சிதம்பர நினைவுகள்-பாலசந்திரன்சுள்ளிக்காடு
–என் பார்வை
ஒருமுறை குமுதம் ஜங்கஷனில் மகாநடிகன் என்ற தலைப்பில் சிதம்பரநினைவுகள் புத்தகத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிவாஜி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்த பின் (சிவாஜி மீது கொண்டுள்ள மிகப்பெரிய ஆர்வத்தால் ) அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடந்த முறை இந்தியா சென்ற போது வாங்கி, ஒரு வாரத்திற்கு முன்புதான் படித்தேன்.
மகாநடிகன் பற்றிய பாலனின் (பாலசந்திரன் சுள்ளிக்காடு) கட்டுரையைப் படித்த பின்பு மலையாளிக் கூட்டுக்காரனிடம் அவரைப் பற்றிக் கேட்டேன். எழுத்தாளர் என்றும் ஏதோ ஒரு படத்தில் ஹீரோ என்றும் சொன்னான். (தற்கால மலையாளக் கவிதைகள் புத்தகத்தில் ஜெயமோகன் பாலனைப் பற்றிச் சொல்லும்போது அவர் அரவிந்தனின் போக்கு வெயில் படத்தில் நடித்ததாகச் சொல்கிறார்.)
சிதம்பர ஸ்மரண என்ற மலையாள மூலத்தை சிதம்பர நினைவுகளாக கே வி சைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பின் நேர்த்தி சிதம்பர நினைவுகளுக்கு பெரிய பலம்.
இனி புத்தகத்திலிருந்து.. ….
முதல் நினைவே சிதம்பரம் கோயிலுக்குள் நிகழ்ந்ததாக இருக்கிறது. பிள்ளைகள் ஆதரிக்கத் தயாராய் இருந்தும் அவர்களுக்குத் தொல்லை தரவிரும்பாத இரண்டு வயதான பெற்றோர்களைப் பற்றியது. கொஞ்சம் அவர்களின் வாழ்க்கையை விவரித்துவிட்டு, வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தரவாய் இருப்பதைச் சொல்லிவிட்டு கடைசியில் இப்படி முடிக்கிறார்.
“பிரியத்தில் பின்னிப் பினைந்து குழந்தைகளைப் போல அடி வைத்து நடக்கும் அந்த முதிர்ந்த தம்பதிகளில் யார் முதலில் இறந்து போயிருப்பார்கள்.
ரங்கசாமியா? கனகாம்பாளா? “
மனதில் வேதனை படர்வதைத் தவிர்க்க இயலாத அந்த முடிவு வரிகள் பாலனின் டச்.
“பைத்தியக்காரன்”என்ற நினைவுகளில் பழைய நண்பன் தற்போதைய பைத்தியக்காரனைப் பற்றிச் சொல்கிறார். அவனைக் கொண்டுபோய் குளிப்பாட்டி புதிய aaடைகள் அணிவித்து ஹோட்டலில் மசால் தோசை வாங்கிக்கொடுத்து.. .
“ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்து மசால் தோசை கொண்டு வரச்சொன்னேன். சாப்பாட்டைப் பார்த்தபோது மோகனின் கண்கள் மின்னின. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்பது எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது”
கடைசியில் அந்த பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியாமல் யோச்¢க்கிறார் பாலன்.
“திருச்சூரில் இருக்கும் என் நண்பனும் மனோதத்துவ நிபுணருமான ரமேஷிடம் கொண்டு விட்டுவிடலாமா? அவன் வேலை செய்வது பைத்தியக்கார அஸ்பத்திரியில்தான். இல்லையெனில் பாதி ராத்திரியில் மார்த்தாண்டவர்ம பாலத்தில் உச்சியில் கொண்டு போய் மோகனனை கீழே ஆலுவா ஆற்றின் மத்தியில் தள்ளி விட்டு எல்லாவற்றிற்குமாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாமா? அப்படி மோகனனை உலகத்திலிருந்தும் உலகத்தை மோகனனிடமிருந்தும் மீட்டு விமோசனம் கொடுக்க முடியுமா?
