1008 கொழுக்கட்டைகளும் 108 தேங்காய்களும்
கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு முன்பு, ‘பாம்பேவில் உனக்கு வேலை’ என்று என்னைப் பார்த்துச் சொன்னதும் எனக்குக் கொஞ்சம் கெதக் என்றுதான் இருந்தது. எப்படி பாம்பே போய் ஹிந்தி பேசி சமாளிக்கப் போகிறோம் என்கிற குழப்பம். மனதுக்குள் க, க, க, க என்று நான்கு வகையாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டாலும், நான்கும் ஒரே போல்தான் ஒலிக்கிறதோ என்ற சந்தேகமும் வந்தது.
ஆனால் சுதா அண்ணா இருக்கிறார். பார்த்துக் கொள்வார். அவர்தான் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்று சொன்னது. காலேஜ் படிக்கும்போதிருந்தே பாம்பேவுக்கு வந்துவிட வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். காலேஜ் முடித்த மறுநாளே அவருக்கு ஃபோன் செய்து, ஃபோனிலேயே ஒரே நொடியில் வேலை கிடைத்து, உடனே என்னை பாம்பேவுக்கு டிக்கெட் புக் செய்யச் சொல்லவும், நானும் என் நண்பன் ராமசுப்பிரமணியனும் நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் டிக்கெட் புக் செய்தோம்.
முதல்முதலாக வி டி என்ற ஸ்டேஷனை அப்போதுதான் கேள்விப்படுகிறேன். அப்போதுதான் சத்ரபதி சிவாஜி என்று பெயரையும் மாற்றி இருந்தார்கள். ஆரம்பித்திலேயே இத்தனை குழப்பமா என்று தோன்றியது. சுதா அண்ணா என்னிடம், விடி இல்லை, சி எஸ், அந்த ஸ்டேஷனுக்கு வந்து இறங்கு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
டிக்கெட் புக் செய்து விட்டு, ஜங்ஷனில் இருக்கும் ப்ளூ ஸ்டார் ஹோட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள். பாம்பே போக வேண்டுமா? அங்கே சமாளிக்க முடியுமா? தாமிரபரணி என்னாகும்? டிரைனில் அத்தனை தூரம் எப்படிப் போவது? ஆனால் வெளியே எதைப் பற்றியும் கவலைப்படாதவன் போல சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தேன்.
வீட்டுக்கு வர, என் முகத்தை விட அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது. பையன் தன்னை விட்டு பாம்பே போகப் போகிறானே என்னும் கவலை.
மறுநாள் மதியம் டிவி பார்த்துக் கொண்டே, ஒரு நிலையில் இல்லாமல் அரைத் தூக்கத்தில் படுத்திருந்தபோது, கதவு தட்டப்பட்டது. தட்டியது சேது. இன்னொரு நண்பன். ‘உடனே உன்னுடைய சர்ட்டிஃபிகேட் ஜெராக்ஸ் எல்லாம் காலேஜ் சார் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்’ என்றான். ‘எல்லாம் அவங்க கிட்டயே இருக்குமே’ என்று சொல்ல, அவன் என்னைத் திட்டி, ஜெராக்ஸ் எடுக்க அழைத்துச் சென்றான்.
காலேஜ் உதவியில், தூத்துக்குடியில் உள்ள டேக் கம்பெனியில் இருந்து இன்டர்வியூ வந்தது. இன்டர்வியூவில் கலந்துகொண்ட உடனே தெரிந்து விட்டது, எனக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்று. ஏனென்றால், கல்லூரியில் இரண்டாவது மதிப்பெண் நான். இன்டர்வியூவில் நன்றாக செய்தவர்களில் நிச்சயம் முதல் இடத்தில் இருப்பேன் என்கிற நம்பிக்கை. அதேபோல்தான் நடந்தது. எனக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிட்டது. ஆனால் எனக்கு அத்தனை செய்த சேதுவுக்கு வேலை கிடைக்கவில்லை. இன்று அவன் வேறு ஒரு கம்பெனியில், அதே கெமிஸ்ட்டாக இன்றும் மிகச் சிறப்பான பதவியில் இருக்கிறான் என்பது தனிக்கதை.
என் அம்மா மிகவும் சந்தோஷப்பட்டார். இனி என் பையன் பாம்பே போக வேண்டியது இல்லை. சுதா அண்ணாவை அழைத்துச் சொன்னேன். தூத்துக்குடி டேக் என்றால் அங்கேயே இருப்பதுதான் நல்லது என்று அவரும் சொல்லிவிட, பாம்பே முடிவுக்கு வந்தது.
