என் இன்னொரு சிறு கதைமுகம்

நான் மறக்க விரும்பும் இன்னொரு முகம் இங்கே. 🙂 இதில் கட்டுடைப்புகள், இதுதான் நான் எழுதியவற்றிலேயே சிறந்த கதைகள் எனப் பாராட்டுகளைச் செய்து என்னை வெறுப்பேற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். ,முக்கியமான குறிப்பு – இவையெல்லாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவை. 🙂

உயிர்

“ஐயா, நம்ம வீட்டுக்கு போலிஸ்காரங்க வந்திருக்காங்க” என்று டாக்டர் சிவாவை எழுப்பினான் வேலைக்காரன்.

சிவா பதற்றத்துடன் வெளியில் வந்தான். இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.

“வளசரவாக்கத்துல ஒரு கார்ல குண்டு வெடிச்சிருக்கு. விசாரணைல அது உங்க கார்னு தெரிஞ்சது டாக்டர். காரை ஓட்டிக்கிட்டுப் போனவர் ஸ்பாட்லயே அவுட்.”

சிவாவுக்கு கை காலெல்லாம் நடுங்கியது. “என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர். நேத்து நைட் என் பிரண்டு ஜீவன் காரை எடுத்துக்கிட்டுப் போனான்.”

இன்ஸ்பெக்டர், “சரி, எங்களுக்கு எதாவது தகவல் தேவைப்பட்டா உங்களை கூப்பிடறோம்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சிவா வீட்டுக்குள் சென்று நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தான். படபடப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.

முதல் நாள் இரவு ஜீவன் வீட்டுக்கு வந்ததிருந்தான். கையில் வைத்திருந்த ஃபோட்டோக்களையெல்லாம் காட்டினான். சிவா பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த நிர்வாணப் புகைப்படங்கள். சிவாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அப்ப நான் அனுப்பின மெயில் பாக்கலையா” – ஜீவன் கேட்டான்.

“இல்லையே…”

“ஓ, சரி. நேர்லயே சொல்றேன். ஜஸ்ட் ஒரு கோடி. உன்கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது. இதெல்லாம் நெட்ல வந்தா என்னவாகும்னு நினைச்சுப் பாரு. நீ ஒரு பெரிய டாக்டர், உங்கம்மா, அப்பா, உன் மனைவி எல்லாருமே டாக்டர்கள். இந்த ஒரு கோடியை ஒரு மாசத்துல சம்பாதிச்சிடலாம்” என்றான் ஜீவன்.

“கூடவே இருந்துட்டு இப்படி துரோகம் பண்றியேடா” என்றான் சிவா.

“உன் கூடவேதான் இருந்தேன், ஆனா உன் கூட சரிசமமா இல்லையே. என்கிட்ட பைக்கே இல்லை, உங்கிட்ட காரே இருக்கு. நானும் எப்பதாண்டா பெரியாளாறது?”

சிவாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பக்கத்தில் இருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து ஜீவன் தலையில் ஓங்கி அடிக்க, ஜீவன் மயக்கமாகிவிட்டான். சட்டென டாக்டர் சிவாவின் மூளை யோசித்தது.

ஜீவனுக்கு ஒரு மயக்க ஊசி. யார் யாருக்கோ ஃபோன். பத்து நிமிடத்தில் நான்கைந்து பேர் வந்து அவன் காரில் குண்டு வைத்துவிட்டு, கேள்வி கேட்காமல், பணம் மட்டும் வாங்கிக் கொண்டு போனார்கள்.

ஜீவனைக் காரில் வைத்து, வளசரவாக்கத்தில் ஒதுக்குப்புறத்தில் காரை வைத்துவிட்டு வந்துவிட்டான். காலையில் கார் வெடித்துச் சிதறும்போது  ஜீவனும் சிதறியிருப்பான்.

எல்லாமே கச்சிதமாக நடந்துவிட்டது. சிவா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான். கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தான். ஜீவனிடமிருந்து மெயில் வந்திருக்கிறது என்றது கம்ப்யூட்டர். ஜீவன் இதுபற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“சிவா, நான் கேட்கிறது ஜஸ்ட் ஒரு கோடி. இன்னைக்குள்ள தரலை, நாளை காலையில உன் ஃபோட்டோ எல்லாம் நெட்ல வரும். ஆட்டோமேட்டிக்கா வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன். நீ பணம் கொடுத்துட்டா, அதை டெலிட் பண்ணிடுவேன். இல்லைன்னா அது தானா நெட்ல வரும்.”

