மதயானைக் கூட்டம்

சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.


ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.

திரைக்கதையை மிகச் செறிவாக மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சாவும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு கொலைகளும் நம்மை பரபரப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றன. இந்த சாவுக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான விதம் தனியே சொல்லப்படவேண்டியது. பொதுவாகவே இயக்குநர்கள் நுணுக்கமான காட்சிகளில் அத்தனை கவனம் செலுத்துவதில்லை. கதை நிகழும் இடம், அதோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்கள் பேச்சு வழக்கு, அவர்களது பாரம்பரியம் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் பார்த்துப் பதிவு செய்வது மிக முக்கியமானது. பார்வையாளர்கள் இதன் எல்லா நுணுக்கங்களையும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் இந்த நுணுக்கங்கள் தரும் ஒட்டுமொத்த மனப்பதிவு அபாரமானது. அதையே மதயானைக் கூட்டம் சாதித்திருக்கிறது.


நம்மிடம் கதை இல்லை, எல்லாக் கதைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்று சொல்வதெல்லாம் ஹம்பக் என்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கிறது. எத்தனையோ கதைகளை நம் மண்ணோடு பொருத்தி மீண்டும் மிக அழகாக எடுக்கலாம் என்பதற்கு மதயானைக் கூட்டம் இன்னொரு உதாரணம். அந்த வகையில் இது முக்கியமான படம்.


ஒரு சில குறைகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் அளவுக்கு திரைப்படம் சிறந்து விளங்குகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். ஆனால் படத்துக்கு இசை ரகுநந்தன். இளம் படைப்பாளிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது.


இப்படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீரச் சந்தானம் (அவள் பெயர் தமிழரசி), வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்) வரிசையில் இப்படத்தில் வேல ராமமூர்த்தி. விருதும் பெற்றுவிடுவார்.
பாடலாசிரியர் ஏகாதசி இதற்குமுன் என்ன என்ன பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படத்தில் பாடல்களை மிகச் சிறப்பாக, படத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறார்.


இப்படம் தேவர்களின் ஜாதிப் பெருமையைப் பேசுகிறது என்று மேம்போக்கான விமர்சனங்கள் எழக்கூடும். நம் வாழ்க்கையைப் பேசவேண்டுமென்றால், அதற்குரிய சில குணங்களை நாம் பேசித்தான் ஆகவேண்டும். அதை மட்டுமே இந்தப் படம் செய்திருக்கிறதே ஒழிய, வலிந்த ஜாதிப் புகழ் மாலைகள் இல்லை. மிகத் தெளிவாக இப்படம் ஒரே ஜாதிக்குள், அதாவது தேவர்களுக்குள் நிகழும் மோதலையே காட்சிப்படுத்தியிருக்கிறது. அவர்களே அவர்களைப் பற்றிய மிதமிஞ்சிய புகழுரைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களே அவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாறி மோதிக் கொள்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளாகிக் கழுத்தை அறுத்துக் கொள்கிறார்கள்.


மிகச் சாதாரணமான கதையை, அதற்குரிய களத்தில், அக்களத்துக்குரிய விவரணைகளோடு வைத்து, நம் படத்தை நாம் திரையில் பார்க்கிறோம் என்கிற பெருமிதத்தைக் கொண்டு வந்திருக்கிறது மதயானைக் கூட்டம். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால், படத்தோடு எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ஆடுகளத்தில் வசனம் எழுதிய விக்ரம் சுகுமாரன் மிகச் சிறப்பாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறந்த இயக்குநர் விருது நிச்சயம். இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், தயாரிப்பாளர் ஜி.வி. பிரகாஷும் பாராட்டுக்குரியவர்கள்

Share

Comments Closed