பென்சில் படங்கள்– ஞானக்கூத்தனின் சமீபத்திய கவிதைகள் தொகுப்பு. ஞானக்கூத்தனுடனான மாலனின் நேர்முகத்தைப் பற்றி பத்ரி அவரது வலைக்குறிப்பில் எழுதியிருந்தார். திண்ணையும் கமல்ஹாசன் படித்துக் கண்ணீர் விட்ட கவிதை என்கிற குறிப்போடு அந்தக் கவிதைத்தொகுப்பைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்திருந்தது.
சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா டுடேயில் அபி எழுதிய பென்சில் படங்கள் மீதான கட்டுரை.
சித்திரமும் கேலிச்சித்திரமும்
— அபி
கவிதை எப்படி இருக்க வேண்டும்? இது என்ன கேள்வி, அது கவிதையாக இருக்கவேண்டும். பெயர், புகழ், உள்-வெளி வட்டங்கள் ஆகிருதிகள் தாண்டி கவிஞனை மதிப்பிட இந்தப் பொது அளவுகோல் போதுமானது.
ஞானக்கூத்தனின் முழுத் தொகுப்புக்குப் பின்னர் வந்திருக்கிறது 87 கவிதைகள் அடங்கிய “பென்சில் படங்கள்”. “அமெரிக்க அசலும் நம்மூர் நகலும்”என்று ஞானக்கூத்தன் மீது பிளேஜியாரிச குற்றச் சாட்டைத் தொடுத்த (சம்பந்தப்பட்ட கவிதை: பறவையின் பிணம்) ஒருவித குரோதத்துக்கும் “படிப்பவருக்குப் பரவசமூட்டும்”, “புதிய அனுபவத்தை உண்டாக்கும்”என்ற புல்லரிப்புப் புகழ்ச்சிக்கும் நடுவே நின்று ஞானக்கூத்தனை மதிப்பிட நீண்ட நடுவெளி நிச்சயமாக இருக்கிறது.
ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை கவிதைகளாகவும் இருக்க முடியும் என்றால் அதற்கு உதாரணம் ஞானக்கூத்தன் கவிதைகள். சுளுவும் நளினமும் ஐரனியும் அந்தக் கவிதைகளுக்கு எந்த வழியாக வந்து சேர்கின்றன என்று யோசிக்க நேர்வதுண்டு. பெரிய ஆழங்களை யாரும் அவரிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் அங்கங்கே எளிய சொற்களில் திடுக்கென ஏதோ ஒரு ஆழம் ஒரு அலட்சிய பாவத்தைப் போர்த்துக்கொண்டு தோன்றுவதுண்டு. அவர் தேடிப் போகாமல் அது தேடி வந்தது என்று சொல்ல முடியும். யேசுவின் சிலுவையை நிர்பந்தமாகப் பறித்து/சுமந்து பார்த்தேன்/யேசுவின் சிலுவையில் பாரமே இல்லை/அவர்தான் முன்பே சுமந்துவிட்டாரே என்ற வரிகளில் இது தெரியும். அந்தக் கவிதைக்கு இருந்திருக்க முடியாத ஒரு கனம் இந்தத் “தான் தோன்றி”வரிகளில் வந்துவிடுகிறது. சரி, ஞானக்கூத்தனுக்கு இணையாக, அவருடன் வந்து, அவரைத் தாண்டு கண்சிமிட்டிப் போகும் கவித்துவ அடையாளங்கள் இந்தத் தொகுதியில் முழுக்க முழுக்கக் குறைந்துவிட்டன என்பதுதான் வாசகனின் முகத்தில் அறையும் உண்மை.