சிவாவுக்கு தலை சுற்றியது.

 

கிரிக்கெட்

ஜஸ்ட் ரெண்டே ரெண்டு பந்து. 47.1ஆவது ஓவரில் ஒரே ஒரு வைட் வீசவேண்டும். அடுத்து 49.4ஆவது ஓவரில் ஒரு நோபால். அவ்வளவுதான். சில கோடிகள் கைக்கு வரும்.

அனுஷனுக்கு படபடப்பாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியில் கலந்துகொள்ளப்போகும் 18 வயசுப் பையன். ரஞ்சி போட்டிகளில் ஓர் இன்னிங்கிஸில் 9 விக்கெட் வீழ்த்தி சாதனை செய்து நேரடியாக இந்திய அணிக்குள் வந்தவன் அனுஷன்.
முதல் போட்டியிலேயே இப்படியா! புக்கிகள் என்றார்கள். பணம் என்றார்கள். தனக்கு முதல் போட்டி இது என்றும், இந்தியா தன் தேசம் என்றும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தான். விடாப்பிடியாக இருந்தார்கள். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவனது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று மிரட்டினார்கள்.

அனுஷனுக்கு தன் அண்ணன் தனுஷனின் நினைவு வந்தது. தனுஷன் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதைத் தன் கனவாகக் கொண்டிருந்தவன். 15 வயதில் அவனும் அனுஷனும் திருச்சி பஸ்டாண்டில் ஒரு டிவியில் சச்சின் 100 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதை பட்டப்பகலில் வெயிலில் நின்று பார்த்தவர்கள்.

தனுஷன் சொல்லுவான். நானும் இதை மாதிரி இந்தியாவை ஜெயிக்க வைப்பேண்டா என்று. ஓர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியற அன்று தனுஷன் தூங்கவே இல்லை. அழுதுகொண்டே இருந்தான்.

தலைவலி என்று ஆஸ்பத்திரிக்கு போனவனுக்கு தலையில் கட்டி என்றார்கள். ஆபரேஷன் என்றார்கள். ஒருநாள் ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டுப் போனார்கள். அனுஷனாவது கிரிக்கெட்டில் சாதிக்கவேண்டும் என்று கடைசி நிமிடங்களில் அவன் புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தபோது அனுஷனுக்குக் கண்களில் நீர் வழிந்தது.
ஆனால் முதல் போட்டியிலேயே பெட்டிங். மர்ம ஃபோன் ஒன்று, ‘நீ நாங்க சொன்னபடி செய்யலைன்னா, இனிமே என்னைக்கும் நீ

இந்தியாவுக்கு ஆடமுடியாது’ என்றது. அனுஷனுக்கு ஏன் கிரிக்கெட் விளையாட வந்தோம் என்றிருந்தது.

இந்தியா 210 ரன்கள் எடுத்து 47வது ஓவரில் ஆல் அவுட்டாகியது. நியூஸிலாந்து பேட்டிங். 192 ரன்களுக்கு 9 விக்கெட். இன்னும் 18 பந்துகள் பாக்கி. 19 ரன்கள் எடுத்தால் நியூஸிலாந்து ஜெயித்துவிடும். சரியாக 48வது ஓவரை வீச அனுஷனை அழைத்தான் கேப்டன். அனுஷனுக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது.

அரங்கமே நிசப்தத்தில் இருந்தது. சின்ன பையன், அதுவும் முதல் மேட்ச், இவனைப் போய் இந்த நேரத்துல என்று ஸ்டேடியமே முணுமுணுத்தது. அனுஷன் கடவுளையும் தனுஷனையும் நினைத்துக்கொண்டான். ஓடிவந்து கடும் வேகத்தில் கடும் கோபத்தோடு பந்தை வீசினான். சரியான யார்க்கர். பேட்ஸ்மேன் முழித்துக்கொண்டு நிற்க, ஸ்டம்ப் மூன்றும் அந்தரத்தில் பறந்தது. ஸ்டேடியமே ஆர்ப்பரித்தது. அனுஷன் வானத்தில் தனுஷனைத் தேடினான். ‘என் கேரியர் போனாலும் போகட்டும், இந்தியா ஜெயிச்சிடுச்சு இன்னைக்கு, இதுபோதும்’ என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

