்கு வேண்டாம் என்று முதலாளி சொல்கிறார். முதலாளியே மனம் இறங்கி கல்யாணத்துக்குப் பணம் தருகிறார். ஆனால் பாயம்மா மறுத்துவிடுகிறாள். அவ்வளவுதான். இக்கதையைப் படிக்க நான் நினைத்த காரணமே, பிரபஞ்சன் இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கை எப்படி எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளத்தான். என்னை ஏமாற்றவில்லை பிரபஞ்சன், பேச்சு வழக்கைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்!

ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் சாதியினரின் கதையை எழுதுவதில் உள்ள சவால் இது. ஆனால் பிரபஞ்சன் கதையை மட்டுமே கவனத்தில்கொண்டு, இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லா, யாரசூல், நிக்காஹ் போட்டு நிரப்பிவிட்டார். அதில் மோனே மோளே என்றும் ஒரு வரியில் ’என்னண்டயே சதாய்க்கிறியே’ என்றும் வருகின்றன. இங்கேதான் தாமிராவின் திறமை மின்னுகிறது.

ஒரு எழுத்துப் பிரதியை எப்படி திரைமொழியாக்குவது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. மிக அழகாக நிர்ப்பந்தங்களை உருவாக்குகிறார் தாமிரா. தன்மொழியில் தேவைப்படும்போதெல்லாம் சொல்லத் தொடங்கி பார்ப்பவர்களுக்கு ‘அவன் திருடினாலும் தப்பே இல்லை’ என்ற எண்ணத்தைக் கொண்டுவருகிறார். இந்த எண்ணமே பாயம்மா எடுக்கப்போகும் முடிவுக்கு ஓர் அழுத்தத்தைத் தருவது. இவையெல்லாம் சிறுகதையில் இல்லை. பாயம்மா ஒரு சிறிய கதை, அவ்வளவுதான். ஆனால் மெஹர் பல நுணுக்கங்களைத் தொட்டுப் போகும் படைப்பு. பாயம்மா சிறுகதை பாயம்மாவை ஒரு படி மேலேற்றுகிறது. ஆனால் மெஹர் பாயம்மாவுக்கும் அவருக்கு இணையாக அவரது மகனுக்கும் ஓர் இடத்தை வழங்குகிறது. மெஹரின் முடிவு கொஞ்சம் பிரசாரத்தனத்தோடு முடிகிறது. பாயம்மாவின் முடிவோ ஒரு லட்சியத்தோடு முடிகிறது. இரண்டுக்கும் அடிநாதம் ஒன்றுதான். அந்த அடிநாதம் மெஹரில் மட்டுமே மிக அழகாக பல இடங்களில் தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது.

தாமிராவின் இந்த மெஹர் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஒரு சிறிய கதையின் பொறியே போதும், ஒரு சிறந்த திரைமொழியை உருவாக்க முடியும் என்று காட்டுவதற்கு. அதுமட்டுமல்ல, அந்தப் பொறி எவ்விதத்திலும் புதுமையாக இல்லாமல் இருந்தாலும் (பாயம்மாவின் கதையில் எவ்விதப் புதுமையும் இல்லை) திரை உருவாக்கத்தில் கதையைப் பின்னுக்குத் தள்ளி காட்சி அனுபவத்தைப் பல மடங்கு உயர்த்த முடியும் என்பதற்கும் மெஹர் இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பின்குறிப்புகள்:

01. ரெட்டைச்சுழி எடுத்ததற்காக தாமிராவை மன்னித்துவிடலாம்.
02. பாயம்மா கதையில் மோதிரத்தைத் திருடிக்கொண்டு ஓடும் பரசுராமன் கதாபாத்திரம் ஏன் மெஹரில் பரந்தாமன் ஆனது என்று புரியவே இல்லை. 🙂
03. மெஹர் சித்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் பிரபஞ்சன் எழுதியதுதான் என்றால் – ஒருவேளை இப்படி இருந்தால் – பிரபஞ்சன் பாயம்மாவிலிருந்து மெஹருக்கு முன்னேறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 😛

Share

வெண்முகில் நகரம்

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு நாவல்களின் ஒட்டுமொத்த சித்திரம் எவ்வகையிலும் எதனுடனும் நிகரற்றது. என்னால் இதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. இதை ஒரு மனிதன் எழுதினான் என்பதே காலத்தில் மிகப்பெரிய ஆச்சரியமாக நிச்சயம் நிலைகொள்ளும். எழுதிச் செல்லும் இறையின் கைகளே கருவியைத் தேர்ந்தெடுக்கின்றன என்று தத்துவத்தின் வழியே ஜெயமோகன் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுவார்.

இதை எத்தனை பேர் உணர்ந்துகொண்டு படிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் படிக்கவேண்டுமே என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்நாவலைப் படித்துமுடித்த இந்நேரத்தில் இந்நாவல் தந்த நிறைவும் ஆச்சரியமும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. உள்ளமெல்லாம் வெண்முகில் நகரத்தில் பாத்திரங்கள் நிறைத்திருக்கின்றன.