டேக்-கில் வேலைக்குச் சேர்ந்து, முதல் மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மா மெல்ல சொன்னார், ‘பாம்பே போகாம தூத்துக்குடியில் உனக்கு வேலை கிடைத்தால், பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது என வேண்டியிருக்கிறேன்.’ அது என்ன பிரமாதம், செய்து விடலாம், இவ்வளவு நல்ல வேலைக்கு 108 தேங்காய் ஒரு பிரச்சினையா என்றோம். அது மட்டுமல்ல, 1008 கொழுக்கட்டையும் செய்து படைப்பதாக வேண்டி இருக்கிறேன் என்றார்.
1008 என்ற எண்ணைக் கேட்டதுமே கொஞ்சம் திக்கென்று இருந்தது. ஆனால் அம்மா அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ‘அதெல்லாம் ரெண்டு மணி நேரத்தில் முடிச்சிரலாம்’ என்று சொல்லிவிட்டாள்.

ஒரு நல்ல நாள் பார்த்து, பாட்டபத்து அக்ரஹாரத்தில் இருந்த மாமிகளை எல்லாம் வீட்டுக்கு வரச் சொல்லி, கொழுக்கட்டை வைபவத்தை ஆரம்பித்தாள். அனைவரும் கொழுக்கட்டை செய்து கொடுக்க, முதல் ஈடு வேகவைத்து எடுத்த போது அதில் 30 லிருந்து 40 கொழுக்கட்டைகள் கூட வரவில்லை. அம்மாவுக்கு தலை சுற்றத் தொடங்கியது. இதே போல் இன்னும் 40 முறை செய்ய வேண்டும். அப்போதுதான் 1008 கொழுக்கட்டைகள் வரும். இதற்கே அரை மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு ஈடுக்குப் பத்து நிமிடம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, எட்டு மணி நேரம் ஆகுமே! இதில் அனைவரையும் கண்டிப்பாக வீட்டில் சாப்பிட வேண்டும் என்று வேறு சொல்லி இருந்தாள். யார் சமைப்பது? எப்படிப் பரிமாறுவது? எழுதப்பட்ட குழப்பங்கள்!
அப்போதுதான் ஒரு மாமி சொன்னாள். ‘இதில் யோசிக்க ஒன்றும் இல்லை. நான் சொல்வது போல் செய்யுங்கள்.’ அந்த மாமி என்ன சொன்னார்?
நேற்று ரீல்ஸில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் இட்லி மாவைக் கொதிக்கும் தண்ணீரில் ஊற்றுங்கள் என்று என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார் ஒர் பெண். எரிச்சலில் அதற்கு மேல் பார்க்கவில்லை. ஆனால் அந்த வீடியோவைப் பார்த்ததுதான், இப்போது நான் எழுதுவதற்கு அடிப்படை.
அந்த மாமி கொழுக்கட்டையைச் செய்து, இப்படி இட்லி போல வேக வைத்து எடுத்தால் நீண்ட நேரம் ஆகும், அதற்குப் பதிலாக இரண்டு ஸ்டவ் வைத்து, பெரிய இட்லி கொப்பரை இரண்டு வைத்து, நீரை நிறைய கொதிக்க வைத்து, கொழுக்கட்டையை அந்த நீரில் பொறித்து எடுத்து விடலாம் என்றார்.
தண்ணீரில் பொறித்து எடுப்பதா? யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மாமி விடாப்பிடியாகச் சொன்னார். மாவையும் வணக்கி, விட்டோம் உள்ளே வைக்கும் பூரணத்தையும் வணக்கிவிட்டோம், இனி நீரில் பொறித்தால் போதுமானது என்பது அவரது வாதம். சரி செய்து பார்ப்போம் என்று கேஸ் ஸ்டவ், சிலிண்டரை எல்லாம் கீழே வைத்து – சிலிண்டரின் மட்டத்தைவிட அடுப்பின் மட்டம் கீழே இருக்கக் கூடாது என்னும் அறிவியல் எல்லாம் அங்கே எடுபடவில்லை – தண்ணீரைக் கொதிக்க வைத்து, கொழுக்கட்டையைத் தண்ணீரில் பொறித்து எடுக்க ஆரம்பித்தார்கள்.
சுவை எப்படி இருக்கும்? பிள்ளையாருக்குப் படைக்காமல் சாப்பிட்டும் பார்க்க முடியாது. பிள்ளையாரின் தலைவிதி. அத்தனையையும் செய்து, இரண்டு முறை 1008 எண்ணி, ஒருவழியாகப் பிள்ளையாருக்குப் படையல் செய்து, வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது. கொழுக்கட்டை மோசமில்லை, நன்றாகவே இருந்தது. அன்று அக்ரஹாரத்தில் அனைத்து வீடுகளிலும் இந்தக் கொழுக்கட்டைதான்!