 

கடவுள்

பிச்சை எடுப்பதுதான் அவனுக்குப் பிழைப்பு. என்ன பெயர் என்றுகூட அவனுக்கு நினைவிருக்காது. ஏன் பிச்சையெடுக்கிறான் என்று கேட்டால் சிரிப்பான். முடிஞ்சா காசு போடு, இல்லைன்னா போ என்றெல்லாம் பதில் சொல்லியிருக்கிறான். கந்தல் ஆடை உடுத்திக்கொண்டு, கையில் ஒரு துணி மூடையைத் தூக்கிக்கொண்டு, பரட்டைத் தலையுடன், கண்கள் எங்கோ அலைமோத, என்னவோ உளறிக்கொண்டு செல்லும் அவனுக்கு இந்த ஊர் வைத்த பெயர் பிச்சைக்காரன்.

நல்ல மதிய வெயில். கடுமையான பசி அவனுக்கு. சோதனையாக யாருமே இன்று காசு போடவில்லை. எங்கே போய் சாப்பிடுவதென்று தெரியவில்லை. கோவிலில் போய் எதாவது சாப்பிடலாமென்றால், இவனை உள்ளேயே விடமாட்டார்கள். ஹோட்டல் பக்கம் போனான்.

சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தது. பசி ஹோவென்று சோற்றுக்காக ஏங்கியது. சோறும் குழம்பும்போட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே போதை தந்தது. வெளியில் நின்று, வருவோர் போவோர்களிடம் ஐயா பிச்சை என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

யாரோ ஒருவர் நின்று,  ‘பிச்சைனு காசு தரமாட்டேன், ஆனா சோறு வாங்கித் தர்றேன், துன்றியா’ என்றார். விதவிதமான பிச்சைகள். சிலர் காசு தர மறுத்து சோறு வாங்கித் தருவார்கள். ஏற்கெனவே பசியில் இருந்த அவனுக்கு கடவுளே நேரில் வந்து பிச்சை போடுவதுபோலத் தோன்றியது. ‘சரிங்க சாமி’ என்றான்.

அவனை ஹோட்டலுக்குள் விடவில்லை. வந்தவர் சர்வரிடம் சொல்லி ஒரு இலையில் சோறும் குழம்பும் காயும் போட்டுத் தரச் சொன்னார். காசு தந்துவிடுவதாகவும் சொன்னார். சர்வர் நிறைய சோறும் குழும்பும் காயும் போட்டு எடுத்துக்கொண்டுவந்து வெளியில் நின்றுகொண்டிருந்த அவனுக்குக் கொடுத்தான்.

சோற்றைக் கண்டதும் அப்படியே அவுக் அவுக்கென்று தின்றான். தண்ணீர் குடிக்கக்கூடத் தோன்றவில்லை. யாரேனும் சோற்றைப் பிடுங்கிவிடுவார்களோ என்ற அவசரம் தெரிந்தது அவன் வேகத்தில். சோறு வாங்கிக் கொடுத்தவர் அங்கே இருந்து பார்த்தார். அவர் தன்னைப் பார்க்கிறார் என்றதும், மீதிச் சோற்றை எடுத்துக்கொண்டு ஓடினான் அவன்.

நன்றாகத் தின்றுவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கப் போனான். நன்றாக சாப்பிட்டதன் மகிழ்ச்சி உடல் முழுதும். எதிரே வந்தவரிடம் பிச்சை கேட்டான். அவர் உடனே ஐம்பது ரூபாய் பிச்சை போட்டார். அவனுக்கு அதிசயமாக இருந்தது.

கொஞ்ச தூரத்தில் ஒரு பையன் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும் சிரித்தான். என்னடா சிரிக்கற என்றான் இவன். இல்லண்ணா, பசிக்குதுண்ணா, சோறே துன்னு நாலு நாளாச்சுண்ணா என்றான். சட்டென்று அவன், ‘வாடா நான் சோறு வாங்கித் தரேன், ஆனா காசு தரமாட்டேன்’ என்று சொல்லி அவனையும் சேர்த்துக்கொண்டு நடந்தான்.

