படிமங்கள்


படிமங்கள்

–ஹரன் பிரசன்னா

நின்று விட்ட மழைக்குப் பின்
கூரை நுனியில்
கீழே விழாது
தொங்கிக்கொண்டிருக்கும்
துளி
தெருவிளக்குக் கம்பத்தின்
மஞ்சள் பல்பைச் சுற்றி
சந்தோஷித்திருக்கும்
ஈசல்கள்
தாவணியை முக்காடாக்கி
வெடவெடத்துக்கொண்டு
செல்லும் சிறுமி
என
கவிதை படிமங்கள்.

பிரிந்து ஓடிய பூனைகள்
மறுமுறை
புணரும் நேரம்
மீண்டும்
தூறாதிருக்கட்டும்.
கிடக்கட்டும்
படிமங்கள்.

Share

Comments Closed