உலா போக நீயும் வரணும்
உலா ப்ரவுசரை இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் நிறுவி இருந்தாலும் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. காரணம், க்ரோம் தரும் க்ளவுட் வசதி, அது தரும் கடவுச் சொல் பதிவு வசதி, ப்ரவுசிங் ஹிஸ்டரி எனப் பல.
உலாவில் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை பிசி மூலம் இறக்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மொபைலில் இல்லை. இன்று பொறுமையாக அமர்ந்து, அனைத்து ப்ரவுஸிங் ஹிஸ்டரியையும் க்ரோமில் இருந்து உலாவுக்கு லேப் டாப் மூலம் மாற்றினேன்.
அடுத்து பாஸ்வேர்ட். எத்தனையோ தளங்களுக்கான பாஸ்வேர்ட் எனக்குத் தெரியாது. அனைத்தும் க்ரோமில் பதியப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் இரண்டடுக்குப் பாதுகாப்பு மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இவை அனைத்தையும் எப்படி உலாவில் கொண்டு வருவது?
க்ரோம் நல்லவன். அனைத்து பாஸ்வேர்டையும் இம்போர்ட் செய்யும் வசதி கொடுத்திருக்கிறான். அதை இறக்கி, உலாவில் ஏற்றினேன். இப்போது உலா ப்ரவுஸிங் ஹிஸ்டரி மற்றும் பாஸ்வேர்ட்களுடன் தயார்.
உலாவில்தான் இரண்டு வாரமாக மொபைலில் உலவுகிறேன் என்றாலும், இன்றுதான் லேப்டாப்பில் உலவினேன். முதல் அனுபவம் எப்படி? அட்டகாசம். அழகான வடிவமைப்பு. கண்ணை உறுத்தாத வடிவம். தொடர்ந்து உலாவைப் பயன்படுத்த உத்தேசம்.
இதன் பாதுகாப்பு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் டெக்கி அல்ல. ஆனால், ஸோஹோவின் மீதும் ஸ்ரீதர் வேம்புவின் மீதும் நம்பிக்கை உள்ளதால், நிச்சயம் பாதுகாப்புப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். இப்படி நம்புபவர்கள் நீங்களும் உலாவுக்கு வாருங்கள்.
என்ன ஒரே ஒரு பிரச்சினை என்றால், என்னை அறியாமல் என் கண்ணும், மௌஸும் க்ரோமைத் தேடுகின்றன. 20 ஆண்டு கால நட்பு!
பின்குறிப்பு: நான் போட்ட அரட்டை போஸ்ட்டைப் பார்த்து அரட்டையில் என்னைத் தொடர்புகொண்ட 200க்கும் மேற்பட்ட நல்லுல்லங்களுக்கு நன்றி. என்ன, பலரை யாரென்றே எனக்குத் தெரியவில்லை. எனவே அரட்டையில் உங்கள் புகைப்படத்தையும், ஃபேஸ்புக்கில் எந்தப் பெயரில் உலவுகிறீர்களோ அந்தப் பெயரையும் வையுங்கள். அப்போதும் எனக்கு ஞாபகம் வராது என்பது என் சாபம். 🙂