சாத்யகியும் பூர்சிவரஸ்ஸும் கொண்ட எழுச்சி மிக்க சித்திரம் நான் கொஞ்சம் எதிர்பார்க்காதது. அதுவும் இறுதியில் அவர்களை சந்திக்க வைத்ததெல்லாம் நான் கொஞ்சம் கூட யோசிக்காதது. களத்தில் இரண்டு பேரும் முட்டிக்கொண்டு சாத்யகியால் கொல்லப்படப்போகும் பூர்சிவரஸ், முன்னர் ஒருமுறை சாத்யகியைக் கட்டித் தழுவியிருக்கிறான் என்பதே, சந்தேகமே அன்றி அசையச்செய்யும் உருவாக்கமே. இவையேதான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்றாலும், யாரென்றே தெரியாமல் போயிருக்கவேண்டிய இருவர் வரலாற்றின் சித்திரத்தில் இப்படி நிற்கும் காட்சி தரும் நிறைவை, ஒரு வகை அதிர்ச்சியை என்னால் சொல்ல முடியவில்லை.

திருதராஷ்டிரன் முன்னர் பாண்டவ கௌரவர்கள் கிருஷ்ணன் முன்னிலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி, உணர்ச்சிமயத்தின் உச்சம்.

முதற்கனல் தொடங்கி மழைப்பாடல் பிரயாகை எனப் பல்வேறு நாவல்களில் வரும் காட்சிகள் இந்நாவலில் சிறிய நீட்சியென பேசப்படுவதும், அன்றைய நிகழ்வுகள் இன்றைய புராணமாக எப்படி மையத்தைத் தாண்டிய அல்லது மையத்தை முற்றிலுமே இழந்துவிட்ட காவியமாக நிலைபெறுகிறது என்றெல்லாம் தொடர்ச்சியாகப் பார்ப்பதும் மிகவும் அற்புதமாகவே இருக்கிறது. ஏதோ நாம் காலத்தில் மகாபாரதத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது போல.

என்னளவில் பிரயாகையில் கொஞ்சம் நலிந்திருந்த நகைச்சுவை சார்ந்த பகுதிகள் இந்நாவலில் – மிக்குறைந்த அளவே வந்தாலும் – மிகக் கச்சிதமாக உள்ளன. அதிலும் த்ரௌபதி ‘ஆறாவது இளவரசனைப் பார்க்கிறேன் எனக்குத்தான்’ என்று சொல்லும் இடத்தில் – ஜெயமோகன் எழுதுவது போல – வெடித்துச் சிரித்துவிட்டேன்.

கிருஷ்ணரும் பலராமரும் வருவதற்காக ஏற்பாடு செய்யும் நூற்றுவனின் அத்தியாயம் முழுக்க நல்ல நகைச்சுவை. இதுவும் ஒரு காவியத்தின் முக்கியமான சுவையே என்று ஜெயமோகன் முன்பிருந்தே சொல்லி வருவதை நினைத்துக்கொண்டேன்.

பல வகைகளில் அடுத்து வரப்போகும் களங்களுக்கான காட்சிகளை மிக ஆழமாகத் திறந்து வைத்திருக்கிறது வெண்முகில் நகரம். பால்ஹிக நாட்டையும், சிபி நாட்டையும் விவிரித்த விதமெல்லாம் அட்டகாசம். படைப்பூக்கத்தில் உச்சத்தில் இப்படி ஒருவரால் தொடர்ந்து நிற்கமுடியும் என்பதே அசரடிக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் ஜெயமோகனை இளையராஜாவோடு ஒப்பிட்டுக்கொள்கிறேன். ஏனென்றே தெரியவில்லை. ஆனால் இப்படி அடிக்கடி ஆகிவிடுகிறது.

ஜெயமோகன் இதை எழுதும் காலத்தில் நான் அதை வாசிக்க நேர்ந்த அந்த இறைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. வேறென்ன என்று சொல்லத் தெரியவில்லை.

Share

எங் கதெ

எங் கதெ என்னும் கதையைப் படித்தேன். ஆம், இது முதலில் நாவலல்ல. சிறிய கதை. சிலாகிக்க ஒன்றுமே இல்லாத மிகச் சாதாரணமான கதை. பலமுறை பல விதங்களில் சலிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் முறை மீறிய உறவின் இன்னொரு புலம்பல். சரியான வார்த்தை, புலம்பல் என்பதுதான். கதையின் நாயகன் முதலில் இருந்து கடைசி வரை புலம்பிக்கொண்டே இருக்கிறான். ஒரே புலம்பலை எத்தனை முறை கேட்பது? கதை நெடுகிலும் முறை மீறிய உறவை வித விதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லும் மாந்தர்கள் வந்து போகிறார்கள். “காப்பி குடிக்கலாம், கடையை வாங்கலாமா” ரக உதாரணங்கள். சகிக்கவில்லை. ஆண் பெண் உறவின் சிக்கலின் எந்த ஒரு அம்சத்தையும் நுணுக்கமாக சித்திரிக்க முடியாததாலேயே, மிகத் தெளிவாக நாயகன் தன்மொழியில் சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர் இமையம். கதை முழுக்க பெண்களைத் திட்டித் தீர்க்கும் ஆண் வன்மம். அதற்கு ஒரு சமன்குரல்கூட கிடையாது. கள்ள உறவு, வெறி, கழிவிரக்கம், கொலை செய்ய முயற்சி, பின்பு திடீர் ஞானோதயம். இத்தகைய புத்தம் புதிய கருத்துடன் இக்கதையைப் படிப்பேன் என நினைத்தும் பார்க்கவில்லை! நாவலின் மொழி பல இடங்களில் வைரமுத்துவை நினைவூட்டுகிறது. தேவையே இன்றி வரும் திடீர் கவிதைத்தனமான வரிகளுக்காகவே நாயகனை கவிதை வாசிப்பவன் என்று ஆக்கிவைத்துவிட்டார் புத்திசாலி எழுத்தாளர். நான் ரசித்த ஒரே பகுதி, நாயகனின் தங்கைகள் அவன் மேல் காட்டும் அன்பை விவரிக்கும் வரிகளை மட்டுமே. மற்றபடி இந்நாவலில் ஒன்றுமே இல்லை.

