பத்ரி தினமும் செய்தித்தாள்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் யூடியூப் வீடியோ கிழக்கு நியூஸ் யூடியூப் சேனலில் நேற்றில் இருந்து வருகிறது. சுவாரசியமாக இருக்கிறது. காலையில் வாக்கிங் செல்லும் போது இதைப் போன்ற ஒரு வீடியோ மிகவும் உதவியாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் இதைக் கேட்டுவிட்டால் முக்கியமான செய்திகளில் 25 சதவீதமாவது தெரிந்து கொள்ளலாம். அதிலும் பத்ரிக்கு இருக்கும் உலகளாவிய ஞானம் இதில் பல விஷயங்களை நமக்குச் சொல்கிறது.
இதில் சில சுவாரசியமான விஷயங்களைச் செய்யலாம். ஒன்று, அனைத்துப் பத்திரிகைகளிலும் அந்த செய்தி குறித்து வந்திருக்கும் ஹெட்லைனையும் முதல் இரண்டு வரிகளையும் மேம்போக்காக வாசிக்கலாம். இது நேரத்தைக் கூட்டும் என்றாலும் சுவாரசியமாக இருக்கும். ஒரே விஷயத்தைப் பல பத்திரிகைகள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்க்க உதவியாக இருக்கும். இதை பத்ரியே செய்வது கடினம் என்றால், கூட ஒருவரை வைத்துக்கொள்ளலாம். நிச்சயம் கூட ஒருவரை வைத்துக் கொள்கிறேன் என்று அவர் நேற்றே சொல்லி இருந்தார்.
இன்னொரு முக்கியமான விஷயம், முரசொலி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ்கள் அங்கே இல்லாமல் இருப்பது. முடிந்தால் கி வீரமணியின் பத்திரிகை ஏதேனும் இருந்தால் அதையும் வைக்கலாம். தலைப்புச் செய்திகள் மட்டுமாவது அவற்றிலிருந்து சொல்வது நிச்சயம் சுவாரசியமாகவே இருக்கும்.
அதேபோல் தமிழ்நாட்டளவில் நான்கு செய்திகள், இந்திய அளவில் ஒன்றிரண்டு செய்திகள், வெளிநாட்டு அளவில் ஒரு செய்தி என்று ஒரு வரைமுறை வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் மூன்று நிமிடம் ஒதுக்கினாலே 25 நிமிடங்கள் தாராளமாக வரும். சில சமயங்களில் முக்கியத்துவம் கருதி இவற்றை மாற்றிக் கொள்வதிலும் தவறில்லை.
அதேபோல் ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கும் ஒரு பெயர் இருப்பது நல்லது. நாளை யூடியூபில் தேடும்போது வசதியாக இருக்கும். இப்போது ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு பெயர் வைக்கிறார்கள். கூடவே அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொதுப்பெயர் நிச்சயம் தேவை. அதற்கான ஒரு தனி கேட்டகிரி லின்க் இருப்பதும் நல்லதுதான்.


