Archive for July 23, 2011

காஞ்சனா – விடாது தமிழ்ப்பேய்

* தமிழில் பேய்ப்படங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கிறது காஞ்சனா. பயமே இல்லாமல் பார்க்கலாம். 🙂

* அதே சரக் சரக் பேய், திடும் திடும் பேய். அதே தமிழ்ப்பேய்.  அதே ஓவர் ஆக்டிங் பேய். எல்லாம் சரி. கதையுமே அதுவேயா? முனி1ஐ அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஃப்ளாஷ் பேக் கதையை மாற்றிவிட்டார்கள். முனி1ன் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்கு முன்னர் வந்த பல பேய்ப்படங்களைப் போலவே அதுவும் எடுக்கப்பட்டிருந்ததுதான்.

* கமல்ஹாசன் நடித்து தேசிய விருது பெறுவார் என்று 1990களில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரவாணி கேரக்டரை சரத்குமார் பண்ணியிருக்கிறார். நடிக்கவே வரவில்லை. பிரகாஷ் ராஜ், சரத்குமார் என இவர்கள் நடிக்கவே வராமல் அரவாணி போல் நடிப்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. இவர்களுக்கு இப்படி நடிக்க தைரியமாவது இருக்கிறது. கமலுக்கு எப்போது வருமோ.

* ஒரே ஆறுதல் அரவாணிகளை அசிங்கப்படுத்தாமல் உயர்ந்த நோக்கில் காட்டியிருப்பது. அரவாணிகளைப் பற்றிய ஓர் உண்மையான திரைப்படம் வரும்வரையில் இது போன்ற முயற்சிகளைப் பாராட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

* முனி1க்கும் 2க்கும் வித்தியாசம் காட்ட, அரவாணி, இஸ்லாமியப் பேய் ஓட்டும் முறை என்று என்னவோ காட்டிவிட்டார்கள்.

* அநியாயத்துக்கு படம் நீளம். இடைவேளைக்குப் பிறகுதான் காஞ்சனாவே வருகிறாள். இதுகூட ஓகே. கொலை, ஃப்ளாஷ்பேக் எல்லாமே இடைவேளைக்குப் பிறகு என்றால் ஒரு மனுஷன் தாங்கவேண்டாமா ஐயா?

* முனி1ல் எப்படி நடித்தாரோ அதையே மீண்டும் நடித்துவிட்டுப் போய்விட்டார்கள் ராகவா லாரன்ஸும், கோவை சரளாவும். நல்லவேளை, வினுச்சக்கரவர்த்தையைக் கொன்றுவிட்டார்கள்.

* பாடல்கள் இது பேய்ப்படம்தான் என்பதை உறுதி செய்கின்றன. பின்னணி இசையும் அப்படியே.

* முனி1 பெரிய ஹிட் இல்லை. ஆனால் இந்தப் படம் ஹிட்டாகும் வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. கொஞ்சம் எடிட் செய்து டிரிம்மாக்கி இருந்தால் நிச்சயம் பெரிய ஹிட் ஆகியிருக்கும்.

* படத்தின் உச்சகட்ட திகில் காட்சி கடைசி ஸ்லைடுதான். முனி3 வருமாம். கிறித்துவப் பேய் ஓட்டும் முறை மீதி உள்ளது என்னும்போது ராகவா லாரன்ஸை என்ன குற்றம் சொல்லமுடியும். 3 முக்கிய மதங்களை  மட்டுமே நமக்குக் கொடுத்த அந்த இறைவன்தான் எவ்வளவு கருணைக்குரியவன்.

Share

காலில் விழுதல்

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒருமுறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட அரசர் போல பேசிக்கொண்டிருந்த அவர் உள்ளே சென்றதும் ஸ்வாமியைக் கண்டதும் யாதுமற்றோர் ஆண்டியாகப் பொத்தென காலில் விழுந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் காலில் விழுந்தேன். அரவிந்தன் அவர் உடல் முழுக்க மண்ணில் பாவ காலில் விழுந்தார். நான் ஸ்டைலாக வேறு வழியில்லாமல் காலில் விழுவது போல விழுந்தேன். காலில் விழுவது என்றாலே ஒருவித அலர்ஜி. 90களில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்பட்ட எரிச்சலால் இருக்கலாம். யார் காலில் யார் விழுவது என்ற விவஸ்தை இல்லாமல் ஜெயலலிதா காலில் எல்லாரும் விழுவது குறித்து பெரிய எரிச்சல் இருந்தது. அதைத் தொடர்ந்து காலில் விழுவதே கேவலம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது. அரவிந்தன் ஸ்வாமிஜி காலில் விழுந்ததும், எனக்கு அவர் காலில் விழவேண்டும் என்ற ஒரு நெருக்கடி உண்டாகி, அதைத் தவிர்க்க முடியாமல்தான் ஸ்வாமிஜி காலில் விழுந்தேன். ஸ்வாமிஜி காலில்தானே விழுந்தோம் என்று மனதை எவ்வளவு தேற்றிக்கொண்டாலும் இப்படி காலில் விழும்படி ஆகிவிட்டதே என்று மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அரவிந்தனிடம் என்ன இப்படி திடீர்னு விழுந்திட்டீங்க, எனக்கும் வேற வழியில்லாம விழவேண்டியதாப் போச்சு என்றேன். எனக்கு விழணும் விழுந்தேன், உங்களுக்கு வேண்டாம்னா விழவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இன்னும் எதாவது கேட்டால், இங்கன பாத்துக்கிடுங்க என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

