ஹைகூ


கோயில் மணியோசை இரம்மியமானது
கோபுரப் பொந்துகளில்
கிளிகள் உறங்காதிருக்கும்போது.

சங்கிலிபூதத்தார் சாமி வந்து
உக்கிரமானான் பூசாரி
கலவரமடைந்தன கோழிகள்

கட்சிக் கொடிக்கம்பங்கள்கூட
கவர்ந்துவிடுகின்றன
நாய்கள் நனைக்கும்போது

மலைத்திருப்பத்தில்
ஏதோ ஒரு கணத்தில்
வால் பார்க்கிறது இரயில்

மேலிருந்து கீழிறங்கி
மீனைக் கொத்திக்கொண்டு
மீள்கிறது மீன்கொத்தி

போர்வைக்குள் சத்தம்
கொடியில் படபடக்கிறது
பொத்தல்களுடன் பாவாடை

சீரான இடைவெளியில்
துணிதுவைக்கும் சத்தம்
தூங்குகிறது குழந்தை

பயனில்லாத கிணற்றைச் சுற்றி
மக்கள் கூட்டம்
மிதக்கிறது பிணம்

 

Share

Comments Closed