Tag Archive for Pad Man

Pad Man

Pad Man பார்த்தேன். காவியத் திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது என்றாலும் மிக முக்கியமான திரைப்படம், தேவையான திரைப்படம். 90களில் தொலைக்காட்சியில் காண்டம் மற்றும் நேப்கின் விளம்பரங்கள் வந்தபோது நமுட்டுச் சிரிப்பு சிரித்தது நினைவுக்கு வருகிறது. முன்பெல்லாம் கழிப்பறைகளின் ஜன்னல்களில் கரடுமுரடான அழுக்கான கறை படித்த துணி ஒன்று இருக்கும். எது என்னவென்று யோசித்ததே இல்லை. பிற்பாடுதான் அது என்ன என்று புரியத் தொடங்கியது. இதைப் பற்றிக்கூடப் பொதுவில் பேசத் தயங்கிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு தலைமுறைப் பெண்ணும் தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய இத்துணியின் போதாமைகளையும் அடுத்த கட்ட நகர்வான நேப்கின்களையும் வெளிப்படையாக ஆனால் எவ்வித ஆபாசத் தன்மையும் இன்றிப் பேசி இருக்கிறது இத்திரைப்படம்.Pad Man பார்த்தேன். காவியத் திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது என்றாலும் மிக முக்கியமான திரைப்படம், தேவையான திரைப்படம். 90களில் தொலைக்காட்சியில் காண்டம் மற்றும் நேப்கின் விளம்பரங்கள் வந்தபோது நமுட்டுச் சிரிப்பு சிரித்தது நினைவுக்கு வருகிறது. முன்பெல்லாம் கழிப்பறைகளின் ஜன்னல்களில் கரடுமுரடான அழுக்கான கறை படித்த துணி ஒன்று இருக்கும். எது என்னவென்று யோசித்ததே இல்லை. பிற்பாடுதான் அது என்ன என்று புரியத் தொடங்கியது. இதைப் பற்றிக்கூடப் பொதுவில் பேசத் தயங்கிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு தலைமுறைப் பெண்ணும் தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய இத்துணியின் போதாமைகளையும் அடுத்த கட்ட நகர்வான நேப்கின்களையும் வெளிப்படையாக ஆனால் எவ்வித ஆபாசத் தன்மையும் இன்றிப் பேசி இருக்கிறது இத்திரைப்படம்.

தனக்குத் திருமணம் ஆகவும்தான் ஒரு பெண்ணின் பிரச்சினையையே உணர்ந்துகொள்கிறான் இப்படத்தின் கதாநாயகன். இத்தனைக்கும் அவருக்கு வயதுக்கு வந்த சகோதரிகள் உண்டு. இதுதான் யதார்த்தம். தன் மனைவிக்கு எவ்வித நோயும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நேப்கின் வாங்கச் செல்லும் அவன், எப்படி உலகப் புகழ் பெறுகிறான் என்பதை, தமிழரான அருணாசலம் முருகானந்தம் வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொண்ட கதையின் வழி திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.

திரைப்படம் என்று பார்த்தால் சில காட்சிகள் இழுவையாக உள்ளன. ஆனால் இப்படி ஒரு கதையை இத்தனை சுவாரஸ்யமாகப் படமாக்கியதே பெரிய சாதனைதான். ஹிந்தித் திரைப்படங்களுக்கே உரிய புல்லரிப்புக் காட்சிகள் படம் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. நன்றாகப் புல்லரிக்க வைத்து கண்ணில் நீர் கோர்க்க வைத்தே அனுப்புகிறார்கள். அதிலும் உச்சக் காட்சியில் அக்‌ஷய் குமார் பேசும் லிங்கிலீஷ் காட்சி அட்டகாசம்.

தமிழரின் கதையை எப்படி ஹிந்தியில் எடுக்கலாம் என்று சிலர் கோபப்பட்டிருந்தார்கள். தமிழில் யாரும் எடுக்கவில்லை. அப்படியே எடுத்திருந்தாலும் அது எப்படியான படமாக இருந்திருக்கும் என்று யூகிக்கவே முடியாது. ஹிந்தியில் அது ஒரு டீஸண்டான படமாக வந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் உள்ள ஹிந்தி பேசும் பெரிய அளவிலான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. முன்னாபாய், ட்யூப் லைட், பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற உணர்ச்சிபூர்வமான திரைப்படங்களைப் போன்ற ஒரு படமாக உருவாகி இருக்கிறது.

அக்‌ஷய் குமார் முடிந்த அளவு நடித்திருக்கிறார். ராதிகா ஆப்தே அழுதுகொண்டே இருக்கிறார். ட்ரம் அடிக்கும் பொம்மை வெங்காயம் வெட்டுவது, அனுமார் வாய்க்குள்ளே போகும் தேங்காய் உடைந்து வெளிவருவது, ரூபாய் வைத்தால் அனுமாருக்கு பூஜை செய்ய உள்ளே போய் திரும்பி வரும்போது லட்டுக்களுடன் வரும் பொம்மை போன்ற யோசனைகள் நன்றாக வந்திருக்கின்றன.

குறை என்று பார்த்தால், அக்‌ஷய் குமாருக்கு உதவ வரும் பெண் அவரைக் காதலிப்பாகக் காட்டி இருப்பது. இதைத் தவிர்த்திருக்கலாம். எத்தனையோ படங்களில் பார்த்துச் சலித்தாகிவிட்டது.

இசை ஹிந்தித்தன்மையில் இருக்கவேண்டும் என்பதற்காக ராஜாவைத் தேந்தெடுக்கவில்லை என்று பால்கி சொன்னதாக இணையத்தில் பார்த்தேன். என்ன ஹிந்தித்தன்மை உள்ளது என்பதை நான் இனிமேல்தான் கண்டுபிடிக்கவேண்டும். எனக்குத் தெரியாத ஹிந்தித்தன்மை என்னவோ இருந்திருக்கலாம்.

பார்க்கவேண்டிய திரைப்படம்.

பிகு: இப்போது இந்த பயன்படுத்தப்பட்ட நேப்கின்களை எப்படி அழிப்பது என்ற யோசனையில் சமூகம் இருக்கிறது. இதை எரிக்கத் தேவையான எந்திரங்களை அரசு பள்ளிகளுக்கு வழங்க இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தகட்ட நகர்வு.

Share