22ம் வயதில் எனக்குப் பூணூல் போட்டார்கள். வயதானவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும். அம்மா சொல்ல சொல்ல நானும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தேன். என் அக்காவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் 4 வயதுதான் வித்தியாசம் இருக்கும். ரொம்ப அழகா இருக்காங்கள்ல என்று மரியாதையுடன் அந்த அக்காவை நண்பர்களுடன் சைட் அடித்திருக்கிறேன். எதிர்பாராத ஒரு நொடியில் என் அம்மா அவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிவிட்டார். இந்த அம்மாவைக் கொலை செய்தால்தான் என்ற என்று தோன்றிவிட்டது. அந்த அக்கா சென்றதும் என் அம்மாவை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன். என் திருமணத்துக்கு முன்பாக என் அம்மாவிடம் நானே யார் கால்ல விழணுமோ அவங்க கால்ல விழுவேன், நீ சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

இணையக் குழுமம் ஒன்றில் இப்படி காலில் விழுவது பற்றிப் பேச்சு வந்தபோது, காலில் விழுவது தேவையற்ற செயல் என்று சொன்னபோது, அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிட்டார்கள். சொந்தக்காரர்கள் காலில் திருமணத்தில் விழுவது வேறு, கண்ட கண்ட மேடைகளில் இப்படி அரசியல்வாதிகள் காலில், குரு என்று சொல்லி மாஸ்டர்கள் காலில் விழுவதையெல்லாம் என்னால் சகிக்கமுடியவில்லை என்று சொன்ன நினைவு. ஆனால் காலில் விழுவதே இந்திய மரபு என்று தீர்ப்படித்துவிட்டார்கள். என்ன இந்திய மரபோ! இந்த இந்திய மரபில் ஏதோ ஒரு வகையில் அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே தோன்றுகிறது. முதலிரவில் கணவன் காலில் மனைவி விழவேண்டும். மனைவி கணவன் காலில் விழவா முதலிரவில் காத்துக்கொண்டிருப்பார்கள்? ஆனால், அத்தை மாமா சொல்லி அனுப்பினாங்க என்று சொல்லி, நான் எத்தனையோ மறுத்தும், 19 வயதுப் பெண் அப்படித்தான் காலில் விழுந்தாள். இந்தச் சடங்கும் நல்லதுக்குத்தான். அதற்குப்பின் நான் எத்தனையோ தடவை கெஞ்சியும் அவள் சொன்ன பதில், நான் என்ன லூஸா உங்க கால்ல விழுறதுக்கு என்பதுதான். வரலக்ஷ்மி விரதத்தில் மட்டும் வேறு வழியில்லை, மனைவி கணவன் காலில் விழுந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்தப் பண்டிகை வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து தொலைக்கிறது.

தினமும் மனைவி கணவன் காலில் விழுந்தால் குடும்பத்துக்கு நல்லது என்று எனக்குத் தூரத்து உறவான ஒரு அக்காவின் மாமியார் சொல்லிவிட்டார். அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கும்போது அந்த அக்கா தன் கணவனின் காலில் விழுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்பலேர்ந்து இதெல்லாம் என்றேன். மாமியார் சொல்லியிருக்காங்க, குடும்பத்துக்கு நல்லதாம் என்றார். ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரவு நெடுநேரம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படியே தூங்கப் போய்விட்டோம். திடீரென்று அந்த அக்கா ஏன்றீ ஏன்றீ என்று தன் கணவனை பதட்டத்துடன் அழைத்தார். அந்த அண்ணன் ரெண்டு ரூம் தள்ளி ஓரிடத்தில் படுத்திருந்தார். தூங்க ஆரம்பித்திருந்தார். தூக்க கலக்கத்துடன் என்ன என்றார். ஒரு நிமிஷம் இங்க வாங்க, கால்ல விழ மறந்துட்டேன், காலை காமிச்சுட்டுப் போங்க என்றார். அவர் புலம்பிக்கொண்டே எழுந்து வந்து காலைக் காண்பித்தார். அக்கா உடலை கொஞ்சம் கூட நகட்டாமல் படுத்தமேனிக்கு தன் கணவனின் காலை லேசாகத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தேங்க்ஸ்றீ என்றார். நான் தலையில் அடித்துக்கொண்டேன்.

இத்தனை காலில் விழுதலும் வேறு மாதிரியானது.

நேற்று நாதஸ்வரம் நாடகத்தில் வேறு ஒரு மாதிரியாகக் காலில் விழுந்தார்கள். 4 வாரங்களாக செம அறுவையாகப் போய்க்கொண்டிருந்த நாடகத்தில், இனிமே இந்த எழவைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று புதுக்கதையை நுழைத்து கொன்றெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராமல் உணர்ச்சி மயமான கட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு. நான் முதலிலேயே இந்தக் காட்சியை எதிர்பார்த்தேன். ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு சின்ன பெண்ணின் காலில் விழுகிறது, அவள் வீட்டை விட்டு ஓடிப் போய்விடக்கூடாது என்பதற்காக.