இல்லை அதெல்லாம் செய்ய என்னால் முடியாது……
….. அவனை ஆலுவா பஸ் ஸ்டாண்டில் நிர்தாட்சண்யமாக விட்டுவிட்டு அடுத்த பஸ்ஸில் ஏறி நான் எர்ணாகுளத்திற்கு வந்துவிட்டேன்”என்று தொடர்கிறது நினைவு. கடைசியில் அந்த மோகனன் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது பாலனுக்கு.
நூல் முழுதும் பாலனின் வறுமையும் இயலாமையும் விரிந்து கிடைக்கின்றன. நடந்தவற்றைக் கொஞ்சம் கூட மாற்றாமல் பதிவு செய்யும் நேர்மை புத்தகத்தின் முதுகெலும்பு. ஒரு திருவோணத்திருநாளன்று கையில் காசில்லாமல் நண்பனிடம் கேட்டு அவனிடமும் இல்லாததால் , பசிதாங்க முடியாமல் பிச்சை எடுக்கும் அளவிற்குப் போனதாகச் சொல்கிறார். (நண்பனிடம் காசு கேட்கும்போது நடக்கும் சம்பாஷணையின் உச்சத்தில் நண்பன் பாலனுக்கு அறிவுரைகள் சொல்கிறார்: “பாலா.. நீ குருவா நினைச்சிருக்கியே அந்த கடம்பனிட்டையும் சச்சிதானந்தத்தையும் கெ.ஜி. சங்கரன் பிள்ளையையும் அவர்களெல்லாம் ஒழுங்காய்ப் படித்து பாஸாகி நல்ல உத்தியோகத்திற்கும்போய் வாழ்க்கையைப் பத்திரப் படுத்திக்கொண்டுதான் அரசியல் பேசுகிறார்கள். அதைக்கேட்டு உன்ன மாதிரி இருக்குற சில புத்திகெட்டவர்கள் வெறி நாய்கள் போல ஏண்டா சுத்தறீங்க? அந்த சச்சிதானந்தனும் கடம்பனிட்டமும் சங்கரன் பிள்ளையும் ஓணத்துக்கு குடும்பத்தோடு அப்பளம் பழம் பாயாசத்துடன் சுகமாய் விருந்து உண்பார்கள். உன்னைப் பத்தி நெனக்கக்கூட மாட்டாங்கடா..” ) ஓணத்தினத்தன்று வெளியில் திண்ணையில் சோறு போடும் ஒரு வீட்டில் சாப்பாட்டை உண்ண முற்படும்போது அந்த வீட்டுப்பெண் அவள் அம்மாவிடம் “அம்மா அது பிச்சைக்காரனில்ல. பாலசந்திரன் சுள்ளிக்காடு என்கிற கவிஞன். கடம்பனிட்டோடு எங்கள் காலேஜுக்கு கவிதை வாசிக்க வந்தார்”என்கிறாள். மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான் என்று சாப்பிடுகிறார் பாலன்.
வீட்டின் ஆதரவில்லாமலும் வேலையில்லாமலும் படிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது மனைவி கர்ப்பமாகிவிடுகிறார். (“விடுமுறை நாட்களில் ஒரு ஸ்னேகிதன் வீட்டுக்கு நானும் விஜயலக்ஷ்மியும் ஒன்றாய்ப் போயிருந்தோம் அதன் பலன் இது”) மிகுந்த யோசனைக்குப்பின் தர்க்கங்களுக்குப் பின் (ஒரு சமயத்தில் கருகலைக்க மறுக்கும் மனைவியின் கழுத்தை நெறிக்கக்கூடத் தயாராகிறார்) தன்மனைவியை கருகலைக்க சம்மதிக்க வைக்கிறார். பிறக்காது போன மகனுக்காக ஒரு கவிதையும் உண்டு.