அம்மா எளிதாகச் சொன்னார், ‘வேண்டிக்கிறது நாமதான். ஆனா அதை செய்யறது என்னவோ பகவான்தான். இல்லைன்னா 1008 கொழுக்கட்டை இன்னைக்கு படைச்சிருக்க முடியுமா?’ இதெல்லாம் வக்கணையா இப்ப பேசு, ஆனா இனிமே 1008 எல்லாம் வேண்டி வைக்காதே என்று அம்மாவிடம் சொன்னோம். 108ன்னுதான் வேண்டிக்க நினைச்சேன், எப்படியோ 1008ந்னு வாய்ல அந்த நேரத்துல வந்துருச்சு என்றார். ‘அதுவும் பகவான்தான்!’ கொர்ர்.. பிள்ளையாரை சீட் பண்ணிட்டு இந்த டயலாக் எல்லாம் தேவையா என்று ஓட்ட ஆரம்பித்தோம்.
அடுத்து 108 தேங்காய் உடைப்பது. ஒரு வருடம் கழித்துத்தான் இதைச் செய்தோம். 108 தேங்காய் உடைப்பது அத்தனை பெரிய கஷ்டமில்லை என்று நினைத்தோம். 108 தேங்காய் வாங்கினால், அதை சைக்கிளில் கொண்டு வர முடியாது என்று உறைத்தது. மார்க்கெட்டில் இருந்து ஆட்டோ. நானும் என் நண்பனும் பைக்கில் வர, கோவிலுக்கு ஆட்டோ வந்து தேங்காய் மூட்டையை இறக்கிவிட்டுச் என்றது.
இருவரும் டிப் டாப்பாக டிரெஸ் செய்துகொண்டு, பாட்டபத்து பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நின்று கொண்டு, பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, பின்னர் நான் ஒரு தேங்காயை உடைத்தேன். ஜாலியாக இருந்தது. பத்து தேங்காய் உடைப்பதற்குள் வேர்க்கத் தொடங்கியது. இருபது தேங்காயில் கை வலிக்க ஆரம்பித்தது. 25வது தேங்காய், முதல் தேங்காயைப் போல அத்தனை சிதறவில்லை. டேய், நீயும் உடை என்று சொல்லவும், கூட வந்தவனும் உடைத்தான். ஆனது முதல் தேங்காய் சீறிப் பாய்ந்தது. அவன் 20வது தேங்காயிலேயே சோர்ந்துவிட்டான். இந்த வேலைக்கு இவ்ளோ டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு வந்திருக்க வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே உடைத்தோம்.

பாட்டபத்து ஊரே எங்களைப் பார்த்தது. போவோர் வருவோரை எல்லாம், நீங்க ரெண்டு உடைச்சிப் பாருங்களேன், ஜாலியா இருக்கும் என்று கேட்க ஆரம்பித்து, நாங்களே சிரிக்க ஆரம்பித்து விட்டோம். ஒரு தேங்காய் உடைத்தால் ஓடி வந்து பொறுக்கும் சிறுவர்களில் ஒருவர் கூட 108 தேங்காய் உடைக்கும்போது வந்து பொறுக்கவில்லை. ‘எப்படியும் அவனுவளே தருவானுவ!’
கோவில் குருக்கள், எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன், நீங்க உடைங்கோ என்று சொல்லிவிட்டார். வேர்க்க விறுவிறுக்க 108 தேங்காயை உடைத்து முடித்தேன். அன்று பாட்டபத்து வீட்டில் அனைவர் வீட்டிலும் தேங்காய் சாதம்தான் இருந்திருக்கும்.
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அம்மாவிடம் சொன்னது, கொழுக்கட்டைன்னா 108, தேங்காய்ன்னா ஒன்னு போதும் என்றேன்.
இன்னொரு வேண்டுதல் இருக்கு என்றார் அம்மா. ஏய் தாய்க்கிழவி! வெளியே சொல்லவில்லை. அம்மா சொன்னார், ‘இனிமே வேண்டுதல்னா பெருமாளுக்கு 101 ரூபாய்ன்னுதான் வேண்டிக்கப் போறேன். இப்பவும் அப்படித்தான் வேண்டிக்கிட்டேன். பயப்படாத.’
பின்குறிப்பு: ஒருமுறை சோளிங்கர் மலையில் ஒரு பெண் ஒவ்வொரு படிக்கும் குங்குமமும் மஞ்சளும் வைத்தபடி மலையேறினார். 1300+ படிகள்.