Jimmy

Jimmy
–ஹரன் பிரசன்னா

சிஐடி மூஸா என்ற ஒரு மலையாளப்படம் பெரிய திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் நினைவுகள் கொஞ்சம் படத்திலும் மீதி வேறெங்கேயுமோ மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறை வீட்டை அழைக்கும்போதும் “ஜிம்மி எப்படி இருக்குது”என்ற என் கேள்விகள் சமீப காலங்களில் எனக்கே தெரியாமல் இல்லாமல் போனது குறித்த வருத்தம் என்னுள் வியாபித்திருந்தது.

ஜிம்மி என்ற பெயரிட்டதே பெரிய சுவாரஸ்யமான விஷயம். நாய் வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் நச்சரித்து நான் ஓய்ந்து போன ஒரு நாளில் புசுபுசுவென, உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவில் சிறியதாய் ஒரு பொமிரேனியன் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தார் என் அண்ணனின் நண்பர். வீட்டில் பெரிய விவாதத்திற்குப் பிறகு – “இப்ப இருக்குற நிலையில இது அவசியமா? இதுக்கு பாலும் முட்டையும் போடுறதுக்கு எவன் தண்டம் அழுவான், சோப்பு வேற போட்டுக் குளிப்பாட்டணும்.. மனுஷனுகே சோப்பில்லை” – நானும் என் அண்ணனும் அந்தக் குட்டியை வளர்ப்பதென முடிவுக்கு வந்தோம். அம்மாவும் அம்மாவும் முறுக்கிக்கொண்டு திரிய, அண்ணி வேறு வழியில்லாமல் சந்தோஷப்படத் தொடங்க, ஜிம்மி எங்கள் வீட்டில் ஒரு இரவைக் கழித்தது.

மறுநாள் காலையில் வீடு முழுவதும் நாயின் முடி உதிருந்திருந்தது. மீண்டும் பிரச்சனை. நாய் முடி இப்படி உதிர்ந்தால் பிறந்த குழந்தைக்கு (அப்போதுதான் என் அண்ணி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள்) ஆகாதென அப்பாவும் அம்மாவும் ஒரு பாட்டம் தொடங்க அவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.

ஒருவழியாய் அம்மாவும் அப்பாவும் நாயின் விளையாட்டுகளிலும் அன்பிலும் நெகிழத் தொடங்க மிகச்சீக்கிரத்தில் அது வீட்டில் ஒரு நபரானது.

அப்போதுதான் கவனித்தேன். பெயர் என்று ஒன்று வைக்காமலேயே ஆளாளுக்கு ஜிம்மி என்று கூப்பிட்டுக்கொண்டிருந்ததை. பதினைந்து நாள்களிலேயே ஜிம்மி என்பது அதன் பெயரென அது கொஞ்சம் உணர்ந்துவிட்டிருந்தது. திடீரென என்னுள் நாய்க்கு ஏன் ஜிம்மி என்று பெயர்வைக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. உடனடியாய் முடிவுக்கு வந்தேன். இனி அது ஜிம்மியில்லை. வேறு எதாவது பெயர் வைக்கலாமென யோசித்தபோது சட்டென ஒன்றும் அகப்படவில்லை. அண்ணியிடன் கேட்டேன். போடா ஜிம்மிதான் சூட் ஆகுது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அம்மாவிடம் கேட்டபோது “ஏதோ ஒரு எழவு.. கூப்பிடத்தானே.. இதுக்கு என்ன ஆராய்ச்சி?”என்று சொல்லிவிட்டாள். மிகுந்த யோசனைக்குப் பின் வீரா என செலக்ட் செய்தேன். என் அண்ணன் கேட்டுவிட்டுச் சிரித்தார். “பொம்பளை நாய்க்கு வீராவாம். நீயெல்லாம் என்னத்தடா படிச்ச?”ன்னார். அப்படியே வளர்ந்த வாக்குவாதத்தில் கடைசியாய் நான் நாய்க்கு பாட்சா என்று பெயர்வைத்து இரண்டு நாள் அப்படித்தான் கூப்பிட்டேன். என் அண்ணன் போட்டிக்கு அதை குணா என்று அழைக்கப்போவதாக மிரட்ட ஆரம்பித்தார். உங்க ரெண்டு பேர் சண்டையில ஏண்டா ரஜினியையும் கமலையும் இழுக்குறீங்க என்று யார் சொல்லியும் நாங்கள் கேட்கவ்¢ல்லை. ஆனால் இதேல்லாம் இரண்டே நாளில் முடிவுக்கு வந்தது. ஜிம்மி என்று கூப்பிட்டால் மட்டுமே நாய் ரெஸ்பான்ஸ் செய்ய அரம்பித்ததால் வேறு வழியில்லாமல் நான் ஜிம்ம்¢க்கு மாறிவ்¢ட்டேன்.