18 வயதில் பாலகுமாரன் நாவல்களை ஒன்றுவிடாமல் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். மொட்டைமாடியில் அவள் தலை வழியாக நைட்டியைக் கழற்றினாள் போன்ற வரிகள் எல்லாம் வாழ்நாளுக்கும் துரத்தி அடிக்கும். பதின்ம வயதுகளில் பாலகுமாரனைப் படிக்காமல் விட்டவர்கள் நிச்சயம் எதையோ இழந்தவர்கள்தான். அவரது நாவல் ஒன்றிலும் பழுத்த பிராமணர் ஒருவர் இப்படித்தான் தடால் என்று யார் காலிலோ விழுவார். நாவல் பெயர் நினைவில்லை. அந்த வரியைப் படித்தபோது உடலெங்கும் அதிர்வு பரவியது நினைவுக்கு வந்தது. வேர்கள்.

என் அத்தைக்கு 16 வயதில் திருமணம். என் தாத்தாவுக்கு அப்போது 60 வயது. கல்யாணத்தில் காப்பி வர லேட்டாகிவிட்டது. என் மாமாவின் அக்கா காப்பிக்காக பிரச்சினை செய்து, தன் தம்பியை தாலி கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பெரிய களேபரம் ஆகிவிட்டது. என் தாத்தா தன் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு கடும் கோபத்தோடு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் மாமாவின் அக்கா காலில் விழுந்துவிட்டார். எப்படியோ கல்யாணம் ஆகவேண்டும் என்பதற்காக. நான் இதனைப் பார்த்த நினைவில்லை. ஆனால் என் அம்மா உணர்ச்சி வேகத்தோடு தன் மாமனார் காலில் விழுந்ததை விவரித்தது, நான் கூடவே நின்று பார்த்த உணர்வை உண்டாக்கிவிட்டது. ’அத்தனை பேரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க தாத்தா, நல்ல கனமான உடம்பு. அங்காரக்ஷதை நெத்தில தீர்க்கமா இருக்கும். கோஜன (கோபிக்கட்டி) முத்திரை எல்லாம் பார்த்தாலே பெரிய மனுஷன்னு கும்பிடத் தோணும். ஹெ எம்மா வேற இருந்திருக்காரா ஊர்ல நல்ல மரியாதை. நல்ல படிப்பு. ஆனா முன்கோபி. கோபம் வந்துட்டா என்ன செய்யறோம்னே இல்லை. உங்க பாட்டிக்கு கோவில்தான் கட்டணும். இப்படி ஒரு மனுஷன் கூட் வாழறதே தவம் மாதிரிதான். ஊர் மொத்தமும் கல்யாணத்துக்கு காத்துக்கிட்டு இருக்கு. இவளானா காப்பி வல்லைன்னு குதிக்கிறா. அப்பல்லாம் ஏது ஃபோன்? பால் லேட்டுன்னா என்ன பண்றது? இவ காப்பி இல்லைன்னா கல்யாணம் இல்லைங்கிறா. எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. உங்கப்பா நான் காப்பி வாங்கிட்டு வரேன்னு ஓடறார். இவ பால் வந்து எனக்கு இங்க காப்பி போட்டாகணும்ன்றா. பார்த்தார் உங்க தாத்தா. சபைல அவ முன்னாடி வந்து நின்னார். தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டார். எப்படியோ கல்யாணத்தை பண்ணுங்கன்னு சொல்லி கை கூப்பிக்கிட்டு பொத்துன்னு சபை முன்னாடி அவ கால்ல விழுந்துட்டார். பஞ்சகச்சை கட்டிக்கிட்டு ஒரு பிராமணன் இப்படி கால்ல விழுறதைப் பாத்துட்டு எல்லாரும் பதறிட்டாங்க. எனக்கானா அழுகை ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம். அவ அருகதை என்ன இவர் தகுதி என்ன. அவ வயசு என்ன இவர் வயசு என்ன. ஆனா கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமே. அப்புறம் அவ தன் தம்பியை தாலி கட்ட விட்டா. அந்த பிராமணர் கால்ல விழுந்த சாபம் சும்மா விடுமான்னு ஊரே பேசிக்கிட்டு இருந்தது.’

இது நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு எங்கள் தூரத்து சொந்தத்தில் இன்னொரு கல்யாணம் நடந்தது. அங்கேயும் எதோ பிரச்சினை. வீட்டு மாப்பிள்ளையை புது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வீட்டு மாப்பிள்ளை ஆட ஆரம்பித்துவிட்டார். சண்டை பெரிதாகி பெரிதாகி ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையின் தாய் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த புது மாப்பிள்ளை சட்டென முன்னே வந்து, என்னவோ அம்மா தப்பு பண்ணிட்டாங்க, மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி, கல்யாண வேஷ்டி சட்டையுடன் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு என் அண்ணாவும் சென்றிந்தார். காலில் விழுந்த கூத்து முடிந்ததும், அந்த மாப்பிள்ளையின் தாய்மாமா என் அண்ணாவைக் காண்பித்துச் சொன்னாராம். இதோ நிக்கிறானே இவன் தாத்தா ஊரே மெச்சின பெரிய மனுஷன். அவரே தன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணுமேன்னு கால்ல விழுந்திருக்கார். நாமல்லாம் எம்மாத்திரம் என்றாராம். 30 வருடங்கள் கழித்து என் தாத்தாவின் செயல் ஒரு மண்டபத்தில் பேசப்பட்டதில் என் அண்ணாவுக்கு இனம் புரியாத சந்தோஷம், பெருமை. எனக்கும் அப்படியே.