இவை எல்லாம் கவிதைதானா என்று கேட்கச்செய்யும் கவிதைகள் இந்தத் தொகுதியில் நிறைந்திருக்கின்றன. மேம்பாலங்கள், பலமரணஸ்தர், என்ஜின் கொட்டகை, படியும் பிராமணரே படியும், பூகம்பம் (என்ன ஒரு வளவளப்பு..!) .. பட்டியல் நீண்டு போகிறது. ஆரம்பம், நடு, முடிவு என்ற ஆரம்பப் பள்ளிக் கட்டுரைகளின் அமைப்பில் “கவிதை”படிக்க நேர்வது கொடுமை. (ஞானக்கூத்தனுக்கு “மனைவியைக் கனவில் காணும் வாழ்க்கை”யே கொடுமை). பென்சில் படங்கள், வெள்ளத்தனைய மலர்நீட்டம், சிம்மாசனம் போன்ற கட்டுரைகளுக்குத் துணையாக நிறைய கதைகள் ஆடிப்பாடிப் பேசிக்கொண்டு திரிகின்றன. ஆடிகாற்று, வெளிச்சம் வந்தது, சூன்ய சம்பாதனை, பங்க்கா புல்லர், துரத்தும் எண்கள்… நிகழ்வுகள், அவற்றைப் பற்றிய வர்ணனைகள் – என்னமாய்ப் பொங்கிப் பெருகிகிறது எழுத்து! ஆரம்பித்தபின் ஞானக்கூத்தனின் பொறுப்பிலிருந்து அறுத்துக்கொண்டு போகிறது அசிரியச்சந்தம். அங்கங்கே தட்டுப்படும் சுவாரஸ்யங்கள் கவிதையின் முடிவிடத்தைத் தாண்டு தள்ளிக்கொண்டு போகின்றன. சொல்லில், சந்தத்தில் பிடிபடாத கனம் சூழலில் பிடிபட்டது அன்று. இன்றோ சூழல் தானும் வாய் ஓயாமல் பேசுகிறது. அன்றைய “பறவையின் பிண”த்துடன் இன்றைய “ஓர் இரண்டு சக்கரவண்டியின் கதை”யை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.
“நீலமசியை இந்தப் பூக்களின் இதழ்களில் துடைத்துக்கொண்டது யார்?” , “சும்மா நிற்கவும் காலுக்குக் கீழே தண்டவாளங்கள் வைத்திருக்கும் என்ஜினைப் போலொரு ஜீவன் உண்டோ?”, “மிதிபடும் ஒன்று வெல்கம் சொல்லுமா?” (மிதியடி) – இவை ஞானக்கூத்தனின் வரிகள் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. பல கவிதைகள் முந்தைய நல்ல கவிதைகளின் கேலிச்சித்திர நகல்களாகக் காட்சி தருகின்றன.
“மரபைச் சோதித்துத் தமிழ்க்கவிதையை போஷிப்பது”ஞானக்கூத்தனின் லட்சியமாம். “ஆய்தொடி நங்கோய்”, “அடேய் ஆய் அண்டிரா”, “யாம் உம் கிழத்தி”, “அழுங்கல் மூதூர்” – இந்தப் பழந்தமிழ்த் தொடர்களை இரசிக்கமுடியாத நையாண்டிக்குப் பயன்படுத்தி மரபை நன்றாகவே சோதித்திருக்கிறார். இதில் கம்பராமாயண மேற்கோளில் அர்த்தச் சறுக்கல் வேறு! “வன்மருங்கல் வாள் அரக்கர்” – இது அரக்கியர் என்று இருக்கவேண்டும்.
ஞானக்கூத்தனின் சுவாரஸ்ய மோகத்தைத் தாண்டிக்கொண்டு பிறந்திருக்கிற மிகச்சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் உண்டு. அப்பா குறுக்கிட்ட அந்தக் கதை, கண்டான் இல்லாத சொப்பனம் (நீளத்தைப் பொருட்படுத்தத் தோன்றாத ஒரே கவிதை), சுவர்க்கடிகாரம், கரடித்தெரு, பத்திரப் பகிர்வுகள், லூசிக்ரே போன்றவை அவை.
உள்ளடக்கம் இன்னது, இவை என்று வரையறுக்க முடியாமலிருப்பது படைப்பாளிக்கு குறைபாடு அன்று. ஞானக்கூத்தனின் இந்த யதேச்சைத்தன்மை இந்தத் தொகுதியிலும் தெரிகிறது. ஆனால் யதேச்சையின் பழைய அம்சங்களே திரும்பவும் வருகின்றன. இந்தமுறை நீர்த்த வடிவத்தில்! ஞானாட்சரியும் பாரிசும்தான் புதியவை போலும். ஞானாட்சரி ஏதாவது சொல்ல – செய்யவேண்டும். ஞானட்சரி சொன்னால் ஞானக்கூத்தன் கேட்பார்.
நான் எழுதுகிறேன் என்றா பிரக்ஞை பூத நிழலாய் ஞானக்கூத்தன் மீது கவிந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை பெரும்பாலும் கவிதைகளாக இருப்பதில்லை என்ற பொதுவிதிக்கு உதாரணம் சொல்லவும் நாம் ஞானக்கூத்தனையே (இந்தத் தொகுதியைப் பொறுத்த வரை) சுட்டிக்காட்ட நேர்கிறது.