அலறவிட்ட அபுதாபி
கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை அபுதாபியில் விமானம் தரையிறங்கும் போது மனதுக்குள் ஓர் எண்ணம். ஒரு டைரியில் சில போன் நம்பர்களைக் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாமே என்று நினைத்தேன். அடுத்த நொடியே, இனி ஏன் குறித்து வைக்க வேண்டும், அதுதான் அபுதாபியில் தரையிறங்கி விட்டோமே என்றும் நினைத்துக் கொண்டேன்.
தரையிறங்கிய உடனே ஜெயக்குமாருக்கு மெசேஜ் அனுப்பவில்லை. அவர் தூங்கட்டும். இறங்கி இமிகிரேஷன் அடித்து விட்டு நமது லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்ட பிறகு அவருக்குச் சொல்லலாம் என நினைத்திருந்தேன். லக்கேஜ் அருகில் வந்தேன். அவருக்கு மெசேஜ் அனுப்ப எனது போனில் இலவச வைஃபை கனெக்ட் செய்தேன். அடுத்த நொடி என்னுடைய போன் லாக் ஆகிவிட்டது. அதாவது தடை செய்யப்பட்டு விட்டது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. எத்தனை செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. லக்கேஜை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். வெக்கை முகத்தில் அடித்தது.
ஜெயக்குமார் உட்பட யாருடைய எண்ணும் என்னிடத்தில் இல்லை. அங்கே இருந்து வாட்ஸ் அப்பில் இன்னொருவர் போன் மூலம் என் மனைவியை அழைக்கலாம் என்றால், வாட்ஸ் அப் கால் அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு என் மனைவி இன்டர்நெட்டை ஆஃப் செய்து வைத்திருந்தாள்.
ஒரு வழியாக ஒருவரைப் பிடித்து இந்தியாவுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று கேட்டேன். இந்தியர்தான். வடநாட்டுக்காரர். ஏதோ யோசித்தவர் சரி என்று ஃபோனைக் கொடுத்துவிட்டார். என் மனைவிக்கு ஃபோன் செய்து அவளை எழுப்பினேன். விஷயத்தை சுருக்கமாகச் சொல்லி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் பார் என்று சொல்லித் துண்டித்து விட்டேன்.
அருகில் இருந்த இன்னொரு தொழிலாளி நண்பர் தமிழ்நாட்டுக்காரர் அவருடைய வாட்ஸ் அப்பில் இருந்து என் மனைவி எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப உதவினார். உடனடியாக ஜெயக்குமார் எண்ணை எனக்கு அனுப்பு என்று சொன்னேன். அவள் அனுப்பிய அந்த நம்பரைப் பார்த்துவிட்டு மனனம் செய்து கொண்டேன். மீண்டும் அதே நண்பர் போனிலிருந்து whatsapp மூலமாக ஜெயக்குமாருக்கு இன்னொரு மெசேஜ் அனுப்பினேன். அவர் விமான நிலையத்துக்கு வந்து விட்டதாகவும் ஐந்தாவது கேட்டுக்கு வருகிறேன் என்றும் சொன்னார். உதவிய நண்பரை வழி அனுப்பி வைத்துவிட்டு அவருக்குக் காத்திருந்தேன்.
ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார் ஜெகே. இது அனைத்தும் நடந்து முடிய 45 நிமிடங்கள் ஆகி இருந்தன. அந்த 45 நிமிடங்களில் என்னை நானே நினைத்து நொந்து கொண்டேன். ஒழுங்காக ஒரு டைரியில் ஃபோன் என்னை எழுதி வைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அத்தனை பிரச்சினைகளும் ஒரே நொடியில் தீர்ந்திருக்கும்.
என் ஃபோன் செத்தது செத்ததுதான். எனக்கு எல்லாமே கைவிட்டுப் போனது போல் இருந்தது. அந்த ஃபோனை நம்பித்தான் நான் அபுதாபிக்கே வந்திருந்தேன். என்னுடைய ஃபோன் இன்பினிக்ஸ் ஃபோன். இன்பினிக்ஸ் இங்கே அனுமதி இல்லையாம்.
நாங்களும் இந்த ஃபோனை சரி செய்ய நான்கு ஐந்து கடைகளுக்கு ஏறி இறங்கினோம். யாருமே சரி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஃபோன் ஆன் செய்தால் ஸ்கிரீனில் ஒரு மெசேஜ் வந்தது. இப்படிச் செய்தால் உங்கள் ஃபோனை சரி செய்யலாம் என்றது. அதற்கு ஃபோனின் ஆதி முதல் அந்தம் முறை அனைத்தையும் கேட்டார்கள். எப்போது வாங்கியது எங்கே வாங்கியது அதன் இன்வாய்ஸ் எனது போர்டிங் பாஸ் என எல்லாவற்றையும் கேட்டார்கள். எப்படியோ சகலத்தையும் கொடுத்து, அன்லாக் கிளிக் செய்தேன். காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
தினமும் மூன்று முறை அன்லாக் ஆகிவிட்டதா என செக் செய்வேன். ஃபோன் அப்படியே பிளாக் மெசேஜை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிச்சலாகிப் போனது.
மூன்று நாட்கள் பெரும்பாடாகிவிட்டது. ஜெயக்குமாரின் இன்னொரு ஃபோனை எடுத்துக்கொண்டு அதில் எனது நம்பரை போட்டு, மூன்றாவது ஃபோனில் லோக்கல் யு ஐ ஈ நம்பரைப் போட்டு எப்படியோ அடித்துப் பிடித்துச் சமாளித்தேன்.
மூன்று நாள் கழித்து நான்காவது நாள் இன்று எனது ஃபோனை எரிச்சலுடன் ஆன் செய்த போது, அது அன்லாக் செய்யப்பட்டிருக்கிறது. இன்று தான் உயிர் வந்தது போல் இருக்கிறது. இப்போது ஃபோன் பேக்கப் ஆகிக் கொண்டு இருக்கிறது.
ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனமான நடைமுறை எனப் புரியவில்லை. நான் முன்பே துபாயில் நான்கு வருடம் இருந்திருக்கிறேன் என்பதாலும் அபுதாபியில் எப்படியும் ஜெகேவுடன் பேசி விடலாம் என்ற தைரியம் இருந்தாலும் எனக்குப் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் இப்படி அமையாது. இதே போல் ஒரு பெண் அல்லது முதல்முறை வருபவர்கள் தனியாக வந்து மொழி தெரியாத ஊரில் மாட்டிக் கொண்டிருந்தால் உண்மையில் நொந்து போய் இருப்பார்கள். இன்பினிக்ஸ் போன் வைத்திருப்பவர்கள் அல்லது வேறு பிராண்ட் போன் வைத்திருப்பவர்கள் அமீரகத்துக்குள் வரும்போது கவனமாக இருங்கள்.
தமிழ்நாட்டின் பொக்கிஷமான எனக்கே இந்தக் கதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