என் தாத்தா காலில் விழுந்து 35 வருடம் கழித்து, என் மாமாவின் அக்கா மகனுக்கு கல்யாணம் நடக்க இருந்தது. கல்யாணத்துக்கு 1 மாதம் முன்பு என் மாமாவின் அக்காவின் கணவர் இறந்துவிட்டார். துக்க்கத்துக்கு வந்த என் மாமா தன் அக்காவைப் பற்றி எங்களிடம் சொன்னது, ஒரு பெரிய மனுஷனை காலில் விழ வெச்சா இப்படித்தான் ஆகும் என்றார்.

Share

நித்தியானந்தா – அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி

ரஞ்சிதாவுக்கும் நித்யானந்தாவுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்பது தேவையற்ற ஒன்று. பிரமச்சரியத்தை வலியுறுத்திய ஒருவர், தனியறையில் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்பது அவரது நேர்மையின்மையைப் பறைசாற்றுமே ஒழிய, அவர் சட்டப்படி தவறு செய்கிறார் என்றாகாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒருவரின் படுக்கை அறையில் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டது முதல் தவறு. அந்த ஆபாச சிடியை சன் டிவி மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பி, குழந்தைகள் பெண்களை அருவருப்படையச் செய்தது இரண்டாவது தவறு. நித்யானந்தா செய்த நேர்மையற்ற செயலைவிட இந்த இரண்டுமே பெரிய தவறுகள். இந்த இரண்டு தவறுகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் அக்காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்கிறார்கள். நான் அதனை நம்பவில்லை. ஆனால் அப்படி சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வயதுக்கு வந்த இரண்டு பேர் மனமொத்து தனியறையில் உறவு கொள்வதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஏற்கெனவே மணமானவர்கள்  வேறு (கள்ள) உறவை வைத்திருந்தாலும் அதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். உறவுக்கு அழைத்தல் என்பதுதான் தவறு என்று நினைக்கிறேன். சட்டம் தெரிந்தவர்கள் மேற்கொண்டு சொல்லட்டும். (முன்பு மரத்தடி குழுவில் பிரபு ராஜதுரை இது பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)

ஊரெங்கும் தலைவன் என்றும் தலைவி என்று சொல்லிக்கொண்டு திரியும் பெரிய தலைகளின் படுக்கை அறைக் காட்சிகள் எல்லாம் இப்படி வீடியோவாகி முன்பே வெளியாகியிருந்தால், நித்யானந்தா இன்னும் பிரம்மசாரியாகத்தான் நமக்குத் தோன்றுவார்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி.

Share

நான் நாகேஷ் – சிறிய குறிப்பு

நான் நாகேஷ் படித்தேன். சுவாரஸ்யமான புத்தகம்தான். கல்கியில் தொடராக வந்ததன் தொகுப்பு. பலப்பல சுவாரய்ஸ்மான சம்பவங்கள். நாகேஷ் உண்மையில் பெரிய குறும்புக்காரராகவே வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் ‘நான் நாகேஷ்’ என்ற பெயரை இப்புத்தகம் நிறைவு செய்கிறதா என்று பார்த்தால் பெரிய ஏமாற்றுமே எஞ்சுகிறது. புத்தகம் வெறும் துணுக்குத் தோரணமாக மாறிவிட்டது. நாகேஷின் வாழ்க்கையில் நடந்த சிறிய சிறிய சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவரது வாழ்க்கையில் நடந்த பெரிய விஷயங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை நாகேஷ் அதனை விரும்பியிருக்காமல் இருக்கக்கூடும். இதனால் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய முழுமை கிடைக்காமல் போய்விட்டது. நாகேஷ் பல படங்களில் நடித்தவர். பல அனுபவங்கள் பெற்றவர். இப்படியான ஒருவரின் எண்ண ஓட்டம் அறுந்து அறுந்து ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று கால வரிசைப்படிப் பேசியிருக்கவேண்டும், அல்லது மனிதர்களை முன் வைத்துப் பேசியிருக்கவேண்டும். வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் போல. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டதில், யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்காமல் போய்விட்டது இப்புத்தகம். கமல் கமல்தான், ரஜினி ரஜினிதான் என்றெல்லாம் துணுக்குகளாகப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. இவை எல்லாமே கல்கியில் வந்ததுதானா அல்லது புத்தகமாக்கப்படும்போது ஏதேனும் எழுதி சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இதை மீறி நாகேஷ் விவரித்திருக்கும் பல சமபவங்கள் சுவாரயஸ்மாக உள்ளன. ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்தது, திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்தது, அப்படத்தின் வெற்றி விழாவுக்கு இவர் அழைக்கப்படாமல் போனது, கடன் வாங்க துண்டோடு நடந்து போனது, (கிருஷ்ணன்) பஞ்சுவிடம் சட்டை பொத்தான் எங்கே என்று தேடியது என பல சுவாரயஸ்மான துணுக்குகள். எல்லாவற்றிலும் நாகேஷ் ஏதோ ஒன்றை துடுக்குத்தனமாகச் செய்திருக்கிறார்.