“உலகின் முடிவு வரை பிறக்காமல்
போக இருக்கும் என் மகனே
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும்போது
தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத்தவிர-ஆனாலும்
மன்னித்துவிடு என் மகனே”
மகா நடிகனாய் சிவாஜியை விவரிக்கும்போது கொஞ்சம் உயர்வாய்ப் புகழ்கிறாரோ என்று தோன்றுகிறது. ஒட்டுமொத்த புத்தகத்திலும் இப்படித் தோன்றியது இந்த ஒரு கட்டுரையில் மட்டும்தான். மற்ற இடங்களிலெல்லாம் உண்மையைப் பதிவு செய்த பாலன் சிவாஜி பற்றி சொல்லும்போது மட்டும் செயற்கைத்தனத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது யோசிக்கவேண்டியதும். கூட வந்த நண்பர் சிவாஜியிடம் வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து ஒரு டயலாக் சொல்லக் கேட்க பாலன் இப்படித் தொடர்கிறார்.
“சிவாஜி கணேசன் சிறிது நேரம் கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தார். பிறகு மெதுவாகக் குனிந்து இடதுகையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து மெதுவாக நிமிர்ந்தெழுந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது போலத் திரும்பி நின்றார். நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசனல்ல அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீர பாண்டிய கட்டபொம்மன் தான் அது. சூரியன் அஸ்தமம் ஆகாத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரைக்கு நேராக தி தமிழக வீர பௌருஷத்தின் சிங்க கர்ஜனை முழங்கியது…..
………ஒரு இளம் சூட்டினை லஜ்ஜையோடு நான் உணர்ந்தபோது தான் என்னுடைய உள்ளாடைகள் நனைந்தது எனக்குத் தெரிய வந்தது”
1995இல் யாத்ரா மொழி படத்தின் விவாததிற்குச் சென்ற போது பேசியதாகச் சொல்கிறார். வயதான சிவாஜி இவ்வளவு தூரம் பாதிக்கிறார் என்றால் பாலன் அறுபதுகளின் சிவாஜியைக் கண்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்த்தேன்.
முகம் என்ற கட்டுரையில் சேல்ஸ் செய்ய வரும் பெண்ணின் இடையைத் தடவ முற்பட்டு, அவள் பாலனைக் கன்னத்தில் அறைவாங்கியதைச் சொல்லும்போதும் காணும்போதே பாலியல் இச்சையைத் தூண்டும் ஒரு பெண்ணிடம் இருந்து விலகி இருக்க முற்படுவதும் அவளின் தற்கொலைக்குப் பின் பிணமாகக்காணும்போதும் போஸ்ட்மார்ட்டத்திற்குப் பின் மொட்டைத்தலையும் உடையணியாத உடலுமாய்க் கண்டதைச் சொல்லும்போதும் பாலனும் சாமான்யன் என்று தெரிகிறது.
வீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத ஒரு கவிஞனைக்காணும்போது பாலனின் கோபங்கள் வெளியாகின்றன.
மார்த்தா அம்மா என்ற நீக்ரோப் பெண் ஆசிரியையை தென் ஆப்பிரிக்காவில் ஒரு புத்தகக்கண்காட்சியில் எதேச்சையாகச் சந்திக்கிறார் பாலன். அந்தப் பெண்மணி அவள் வீட்டில் பாலனுக்கு காபி விருந்தளிக்கிறாள். அப்போதுதான் பாலன் அந்தப் பெண்மணியின் கைகளில் சில விரல்கள் இல்லாமலிருப்பதைக் காண்கிறார். வெலவெலத்துப்போய் என்ன வென்று கேட்கும்போது,
“போரில் என் ஒவ்வொரு மகனாய்க் கொல்லப்பட்டபோதெல்லாம் அவர்களின் நினைவாக ஒவ்வொரு விரலாய் எங்கள் வழக்கப்படி நானே வெட்டிக்கொண்டேன். பத்துவிரலும் வெட்டப்பட்டு, சில கால் விரல்களையும் இழந்த தாய்மார்கள் கூட எங்கள் இனத்தில் உண்டு”என்கிறாள்.