படம் பார்க்கும்போது நாய் நினைப்பு ஏன் வந்தது என்றால் படம் முழுவதும் ஒரு நாய் வருகிறது. வழக்கம்போல குண்டு கண்டுபிடிக்கிறது, வீர சாகசங்கள் செய்கிறது, பெண் நாயை சைட் அடிக்கிறது, தள்ளிக்கொண்டு போய் புதர்மறைவில் மறைகிறது. அப்போது கேமரா புதரை மட்டும் காண்பிக்க புதர் ஆடுகிறது!!! அடப்பாவிகளா நாய்க்குமா என்ற நினைக்கும்போதே மனம் மேயத் தொடங்க…

என் அண்ணனும் நானும் ஜிம்மியைத் தூக்கிக்கொண்டு anti rabbies ஊசி (சரியான பெயர் தெரியலைங்கோ) போடக் கொண்டு போனோம். டாக்டர் வீட்டில் அவரை விட பெரிய சைஸாய் உயரமாய் இன்னொரு நாய் இருந்தது. அதைப் பார்த்ததும் ஜிம்மி எங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை. ஒரு வழியாய் இதமாய்ச் சொல்லி, கொஞ்சி, கெஞ்சி அதை கீழே இறக்கிவிட பயந்துகொண்டே நின்று கொண்டிருந்தது. ஊசி போட்டு முடித்தவுடன் டாக்டரிம் சில கேள்விகள் கேட்டோம்.

“சார்.. இப்ப இதுக்கு று மாசம் வயசு வுது. எத்தனை வயசுல இதுக்கு செக்ஸ் உணர்ச்சி வரும் டாக்டர்?”

“இன்னும் ஆறுமாசத்துல அது உடலளவுல தயாராயிடும்”

“ஓ.. அப்பக் கண்டிப்பா வேற ஆண் நாயோட சேர்த்து விடணுமா? அப்படிச் செய்யலைனா வயலண்ட் ஆயிடுமா?”

“சே சே.. அப்படில்லாம் ஒண்ணும் ஆவாது. அந்தோ நிக்குது பாருங்க நம்ம நாய். பன்னிரெண்டு வருசமாச்சு.. ஒரு பொட்டை நாயைத் தொட்டது கிடையாது.. 100% பிரம்மச்சாரி.. இன்னைக்கு வரைக்கும் நோ பிராப்ளம்”

ஐயோ பாவமாய் கேட்டுக்கு அந்தாண்டை நின்று கொண்டு ஜிம்மியைப் பார்த்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது டாக்டர் வீட்டு நாய். (“அவுத்து வுடுங்கடா.. என்னென்ன வித்தைலாம் காட்டுறேன் பாருங்க”)

டாக்டர் தொடர்ந்தார்..”அப்படி மூட் வராம இருக்கிறதுக்குக் கூட ஊசி இருக்கு. வேணும்னா அதை வாங்கி ஜிம்மிக்குப் போட்டு விட்டுருங்க. தெரு நாய்ங்க பின்னாடி வந்தாலும் இது ஓடி வந்துரும்”

“சே சே.. அதெல்லாம் வேண்டாம்.”

“அப்ப ஓகே”

“சார் இன்னொரு டவுட்டு. இதே ஜாதியில இன்னொரு ஆண் நாய்கிட்ட கொண்டு போய் விடலாமா? பார்த்த ஒடனே கடிச்சிருச்சுன்னா என்ன செய்யன்னு பயமா இருக்கு.”

“நோ நோ. தெட் வில் நெவர் ஹேப்பண். நீங்க முதல்நாள் கொண்டு போய் ஆண் நாய்கிட்ட நிறுத்துங்க. ரெண்டும் மோந்து பார்த்துக்கும். அப்புறம் ரெண்டு நாள் கொண்டு போய் விட்டு அதே மாதிரி பழக்குங்க. அப்புறம் பாருங்க. எல்லாம் ஜோரா அதுங்களே பார்த்துக்கும்”

“சரி ஒகே சார். வர்றோம்”