 நாகேஷின் திரைப்பட வாழ்வை அழித்தது எம்ஜியார்தான் என்றொரு பேச்சு உண்டு. அதைப் பற்றியெல்லாம் இப்புத்தகத்தில் மூச்சே இல்லை. கன்னடம் பேசும் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது பற்றியான சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் இல்லவே இல்லை. ஒரே ஒரு வரி வருகிறது, நான் காதலித்த ரெஜினாவைத் திருமணம் செய்துகொண்டேன் என்று. இவையெல்லாம் எதற்கு என்று நாகேஷ் நினைத்திருக்கக்கூடும். நாகேஷ் இன்று இல்லாத நிலையில் அவையெல்லாம் இருந்திருந்தால் ஒரு நல்ல கலைஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சித்திரத்தின் அருமை நமக்குப் புரிந்திருக்கும். அது கை கூடாமல் போனது துரதிர்ஷ்டமே.

 புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-562-2.html

Dial For Books: 94459 01234   |   9445 97 97 97

Share

Facebook Notes – 3

துக்ளக்கில் சாருவின் அறச்சீற்றம் – இலவச விளம்பரம் (07-ஜூலை-2011)

* இந்தியாவில் மதமாற்றம்தான் மதச்சார்பின்மை.

 * உண்மையைச் சொல்வதால் ஹிந்துத்துவவாதி முத்திரை.

 * மதமாற்றத் தடைச்சட்டம் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும்.

 * பூர்வீக மதமான ஹிந்து தர்மத்தை ஒழித்துவிடுவார்கள். (குறிப்பு: ஹிந்து தர்மம் என்பதைக் கவனிக்கவும்!)

 * காங்கிரஸ் அரசு இத்தாலியின் ப்ராக்ஸி.

 கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாயாக அரபி இலக்கியம் உண்டு. வழக்கம் போல டெய்ல் பீஸில் கருணாநிதி அர்ச்சனை.

 இன்றே வாங்குவீர், இப்போதே படிப்பீர்.

 (இது இலவச விளம்பரம்தான். துக்ளக் எனக்கு பணமெல்லாம் தரவேண்டியதில்லை.)

இரண்டாம் குறிப்பு: தமிழ்ஹிந்துவெல்லாம் ஒரு தளமா? சாருவிடம் இருந்து படித்துக்கொள்ளுங்கள் ஐயா.

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும் (04-ஜூலை-2011)

கௌரவம் திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் ஒரு கொலை செய்வார். சிவாஜியின் வாதத் திறமையால் வழக்கிலிருந்து தப்பித்துவிடுவார். அடுத்தமுறை கொலை செய்யாமலேயே அவர் மீது கொலைப்பழி விழுந்துவிடும். சிவாஜியின் வாதத் திறமையையும் மீறி அவருக்கு த்ண்டனை கிடைத்துவிடும்.

 அரசியல்வாதிகளின், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எதோ ஒன்றில் தப்பிக்கிறார்கள். எதோ ஒன்றில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். படத்துக்கும் இவர்களுக்கும் ஒரே வித்தியாசம், இவர்கள் இரண்டிலுமே குற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.

 இன்றைய உதாரணம் சன் டிவியின் சக்ஸேனா. ஹோட்டல் சம்பந்தப்பட்ட தகராறு ஒன்றில் இவர் பெயர் அடிபட்டது. ஆனால் என்ன பிரச்சினை என்பது தெளிவாக வெளியில் வரவே இல்லை. எந்த பத்திரிகையும் கண்டுகொள்ளவும் இல்லை. இன்று இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைதுக்கான புகார் பின்னணியில் உண்மை உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்தது என்றெல்லாம் இனி கருத்துகள் வரலாம். (பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டாலும், கைதுக்கான சரியான காரணங்கள் இருந்தால் அதைச் செய்யவேண்டியதுதான். இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்!) ஆனால் கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்தபோது சன் பிக்சர்ஸின் அதிகாரம் பற்றிப் பலர் புலம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கைது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். போக போக என்னவெல்லாம் நடக்கிறது என்பது தெரியவில்லை. பார்க்கலாம். நிறைய நோட்ஸ் எழுத முடிந்தால் மகிழ்ச்சியே!

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும்.

சானல் 4 & ஜெயா டிவி (04-ஜூலை-2011)

சானல் 4ல் ஒளிபரப்பான போர்க்குற்றங்கள் வீடியோவின் ஒரு பகுதியை ஜெயா டிவி ஒளிபரப்பியதாக அறிந்தேன். நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்பதால், நிகழ்ச்சி ஒளிபரப்பானது உண்மைதானா என்றறிய காத்துக் கொண்டிருந்தேன். ஜெயா டிவி செய்திருப்பது அதன் வாழ்நாள் சாதனை. தமிழக டிவிக்கள் எதாவது இதனைச் செய்யாமல் தமிழ்நாட்டு வெகுஜனங்களை அடையவே முடியாது. ஜெயா டிவிக்குப் பாராட்டு.