 

அப்பா

இன்று அப்பாவை மேடையில் எல்லார் முன்னாலேயும் கேள்வி கேட்டுவிடவேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவர் வெறும் அப்பா இல்லை, தமிழ்நாடே கொண்டாடும் எழுத்தாளர்.

இன்று அவருக்கு வாழ்நாள் விருது. எல்லாமே சுத்த ஹம்பக் என்று நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவனுக்குத் தெரிந்து அவனது அப்பா என்றைக்குமே அவனது அம்மாவை மதித்துப் பேசியதில்லை. அம்மா என்றாலே அப்பாவுக்குக்

கிள்ளுக்கீரைதான். அம்மாவும் பூம்பூம் மாடு மாதிரி அப்பா எது சொன்னாலும் தலையாட்டுவாள். இவனுக்கு அதைப் பார்த்தாலே பத்திக்கொண்டு வரும்.

ஆனால் ஊரிலோ அப்பாவுக்கு பெரிய எழுத்தாளர் என்று பெயர். பெண்களைக் கொண்டாடுபவர் என்பார்கள். பெண்ணியப் புயல் என்று பட்டம் வேறு!

என்ன ஒரு ஹிபோகிரஸி! இன்று அவர் விருது வாங்கியதும் மேடைக்குச் சென்று மைக்கைப் பிடித்து… அவனுக்குள் ஒரு வெறியே மூண்டது.

அரங்கமே ஆர்ப்பரித்தது. என்ன என்னவோ பாராட்டிப் பேசினார்கள். அதிலும் ஒரு பெண் எழுத்தாளர் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல, ‘பெண் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி எழுதியதைவிட நம் பெண்ணியப் புயல் எழுதியது அதிகம்’ என்று சொன்னார். சாம்பாரில் ஒருநாள் உப்பு கூடிவிட்டால் இந்தப் பெண்ணியப் புயல் அம்மாவிடம் எப்படிக் கரையைக் கடக்கும் என்று தனக்குத்தானே தெரியும் என நினைத்துக்கொண்டான் கண்ணன்.

இன்னொரு எழுத்தாளர் அப்பாவை, ‘தமிழகத்தின் முன்னோடி பெண்ணிய எழுத்தாளர்’ என்று புகழ்மாலை சூட்டினார். அதனால்தான் எல்லாப் பெண்களும் அவரை விழுந்து விழுந்து படிப்பதாகச் சொன்னார். இன்றோடு எல்லாப் பெண் ரசிகைகளும் காலி என்று கண்ணன் நினைத்துக்கொண்டபோது அவனுக்குள் ஒரு குரூர மகிழ்ச்சி பரவியது.

விருதைப் பெற்றுக்கொண்டார் எழுத்தாளர். கைத்தட்டு விண்ணைப் பிளந்தது. இதுதான் கடைசி கைத்தட்டு என்பதுபோல கண்ணனும் கைத்தட்டினான். எழுத்தாளர் பேசப் போனார்.

கண்ணன் அடுத்தது தான் பேசவேண்டும் என்பதற்கு வசதியாக, முன்வரிசையில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

எழுத்தாளர் பேசினார். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தொடக்கத்திலேயே தன் மனைவியைப் பற்றிப் பேசினார். ‘அவள் இல்லையென்றால் நான் இன்று உங்கள்முன் ஒரு மனிதனாகவே நின்றிருக்கமுடியாது. நாயினும் கேவலமான ஒரு மிருமாகவே அலைந்துகொண்டிருப்பேன்’ என்றார். கண்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவர் இன்னும் சொன்னார். ‘என் மனைவி யாரை கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் இதைவிட நன்றாக இருந்திருப்பாள். ஆனால் நான் என் மனைவியைத் தவிர யாரைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் சீரழிந்து போயிருப்பேன்… நான் விருது வாங்கும்போது என் மனைவியும் மேடையில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்…’

அதற்குமேல் கண்ணனால் அங்கு இருக்கமுடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியில் வந்தான். அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

மொபைலை எடுத்து அப்பாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினான்.  ‘அப்பா, ஐ லவ் யூ சோ மச்.’