நானும் என் அண்ணனும் ஜிம்மிக்குத் தோதான ஜோடியைத் தேடியதில் தோற்றுப் போனோம். ஆனால் ஜிம்மி அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. எப்போதும் போல இருந்தது. பந்து எறிந்தால் ஓடிப்போய் எடுத்துகொண்டு வரும். தெரியாத ஆள் வந்தால் குலைக்கும். ஏய் சும்மாயிருன்னு ஒரு அதட்டு அதட்டுனா “வந்தவங்க நம்ம ஆளு (அட.. தெரிஞ்ச ஆளுங்க!!!) என்று புரிஞ்சிக்கிட்டு சும்மா இருந்துரும். ஒரு நாள் நானோ அண்ணனோ வர்றதுக்கு லேட்டானா சாப்பிடவே சாப்பிடாது. நாங்க வந்து (நாங்க முதல்ல சாப்பிட்டுடுவோம்!!) அதைத் தடவிக்கொடுத்து கொஞ்சுன பின்னாடிதான் சாப்பிடும். அண்ணன் பையன் கைல எது கிடைச்சாலும் எடுத்து ஜிம்மியை அடிப்பான். திடீர்னு முடியைப் பிடிச்சு ஜிம்மியை இழுப்பான். அதுபாட்டுக்கு ஒண்ணுமே நடக்காதது மாதிரி இருக்கும். அவனை ஒண்ணுமே பண்ணாது. நாங்க பார்த்துப் பார்த்துப் பூரிச்சுப் போவோம்.

திடீர்னு எனக்கு துபாய் சான்ஸ் வர, நான் flight ஏறினேன். நான் ஜிம்மியைப் பிரியும்போது 11/2 வயது இருக்கும். ஒருவருடம் கழித்து மீண்டும் ஊருக்குப் போனபோது ஜிம்மியை ஆளைக் காணோம். அம்மாவிடம் கேட்டபோது, “உன்னை மறந்துருக்கும். திடீர்னு புதுசுன்னு நினைச்சுக்கிட்டு கடிச்சிருச்சுன்னா.. அதுதான் கொல்லைல போட்டு பூட்டிருக்கோம்”என்றாள். என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. புதிய ஆள் வந்த சத்தத்தில் அது கொல்லையில் இருந்து குலைத்துக்கொண்டிருந்தது. நான் உள்ளிருந்து ஜிம்மி எனக் கத்தினேன். அவ்வளவுதான். மூடியிருந்த கதவை போட்டு கால்களால் பரண்டவும் முட்டவும் ஆரம்பித்துவிட்டது. “அம்மா திறந்து விடும்மா”என்றேன். அம்மா பயந்தாள். அப்பா சொன்னார்.. உன் குரலை உங்க அண்ணன் குரல்னு நினைச்சுக்கிட்டு அது கத்துது. ஆளைப் பார்த்தா என்ன செய்யுமோ.

என்னால் அதற்குப் பிறகு பொறுமையாய் இருக்க முடியவில்லை. வேகமாய்ச் சென்று கதவைத் திறந்துவிட்டேன். திறந்த வேகத்தில் ஒரு நொடி ஒரே ஒரு நொடிதான்.. என்னைப் பார்த்து சட்டெனப் புரிந்துகொண்டுவிட்டது. அது குதித்த குதியும் துள்ளலும்.. கண்ணில் நிற்கிறது இன்னும். எப்போதும் போல நாயை உப்புமூட்டைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அது பாட்டுக்கு அமைதியாய் இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரியமும் சந்தோஷமும். அந்த விடுமுறை கழிந்து மீண்டும் flight ஏறினேன். அதற்குப் பின் போன இன்னொரு சந்தர்ப்பத்திலும் அது என்னை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பது புரிந்துபோனது.

ஒருவழியாய் சி ஐ டி மூஸா படம் முடிந்துத் தொலைத்தது. வியாழன் இரவு வீடு வந்து படுக்கும்போது மனம் முழுதும் ஏதேதோ நினைவுகள். ஒட்டுமொத்தமாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். “மறுநாள் காலை அண்ணனை அழைத்து முதல்வேலையாய் ஜிம்மி ஜாதியிலேயே மாப்பிள்ளையை நாயைப் பார்த்து, கொண்டு போய் விட்டு வரும்படிச் சொல்ல வேண்டியது”. பின் உறங்கிப்போனேன்.

வெள்ளி காலை (துபாய்நேரம்) 7.00 மணிக்கே செல்·போன் மெசேஜ் என்ற சமிஞ்ஞை காட்டியது. தூக்கக்கலக்கத்தில் பார்த்தேன். மெசேஜ் இப்படிச் சொல்லியது.

“Jimmy expired today morning. Snake might have bitten. we are all in sad. From anna”

என் உறக்கம் போனது.

இப்போதெல்லாம் எல்லா துக்கங்களும் கவிதைக்கான வார்த்தைத் தேடுதலில்தான் முடிகின்றன.

இப்படிக் கிறுக்க்¢ வைத்தேன்.

பூவாசத்துடன்
படுக்கையறை விட்டு
வெளிவரும்போது
இரண்டு கால்களில் நின்று
முகமுரசும் நாயின்
கூரான செழுமையான
மடிகள் சொல்கின்றன
தடையூசிக்கானப் பருவத்தை.

Share

Comments Closed