இதனை சன் டிவி செய்யவில்லை, கலைஞர் டிவி செய்யவில்லை என்பதைவிட்டுவிட்டு, எல்லா டிவிக்களும் இதை செய்யவேண்டும். அப்போதுதான் ஓரளவாவது இலங்கையில் என்னதான் நடந்தது என்பதன் ஒரு பகுதியாவது தமிழகத்துக்குத் தெரிய வரும்.

மெரினாவில் ‘மெழுகுவத்தி ஏந்தல்’ நிகழ்ச்சி முழுமையாக கவர் செய்யப்படதாதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. பிராபகரன் உயர்த்திப் பிடிக்கப்பட்டது பல ஊடகங்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கலாம். திருமாவேலன் விகடனில் ‘தனி நபர் முழக்கங்களை தவிர்த்துவிட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழத் தாயகம் மட்டுமே என்ற குரல் மட்டுமே உயர்ந்தது’ என்று எழுதியிருக்கிறார். 🙂 ஊடகங்கள் விடுதலைப்புலி ஆதரவு குரலை கண்டனம் செய்துவிட்டாவது, இந்த மெழுகுவத்தி கூட்டத்தை கவர் செய்திருக்கவேண்டும். வழக்கம்போல செய்யவில்லை.

ஊடகங்கள் இனிமேலாவது செயல்படுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

Share

Facebook Notes – 2

புவியிலோரிடம் – பாதி (1-ஜூலை-2011)

பாராவின் புவியிலோரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இது போன்ற ஒரு கதையை (நாவல் என்று சொல்ல இயலவில்லை) நான் வாசித்ததில்லை. முதல் பாகம் வரை படித்திருக்கிறேன். பாராவின் வழக்கமான வரிகள் தந்த தடையை மீறி நாவலுக்குள் நுழைவது ஒரு சவாலாகவே இருந்தது. மேலும் வாசுவாக பாராவையே நினைக்கத் தோன்றுவதையும் மீற முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மீறியதும் நாவல் சட்டெனத் திறந்துகொண்டது. வெளிப்படையான ஒரு அரசியல் பிராமணக் கதையை  இதுவரை யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு இடத்தில் மணிரத்னத்தை நினைவுபடுத்தும் காதல் காட்சிகள். இந்த பாரா எனக்கு புதுசு. ஆயிரம் அபுனைவுகள் எழுதியிருந்தாலும் ஒரு எழுத்தாளன் ஒரு தடமாகப் பதிவு செய்யப்படுவது புனைவில்தான் என்ற எண்ணம் ஒரு அனுபவமாக எழுகிறது. முதல் பாகத்தில் பாரா ராக்ஸ். குறிப்பாக ஆசாரியார் வரும் காட்சிகளில் அவரது மனைவி பேசும் வசனங்கள். ஒரு நாவலுக்குண்டான அழகை சில இடங்களில் பார்க்கமுடிகிறது என்றாலும், அரசியலை சொல்ல நினைக்கும் அவசரமும் கதை சொல்ல நினைக்கும் வேகமும் அதனை உடைக்கின்றன. இரண்டாம் பாகம் நாளை படிக்கப் போகிறேன். சிறிய புத்தகம்தான். வசதி கருதி இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பாதி இன்று, மீதி நாளை.

 

மாவீரன்-லு (30-ஜூன்-2011)

தெலுகு டப்பிங் மாவீரன் படம் பார்த்தேன். எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் ஒரு படம் வந்தால் தமிழ்நாட்டைப் போலவே அதனை தெலுகு சகோதரர்களும் விழுந்து விழுந்து வரவேற்பது கண்டு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை மொக்கையாக இருந்தாலும் ஹைப் கூட்டப்பட்ட ஃப்ளாஷ் பேக்குக்க்கு தெலுகு சகோதரர்கள் அடிமையாகிவிடுவது கண்டு ‘ஆஹா நம் ரத்தமல்லவா’ என்ற மகிழ்ச்சி ஓங்கியது. 50 ஆண்டுகளாக ஒரே காதல் காட்சியை திரும்ப திரும்ப எடுத்தும் அதை விடாமல் ரசிக்கும் தெலுகு மக்களை நினைக்கும்போது நெக்குருகி நிற்கவேண்டியிருக்கிறது. விறுவிறுப்பு என்னும் பேரில் அடுத்தடுத்த காட்சிகளிலேயே அடுத்தடுத்த சம்பவங்கள் தடால் தடால் என நடப்பது கண்டு, நம் உற்ற தோழன் தெலுகு திரைப்படமே என்ற நினைப்பு வந்து நம் நெஞ்சை மயிலிறகால் வருடுகிறது. மறக்காமல் பாருங்கள் மாவீரன். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை டப்பிங் திரைப்படம். வசனம் படு பிரமாதம். ப்ராணன் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னால் மாவீரன் படத்துக்கே 10 டிக்கெட் இலவசம். இதுபோக சென்னைத் தமிழும் உண்டு. ஆஹா. அட்டகாசம். அதிலும் ஹீரோ போட்டிருக்கும் செயின் பல இடங்களில் பூணூலை ஞாபகப்படுத்துகிறது. சிரஞ்சீவிகாருவின் மகன்காரு நடித்து படம்காரு வந்திருக்கிறது. தெலுகுகாருகள் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்களாம். தமிழ்காருகளை நம்பி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நாமும் தமிழ்காருகள் ஆவோம். ஆல் தெலுகு வணிக சினிமா ரசிகர்காருகளுக்கு நம் வந்தனமுலு.