 

மனை

நம்ம சக்திக்கு பக்கத்துல இருக்கிற காரவீட்டைக் கூட வாங்க முடியலையே என்று சலித்துக்கொண்டான் குப்புசாமி. திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கிற கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள குக்கிராமத்தில் வசிக்கும் தனக்கு, தன் வாடகை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பாழடைந்துபோன காரவீட்டைக் கூட வாங்க வக்கில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

மாரி அவனை கேலி பேசினாள். ‘உங்களை கட்டிக்கிட்டு வந்து நான் வாழ்ந்து…’ என்றாள். அவள் இப்படி பேசுவது இது முதல்முறை அல்ல.
எப்படியாவது இந்த இடத்தையும் உடைஞ்சு கிடக்கிற வீட்டையும் வாங்கிடணும் என்று நினைத்துக்கொண்டான். கேட்டவுடன் வீட்டுக்காரன் சலாம் போட்டுக்கொண்டு கொடுப்பான் என்று அவன் நினைத்தது தவறாகப் போனது.

‘காரவீடு இடிஞ்சு பல வருஷமா கிடக்குன்னாலும், இடம் பொன்னுல்லடே’ என்றான் வீட்டுக்காரன். ‘கூடவே பழகினவன் கேக்க, 60,000 ரூபாய்க்குத் தாரேன்’ என்றான். குப்புசாமிக்கு இந்த இடத்தை எப்படியாவது 20,000 ரூபாய்க்கு முடித்துவிட ஆசை. ஆனால் அது இப்போது நிறைவேறாது என்று புரிந்துவிட்டது.

வீட்டுக்காரனிடம் வீராப்பாகப் பேசினான். ‘இந்த இடத்துக்கு எதுக்கு அம்புட்டு ரூவா? எவனும் வாங்கமாட்டான்’ என்றான். வீட்டுக்காரனும் அதை அறுபது ரூபாய்க்கு விற்றுக் காண்பிப்பதாக சவால் விட்டுவிட்டுப் போய்விட்டான்.

எங்கிருந்தோ ஆள்களைக் கூட்டிக்கொண்டுவந்து வீட்டைக் காண்பித்தான் வீட்டுக்காரன். அறுபது ரூபாய்க்கு வாங்கிப் போட்டால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் என்று வந்தவர்கள் பேசிக்கொண்டது குப்புசாமி காதில் விழுந்தது. அவனுக்கு வயிறு எரிந்தது.

வீட்டுக்காரன் போனதும் குப்புசாமி பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினான். அங்கே வீடு பார்க்க வந்தவர்கள் நின்றிருந்தார்கள். எப்படி என்ன பேசுவதென்று தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் ஆரம்பித்தான்.

‘வீடு பாக்க வந்தீங்களா?’

‘ஆமாங்க. நீங்க?’

‘நான் அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். நீங்க பாத்தது நல்ல வீடுதான்…’ என்று இழுத்தான்.

வந்தவன் கொஞ்சம் நெற்றியைச் சுருக்கினான்.

‘நல்ல வீடுதான்னா…?’

‘இல்லை, பாத்தா பாவப்பட்ட ஆளுங்களாத் தெரியறீங்க.’

‘விஷயத்தை சொல்லுங்க அண்ணாச்சி’ என்றான் வந்தவன்.

அண்ணாச்சி என்று அழைத்ததைக் கேட்டதும், நம்மிடம் வந்தவன் மாட்டிக்கொண்டான் என்று புரிந்து போயிற்று குப்புசாமிக்கு.

என்னென்னவோ பேசினான். வீடு அத்தனை விலை பெறாது அது இது என்று. ஆனால் வந்தவன் இதற்கெல்லாம் மசியவில்லை.

‘இவ்ளோதானா, நாகூட என்னவோ ஏதோன்னு பதறிட்டேன்’ என்றான்.

‘அது மட்டுமில்லைங்க, இந்த இடத்துல பேய் இருக்குன்னு ஒரு பேச்சு’ என்றான் குப்புசாமி. ஏன் அப்படிச் சொன்னோம் என்பது குப்புசாமிக்கே விளங்கவில்லை.

வந்தவன் பதறிவிட்டான்.