கடைசி கட்டுரை நோபெல் பரிசு அரங்கிலிருந்து….நோபெல் பரிசு எனக்குக் கிடைத்தாலும் கூட நான் வாங்கமாட்டேன் என்று சொல்லும் பாலன் காரணமாய், “டால்ஸ்டாய் என்ற மகா புருஷனுக்குக் கொடுக்காமல் ஷெல்லி ப்ருதோம் என்ற அல்ப மனிதனுக்கு நீங்கள் இலக்கியத்திற்கான முதல் நோபெல் பரிசைக்கொடுத்தீர்களே! டால்ஸ்டாய் என்ற அந்த மகாகலைஞனுக்கு கொடுக்காத நோபெல் பரிசை, அவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச் சாதாரணமான ஒரு எழுத்தாளனான நான் ஏற்றுக்கொள்ள முடியாது”என்கிறார்.
கமலாதாஸைச் சந்தித்த ஒரு கட்டுரையும் உண்டு.
புத்தகத்தைப் படித்த முடித்த போது தோன்றிய எண்ணம்; அனுபவங்கள்தான் மனிதனை மிகச் சிறந்த கலைஞனாக்குகின்றன. பாலன் அந்த வகை.
கடைசியாய் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கவிதை ஒன்று.
தற்கால மலையாளக் கவிதைகள்-தொகுத்து மொழிபெயர்த்தவர் ஜெயமோகன், வெளியீடு-கனவு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. தொலைபேசி எண்: 4801603.
நின்று போன கைக்கடிகாரம்
நேற்றிரவு என் கைக்கடிகாரம் நின்று போயிற்று.
களிம்பேறிப் போன ஓர் இதயம்
இனி அதில் துடிக்காது
தங்கை பிறக்க நிமிடம் தந்ததும்
பாட்டி இறக்க முகூர்த்தம் குறித்ததும்
இந்த கைக்கடிகாரமே.
ஜாதகத்தின் காரணமும்,
வாழ்வின் இலக்கணமும்,
இந்தக் கைக்கடிகாரமே.
தூக்கத்திற்கு முன் செவி கூர்ந்தால்
இதிலிருந்து இணை ஜீவனின் மூச்சிணைப்பைக் கேட்கலாம்
குண்டடி பட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்
இருளிலும் மினுங்கும் பச்சை ஊசிகளுக்கு
அன்னிய கிரகங்களுடன் உள்ள தீய உறவை எண்ணி
நான் பிரமிப்படைகிறேன்.
டிக் டிக், டிக்-டிக்…
அடிமைகள் கல் உடைக்கும் சத்தம்.
யாகக் குதிரைகளின் குளம்போசை
திக்விஜயிகளின் இரத்தம் தோய்ந்த சாந்தி மந்திரம்
தீர்க்க தரிசிகளின் குற்றுயிரான நாடித் துடிப்பு
டிக் டிக், டிக்-டிக்….
அகதிகளின் காலடியோசை.
மரணம் வழியாக வெற்றி நோக்கி
தற்கொலைப் படைகளின் கனவுநடை!
வெற்றிகொள்ளப்பட்ட வாழ்விற்கு மேலே
எதிரிப் படைகளின் காவல் தாளம்.
நேரமாகவில்லை போலும்
நேரமாகவில்லை போலும்!
மெல்லிய ஊசிகள் சந்திக்கும் கணம்.
ஜனங்களைத் தூக்கிலிட தீர்ப்பளித்த
கோர்ட் கலைகிறது
நான் இனிமேல் காலத்தின் வாதியோ பிரதிவாதியோ அல்ல
நேற்றிரவில் நின்று போயிற்று என் கைக்கடிகாரம்.
***
புத்தகம்: சிதம்பர நினைவுகள்
வெளியீடு: காவ்யா
14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை-600 024.
தொலைபேசி எண்: 4801603.