ஜூன் 26, 2011

விடுதலைப் புலிகள் இருந்தபோதுகூட இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர் ஆதரவு என்பதே புலிகள் ஆதரவுதான் என்னும் ஒரு மாயை நிலவியதால், அதிலிருந்து விலகி நிற்க விரும்பிய தமிழகத்தமிழர்களே அதிகம். இன்று புலிகள் தோற்கடிப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பற்றிப் பேசவும் அவர்களுக்காக குற்றவுணர்ச்சியுடன் வருந்தவும் ஆயத்தமாகும்போது, மீண்டும் புலி ஆதரவு கோஷம் தலை தூக்குகிறது. இது நிச்சயம் தமிழகத் தமிழர்களை பின்னடைவு கொள்ள வைக்கும். தமிழகத் தமிழர்களின் ஆதரவே தேவையில்லை என்று எண்ணுபவர்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழக தமிழர்களின் ஆதரவும் முக்கியம் என்று எண்ணுபவர்கள், இந்த புலி ஆதரவு இல்லாமல், தமிழகத் தமிழர்களின், இந்தியர்களின் ஆதரவைக் கோரும் வகையில் செயல்படுவது நல்லது. புலி ஆதரவு என்பது இன்று வரையில் தமிழகத் தமிழர்களுக்கு ஆகாத ஒன்று. இதனை மனத்தில் கொண்டு ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செயல்படுவதே புத்திசாலித்தனம். புலி ஆதரவு இல்லாமல், அதே சமயம் ஈழத் தமிழர்களுக்காக, அவர்களின் இன்னல்களுக்காக மெழுகுவத்தி ஏற்றிய அனைவருக்கும் நன்றிகள். இனி தமிழுணர்வாளர்கள் முன்னெடுக்கப் போவது புலி ஆதரவையா அல்லது ஈழத் தமிழருக்கான ஒருமித்த ஆதரவையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

 

ரஜினி பத்தி நெண்டே நெண்டு வரி (17-ஜூன்-2011)

ரஜினி டிஸ்சார்ஜ் ஆனதும் முதன்முதலாக ஜெயலலிதாவிடம் பேசியதைத் தொடர்ந்து நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் கடும் மனநெருக்கடி அடைந்து ரஜினியின் மனநிலை தொடங்கி நம்பகத்தன்மை வரை அலசி எதற்குமே ரஜினி லாயக்கில்லை என்ற உண்மையை உடைத்துப் போட்டு வடிவேலு போன்ற மன உறுதி கூட இல்லாதவர் என்றெல்லாம் பேசி தங்கள் கறாரான பார்வையையும் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி எங்கே நாம் பேசியது ரஜினி ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து முடிந்த அளவு அவர்களுக்குத் தெரியுமாறு தனது மீது வெளிச்சம் அடித்து குட்டிக்கரணம் அடித்து முடித்து ஏன் கருணாநிதி கூடவே இருந்து ஜால்ரா அடிக்கும்போதே உனக்கு தெரியலையா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அட அப்பவே ஏன்யா நீ கேக்கலை என்ற பதில் கேள்வியையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை முடிந்த அளவு திட்டி ஓய்ந்த ஒரு காலையில் பார்த்தால்

 இந்த ’மூளைகெட்ட பிஸினஸ்மேன்’ ரஜினிப்பய இன்று காலை கருணாநிதியையும் அழைத்து பேசியிருக்கிறார். இப்போதே அதே நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் மீண்டும் முதல் இடத்தில் தொடங்கப் போகிறார்கள் என்ற செய்தி கேட்டு நான் கலவரப்பட்டு நிற்கும் வேளையில் சொல்வதெல்லாம், உங்க மேல டார்ச் அடிச்சுக்குங்க, அது உங்க உரிமை, ஆனா என் முன்னாடி ஆடாதீங்க என்பதுதான்!

Share

இடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள்

இன்று முதல் புதிய வலைத்தளத்தில். இதனை சாத்தியமாக்கிய பா.ராகவன், கணேஷ் சந்திராவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

புவியிலோரிடம் நாவலை படித்தேன். நீண்ட நாள்களாகவே நண்பர்கள் இதனைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாவலில் தொடப்பட்டிருக்கும் கருவைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான நாவல்தான். பாராவின் வாழ்நாள் பெஸ்ட் இந்த நாவல் என்பதே என் கருத்து. பிராமணர்களில் மிக மோசமாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, பிற ஜாதிகளுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டைச் சார்ந்து இந்நாவல் பேசுகிறது. அதிலும் நன்றாகப் படிப்பு வராத பிராமணர்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை இந்த நாவல் முக்கிய பேசுபொருளாக வைக்கிறது.

இனி நாவலை விட்டுவிடலாம். 🙂

இடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு உள்ள சில கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன். இடஒதுக்கீடு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் நிச்சயம் அவசியமானதே. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில்தான் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன.