‘என்னது பேயா…’ வாயைத் திறந்தவன் மூடவே இல்லை.

குப்புசாமிக்கு சந்தோஷமாக இருந்தது.

‘ஆமாங்க, சொல்லவேணாம்னு பாத்தேன். ஆனா நீங்களும் நம்மள மாதிரிதான். பணக்காரங்க இல்லை. இருக்கட்டும்னு வாங்குறீங்க. அதை நல்லதா வாங்கவேணாமா? அந்த வீட்டுக்குள்ள என்னவோ ஒரு உருவம் அங்க நிக்கி இங்கன நிக்கின்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு. பலவங்க பாத்ததா சொல்றாங்க. அதாம் வீடு இத்தன நாள் மூடிக்கெடக்கு’ என்றான்.

அவன் மட்டுமல்ல, அதற்குப் பின் வந்த பலருக்கும் இதே போன்ற செய்தி சொல்லப்பட்டது. வீட்டுக்காரன் எத்தனையோ சொல்லியும் அங்கே பேய் இல்லை என்பதை யாருமே நம்பவில்லை.

ஊர் முழுக்க இந்த காரவீட்டில் பேய் இருக்கும் பேச்சு அடிபடத் தொடங்கியது.

குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, ‘என்ன அண்ணாச்சி இது, பேய்க்கு இருக்கவா இடமில்ல, உங்க வீட்டுல வந்து இந்த ஆட்டம் ஆடுதே’ என்பான். வீட்டுக்காரன் ‘எல்லாம் தலையெழுத்து’ என்று சொல்லிக்கொண்டே போய்விடுவான். அவன் தலை மறைந்ததும் இடி விழுந்தது போலச் சிரிப்பான் குப்புசாமி.

மாரி இவனைத் திட்டுவாள். ‘ஒனக்கு அந்த இடத்தை வாங்க வக்கில்லைன்னா விடு. ஏன் அடுத்தவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிற’ என்பாள். இவன் கண்டுகொள்ளவே மாட்டான்.

திடீரென்று ஒருநாள் குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்த்துப் பேசப் போனான்.

‘அண்ணாச்சி, எனக்கு இந்தப் பேய் பிசாசுங்க மேல நம்பிக்கை இல்லை. நீங்க சரின்னா நானே இந்த இடத்தை வாங்கிக்கறேன்’ என்றான்.
வீட்டுக்காரனுக்கும் எப்படியாவது இந்த வீட்டை விற்றால் போதும் என்று இருந்தது. அந்த வீட்டில் பேய் இருந்தாலும் இருக்குமென்றே அவனும் நம்பினான். அதை மறைத்துக்கொண்டு, ‘சரி, உங்களுக்குத் தராம யாருக்குத் தரப்போறேன்’ என்றான்.

‘ஆனா 20,000 ரூபாய்தான் தரமுடியும்.’

‘உங்க மனசுப் போல’ என்றான். ஒருவழியாகப் பேரம் முடிந்தது. வீடும் பணமும் கைமாறியது.

காரவீட்டுக்குள் சந்தோஷமாகக் காலடி எடுத்து வைத்தான் குப்புசாமி.

மாரியிடம் சொன்னான். ‘என்னவோ சொன்னியே… ஒரே வருஷம், நான் நினைச்ச விலைக்கு வாங்கினேன்ல’ என்றான். உடைந்த வீட்டுக்குள் சென்று அங்குமிங்கும் ஓடினான். மாரி தலையில் அடித்துக்கொண்டு வெளியே போனாள்.

வீட்டின் ஒவ்வொரு மூலையில் நின்றும் ஓ என்று கத்தினான். எதிரொலி கேட்டது. மீண்டும் கத்தினான். இந்த முறை இன்னொரு ஓ என்ற சத்தம் கேட்டது. ஆனால் அது எதிரொலி இல்லை. குப்புசாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

‘யார் கத்தினது’ என்றான். பதிலே இல்லை. மீண்டும் ஓ என்று கத்தினான். மீண்டும் ஓ என்ற ஓர் அலறல் கேட்டது. குப்புசாமிக்குப் பயம் வயிற்றைக் கவ்வியது. சரேலென்று ஓர் உருவம் அவன் பின்னாலிருந்து சென்றது போல் இருந்தது. குப்புசாமிக்கு தலை சுற்றத் தொடங்கியது.