Share

இளையராஜாவின் தேசபக்திப் பாடல்கள்

இளையராஜா தேசபக்திப் பாடல்களைப் போட்டதில்லை என்று ஃபேஸ்புக்கில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதையே நினைத்துக்கொண்டிருந்ததில் சிக்கிய பாடல்கள். இவை போக எனக்குத் தெரியாதவை, நான் மறந்தவை எத்தனையோ. இதற்குப் பின்னும் அது இந்தப் பாடல் போல இல்லை, அந்தப் பாடல் போல இல்லை என்றே சொல்லப் போகிறார்கள். பின்னால் பயன்படும் என்ற நோக்கில் அதை இங்கே சேமித்து வைக்கிறேன்.

என்னவோ தேடிப் போய் பல பாடல்களைக் கேட்டபோது உண்மையிலேயே அசந்து நின்றேன். இப்படிப்பட்ட ஒரு கலைஞனை போகிற போக்கில் அவமதித்துச் செல்வது வேறு எங்கேயும் நடக்காது என்றே நினைக்கிறேன்.

நான் பட்டியலிட்டிருக்கும் பாடல்களில் சில நேரடியாக தேசபக்திப் பாடல்கள் வகையில் வருபவை அல்ல. ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் வரும் நல்லதோர் வீணை தேசபக்திப் பாடலென்றால் இவையும் அப்படியே.

சொர்க்கமே என்றாலும், உலகம் இப்போ எங்கோ போகுது (இரண்டுமே இளையராஜா இசை) – இவையும் ஒருவகையில் தேசபக்திப் பாடல்களே. அப்படியென்றால் கீழே உள்ளவையும்தான்.

காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிவப்பு மனிதன்

 

மனதில் உறுதி வேண்டும் – சிந்துபைரவி

https://www.youtube.com/watch?v=vFfKyShYPxk

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே – காமராஜர்

https://www.youtube.com/watch?v=n5m4d3Acg60

 

நண்பா நண்பா – தேசிய கீதம்

 

அண்ணல் காந்தி – தேசிய கீதம்

https://www.youtube.com/watch?v=cOi1ugy72Os

 

என் கனவினைக் கேள் நண்பா – தேசிய கீதம்

 

பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதி

 

 

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் – பாரதி

https://www.youtube.com/watch?v=adzljgaLKQM

 

வந்தே மாதம் ஜெய வந்தே மாதரம் – பாரதி

https://www.youtube.com/watch?v=uuUFLABpiI8

 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட – பாரதி

 

தம்பி நீ நிமிர்ந்து பாரடா – என் உயிர்த்தோழன்

இந்த நாடு இருக்கிற – மக்கள் ஆட்சி

மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

 

போராடடா ஒரு வாளேந்தடா – அலை ஓசை

கத்துக்கணும் கத்துக்கணும் ஒண்ணாயிருக்க – ஒண்ணா இருக்க கத்துக்கணும்

காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டால், நாட்டுப்பற்று என்பது நம் நாட்டில் என்ன இல்லை என்ற விரக்தியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். அந்த வகையில் ’ஏங்கிடும் ஏழையின் கூக்குரல்தான் இங்கு தேசியகீதமடா’ பாடலும் ‘நஞ்சையுண்டு புஞ்சையுண்டு’ பாடலும் ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலும் கூட தேசபக்திப் பாடல்தான்!

கடைசியாக: இப்படியெல்லாம் ஒருவர் என்ன பாட்டு போட்டிருக்கிறார், என்ன போடவில்லை என்று பார்ப்பதெல்லாம் சரியான செயலில்லை. ஒரு கருத்தியல்வாதிக்கு இது பொருந்தி வரலாம். நிச்சயம் கலைஞனுக்குப் பொருந்தி வராது. ஒரு கலைஞன் வெளிப்படையாக மறுத்தவற்றையே நாம் பொருட்படுத்தவேண்டும்.

எத்தனையோ ராஜா ரசிகர்கள் இதைவிட அதிகமான பாடல்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களெல்லாம் என்னை மன்னிக்க. 🙂

Share