இடஒதுக்கீடு சமூகநீதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது – என்கிறார்கள். இங்கே சமூக நீதி என்பதை நம் எளிமைக்காக ஜாதி என்று எடுத்துக்கொள்வோம். ஜாதியை ஒட்டியே இடஒதுக்கீடு அமைந்துள்ளது. ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிறக்கும் ஒருவர் அவர் பெறவேண்டிய சமூக நீதிக்காகவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. கச்சிதம். அதில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதில் எனக்குள்ள தார்மிகக் கேள்விகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நான் இதையும் ஏற்கிறேன். ஆண்டாண்டுகாலமாக அமுக்கப்பட்ட, அநீதி செய்யப்பட்ட ஒரு சமூகம் முன்னேறவேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு ஜாதியினருக்கும் (பிறப்பால் என்றே கொள்ளவும்) பொறுப்பு உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இதைச் செயல்படுத்தும்போது ஏன் பிராமணர்களில் (எனவே மேற்படுத்தப்பட்ட சாதிகளில்) உள்ள படிப்பறிவற்ற, அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைப் பலிகொடுக்கவேண்டும்? இதைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசாமலேயே இருக்கிறார்கள். பார்ப்பனீய முத்திரை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.

நான் இங்கே பிராமணர் என்று மட்டும் சொல்வது ஒரு வசதி கருதி மட்டுமே. இதனை ஒட்டுமொத்தமாக மேற்படுத்தப்பட்ட சாதி (ஃபார்வேர்ட் கிளாஸ்) என்றே கொள்ளலாம். எல்லா மேற்படுத்தப்பட்ட சாதிகளும், தங்கள் ஜாதி அடையாளத்தைக் கூடவே வைத்துக்கொண்டு, எப்படியோ ஒருவகையில் இடஒதுக்கீட்டை அனுபவித்துவிடமுடியும் என்கிறார்கள். இது உண்மை என்றாலும், இதைப் பற்றியும் எனக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. என்னுடையே ஒரே கேள்வி, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெறமுடியாத மேற்படுத்தப்பட்ட ஜாதியினரில் உள்ள, (ஒப்பீட்டளவில்) மோசமான கல்வி அறிவும் மோசமான பொருளாதாரப் பின்னணியையும் கொண்டவர்கள் பற்றி மட்டுமே.

உண்மையில் இங்கே சமூக நீதியை அடியொற்றி இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே இடஒதுக்கீடு அடிப்படையாகக் கொண்டிருப்பது சமூக வெறுப்பை. அதனால்தான் பிராமணர்களில் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்களின் கடந்த காலம் தரும் எரிச்சல். கடந்த காலம் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் விட்டுத்தான் ஆகவேண்டும். அதனைக் காரணம் காட்டி இன்றைய நிலையில் பிராமணர்களைப் (அல்லது மேற்படுத்தப்பட்ட ஜாதியினரை) போட்டு வாங்கவேண்டும் என்று நினைத்தால், அது அந்தக் காலத்தில் பிராமணர்கள் செய்துகொண்டிருந்த கேவலமான உயர்ஜாதி மனோபாவத்துக்கு ஈடான ஒன்றேதான் அன்றி வேறில்லை.

யாரோ ஒரு அறிஞர் சொன்னாராம், ஒரு பிராமணர் உயர்ந்தால் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார். இப்படியே பிராமண இனமே முன்னேறிவிடும், எனவே அவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களே இருக்கமுடியாது என்று. நல்ல அறிஞராகத்தான் இருக்கவேண்டும். சிற்றிதழ்களில் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள அறிஞராகவும் அவர் இருக்கக்கூடும். இதனையே மற்ற மேற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு அவர் சொல்லமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். உண்மையில் ஒரு பிராமணர் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார் என்பதெல்லாம் கற்பனை. எத்தனையோ கஞ்சிக்கு இல்லாத, கல்வி அறிவும் இல்லாத பிராமணர்களை எனக்குத் தெரியும். இதே நிலையில் உள்ள பல மேற்படுத்தப்பட்ட சாதியினரையும் எனக்குத் தெரியும். எனவே இதெல்லாம் ஒரு எஸ்கேபிஸம் அன்றி வேறில்லை.

40% வாங்கியவர் டாக்டராவார், 90% வாங்கியவர் டீ ஆத்தணும் போன்ற வரிகளில், முதலில் உள்ளதைக் கூட விட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒரு இந்தியக் கடமை. பின்னது? அது எப்பேற்பட்ட அநியாயம்? உண்மையில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதையும், இதில் உண்மையிலேயே பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி மறுக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள கல்வியறிவால் பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சமூக அநீதி நிகழ்ந்துவிடும்?

இதனைப் பற்றி எந்த ஊடகமும் பேசாது. ஏனென்றால் பார்ப்பனீய முத்திரை என்பது பின் தொடரும் நிழலின் குரல் போன்றது. என்றும் உங்களை விடாது. உண்மையில் பிராமணர்கள் உள்ளிட்ட, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெற இயலாத ஜாதிகளில் உள்ள, கல்வி அறிவு குறைந்த பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். I am happy to be convinced.

நான் பிராமணன் என்பதால் இதனைப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. நான் என்னை பிராமணனாக நினைக்கவில்லை. நான் பிராமணனாக இருக்கவும் இல்லை. மேலும், நான் பிராமணனாக இல்லாமல் இருப்பதற்கும், பிராமணர்கள் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டியதில்லை என்றும் நம்புகிறேன்.

Share