 

அப்பா மனசு

“இல்ல சரசு, ஒரு பொண்ணுக்கு 18 வயசு ஆயிடுச்சுன்னாலே கல்யாணம் பண்ணிரணும்.”

தன் கணவர் கனகலிங்கம் இன்று அவர் சீரியஸாகப் பேசுவது சரசுவுக்குப் புரிந்தது.

“இல்லைங்க நிறைய படிக்கணும்னு நம்ம பொண்ணு ஆசைப்படுது…” அவளும் பேசினாள்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும். நானே படிக்க வைக்கிறேன்.”

“அது எப்படிங்க முடியும்? கல்யாணம் ஆகி புள்ள குட்டின்னு ஆயிட்டா இது எப்படிங்க படிக்கும்?”

“இல்லம்மா, ஒனக்கு நான் சொல்றது புரியலை. பக்கத்து வீட்டுல இருந்த ரோஹிணி என்ன பண்ணா? அவள எத்தன தடவ உன் வாயாலேயே நல்ல பொண்ணுன்னு சொல்லிருப்ப? திடீர்னு ஒருநாள் ஓடிப்போகலயா?”

“அத மாதிரியாங்க நம்ம பொண்ணு?”

“நீ இப்படிக் கேப்பேன்னு தெரியும். நம்ம பொண்ணு நிச்சயம் இப்படி இல்லைதான். ஆனா வயசுன்னு ஒண்ணு இருக்கு பாரு, அது பொல்லாததும்மா… ரோஹிணிக்கு 18 வயசுல கல்யாணம் ஆயிருந்தா, இப்படி வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தனோட ஓடிப் போயிருப்பாளா?”

“அவ மாதிரில்லாம் எம் பொண்ணு செய்யாதுங்க.”

“நீ என்னை மாத்த பாக்காத. இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ண வேண்டியதுதான்.”

தன் கணவனின் வார்த்தைகளில் இருந்த உறுதியைப் பார்த்து அமைதியாகிவிட்டாள் சரசு.

ரூமுக்குள் படித்துக்கொண்டிருந்த செல்வியின் காதுகளில் அத்தனையும் தெளிவாகவே விழுந்தது. அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

“என்னம்மா படிக்கலையா?” என்றார் கனகலிங்கம்.

“அப்பா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு இருந்தேன்பா” என்றாள் செல்வி.

“சொல்லும்மா…”

“என்னை மன்னிச்சுடுங்கப்பா… நான் டைப் ரைட்டிங் படிக்கப் போற இடத்துல செல்வன்னு ஒருத்தர் இருக்காரு. ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறாரு.  நானும் அவரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்மா. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவர் சொல்லியிருக்கார்பா.”

கனகலிங்கத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்னம்மா சொல்ற? உனக்கு 18 வயசுதாம்மா ஆகுது. முடிவெடுக்கிற பக்குவம் எல்லாம் உனக்கு இருக்கவே இருக்காதும்மா… நீ ஒரு குழந்தைதான் இன்னும். அதைப் புரிஞ்சுக்கோ மொதல்ல. உனக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியாதா…” கனகலிங்கம் படபடவென்று பேசினார்.

செல்வி அவரை நிறுத்தி, “கூல்ப்பா கூல். அது எப்படிப்பா நீங்களே எனக்கு கல்யாணம் செஞ்சா 18 வயசு சரியான வயசாயிடுது. நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு முடிவு பண்ணா தப்பான வயசாயிடுது” என்று கேட்டாள்.

கனகலிங்கத்துக்கு வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

“சரிப்பா, நான் உண்மையை சொல்லிடறேன். எனக்கும் செல்வத்துக்கும் எந்த  லவ்வும் இல்லை. நான் உங்க பொண்ணுப்பா. ஆனா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்ப்பா. நல்லா படிச்சு ஒரு வேலைக்குப்போனப்புறம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா” என்று சொல்லிவிட்டு

ரூமுக்குள் போய்விட்டாள்.

கனகலிங்கம் அப்படியே சிலைபோல நின்றிருந்தார்.

 

நட்பு

‘ஏட்டி, தெனோமும் சத்துணவு தின்னுட்டு எங்கட்டி போற?’ என்றான் சமையன். சங்கி என்ற சங்கர கோமதி தினமும் மதியம் எங்கே போகிறாள் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது சமையனுக்கு.

அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் பெரிய தோப்பு போன்ற பகுதியில் இருந்தது. சுற்றிலும் ஏகப்பட்ட வேப்ப மரங்கள். படிப்பில் அவளுக்கும் இவனுக்கும்தான் போட்டி. மாறி மாறி முதல் ரேங்க் எடுப்பார்கள். இருவருக்கும் இடையில் எல்லாவற்றிலுமே ஒரு போட்டி நிலவியது.

வரிசையில் நின்று சத்துணவு வாங்கிச் சாப்பிட்டதும் சமையன் உள்ளிட்ட எல்லா மாணவர்களுமே வகுப்பில் உட்கார்ந்து எதைப் பற்றியாவது அரட்டை அடிப்பார்கள். ‘ஏழாம் அறிவுல சூர்யா பின்னிட்டாம்லல…’ ‘வேலாயுதம்தாம்ல காமெடியா இருக்கு. ஏழாம் அறிவு அறுக்குல’. ‘டெண்டுல்கர் நூறு எப்பம்ல அடிப்பாம்?’ ஆனால் சங்கி மட்டும் அங்கே இருக்கமாட்டாள். வகுப்பு தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னே ஓடி வந்து உட்காருவாள். இவ்வளவு நேரம் எங்கே இருந்தாள்? யாருக்கும் தெரியாது.

இன்று சங்கிக்குத் தெரியாமல் அவள் எங்கே போகிறாள் என்பதைப் பார்த்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் சமையன். அவளுக்குத் தெரியாமல் அவளுக்குப் பின்னே போனான். வகுப்பிலிருந்து கண்ணுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்று, அங்கே இருந்த இன்னொரு தோப்புக்குள் சென்றாள் சங்கி.

சோலை போல இருந்த அந்த இடத்தில் ஏகப்பட்ட வேப்ப மரங்கள் இருந்தன. அந்த மரங்களுக்குக் கீழே வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். பறவைகள் சூப்பிப் போட்ட வேப்ப முத்துகளும் இருக்கும். அவற்றையெல்லாம் சங்கி பொறுக்குவதை சமையன்  பார்த்தான்.

‘என்னத்தட்டி பொறுக்கிக்கிட்டு இருக்க?’

சங்கி திடுக்கிட்டுப் போனாள். இப்படி வேப்பமுத்து பொறுக்குவதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கிவிடுவானோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

‘ஏல, யார்கிட்டயும் சொல்லிடாதல. இதை விலைக்கு போட்டா காசு தருவாங்க. அதை வெச்சு நான் நோட்ஸ் வாங்குவேம்ல. எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கல, ப்ளீஸ்ல’ என்று அழாத குறையாகக் கெஞ்சினாள்.

‘மாட்டினியாட்டி நீ, எல்லார்கிட்டயும் சொல்லுதெம் பாரு’ என்று சொல்லிவிட்டு ஓடினான் சமையன்.

அன்று மதியம் வகுப்பு தொடங்கியதும் சற்று தாமதமாக வந்தாள் சங்கி. உடனே அறிவியல் டீச்சர், ‘ஏண்ட்டி லேட்டு, எங்கன சுத்திட்டு வார’ என்றார். சட்டென்று சமையன் எழுந்தான். சங்கிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அழுகை வந்தது. சமையன், ‘டீச்சர், அவங்க பாட்டிக்கு ஒடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு பாக்க போனா, உங்ககிட்ட சொல்லச் சொன்னா, நாந்தான் மறந்துட்டேன்’ என்றான்.

சங்கி கண்களாலேயே அவனுக்கு நன்றி சொன்னாள்.

(என் சுயசரிதையில் மட்டுமே இந்நிகழ்வுகளைக் குறிப்பிட எண்ணியிருந்தேன். ஆனாலும் ஒரு பக்கக் கதை எழுதும் சமூகம் என் கதைகளின் வழியே பயனடையட்டும் எனக் கருதி இப்போது வெளியிட்டுள்ளேன். நாளை அடுத்த பாம்.)

Share

Comments Closed