Tag Archive for election commission

SIR initial mess ups in Tamilnadu – 2

என்னை யார் எப்படித் திட்டினாலும் பரவாயில்லை. தொடர்ந்து வாக்காளர்ப் பட்டியல் திருத்தத்தின் குளறுபடிகளைப் பதிவு செய்கிறேன்.

இரண்டு நாள் முன்பாக பிஎல்ஓவிற்கு என் வாக்காளர் அட்டையை அனுப்பினேன். உங்கள் பாகம் எண் 798 என்று அவர் சொன்னார். இல்லை என்றேன். ஆனால் அதுதான் என்று சொல்லிவிட்டார். இன்று மீண்டும் தேர்தல் ஆணையம் வலைத்தளத்துக்குள் சென்று என் வாக்காளர் எண்ணை எடுத்து அதில் பாகம் எண் நான் சொன்னதுதான் இருப்பதை உறுதி செய்து அதே பி எல் ஓவிற்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி இருக்கிறேன். அவரிடம் இருந்து பதில் வந்ததும் அப்டேட் செய்கிறேன்.

அப்டேட்: பி எல் ஓவை அழைத்தேன். அனைத்தையும் சொன்னேன். மிகவும் பொறுமையாகப் பேசினார். மீண்டும் சரி பார்க்கிறேன் சார் என்று சொல்லி இருக்கிறார்.

தேர்தல் ஆணைய வலைத்தளத்தின் காமெடி அடுத்து.

அதில் உள்நுழைய உங்கள் ஈபிக் எண் அல்லது மொபைல் எண்ணைத் தரலாம் என்றது. என் வோட்டர் ஐடி ஈபிக் எண்ணை உள்ளிட்டதும், இப்படி ஒரு பதிவே இல்லை என்று சொல்லிவிட்டது. மீண்டும் என் மொபைல் எண்ணை உள்ளிட்டதும் ஓடிபி வந்தது. உள் நுழைந்தேன். அங்கே அழகாக என் பெயரும் வாக்காளர் பட்டியலில் என் எண்ணும் உள்ளது. பிறகு ஏன் இப்படி ஒரு பதிவே இல்லை என்று வலைத்தளம் சொன்னது என்பது தெரியவில்லை.

அடுத்த காமெடி.

2005ல் என் ஓட்டு இருந்தது திருநெல்வேலியில். அதைக் கண்டுபிடிக்கலாம் என்று பார்த்தால், எந்த பூத்தில் ஓட்டு போட்டீர்கள் எனக் கேட்டது. டவுண் மார்க்கெட் தெருவில் இருக்கும் தாய் சேய் நலவிடுதியில் ஓட்டு போட்டேன். அல்லது ஏதோ ஒரு மெடிகல் செண்டர். அது எந்தத் தெரு என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அந்த வாக்காளர் எண்ணின் பாகம் எண்ணைக் கேட்கிறது. யாருக்குத் தெரியும்?

அப்பா அம்மா பெயரைத் தேடலாம் என்றால் அவர்கள் ஓட்டர் ஐடி வேண்டுமாம். அதற்கு எங்கே போவது? அம்மா அப்பாவே போய்விட்டார்கள், ஓட்டர் ஐடி எப்படி இருக்கும்?

இன்னொரு லின்க்கில் பெயரை வைத்துத் தேடலாம் என்றிருந்தது. ஹரிஹரபிரசன்னா, ஹரிஹர பிரசன்னா, ஹரிஹர ப்ரசன்னா, ஹரிஹரப்ரசன்னா, ஹரிஹரப்ரஸன்னா, ஹரி ஹரப்ரசன்னா, ஹரி ஹர பிரசன்னா என்று ஆயிரம் காம்பினேஷனிலும் என் அப்பா பெயரை ஒரு ஆயிரம் காம்பினேஷனிலும் தேடினாலும், போடா மயிரே என்று சொல்லிவிட்டது வலைத்தளம்.

இந்த முறை எப்படியாவது ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்பது லட்சியம். போட முடியாமல் போகப் போகிறது என்பது நிச்சயம்.

இதில் கமெண்ட் போடுபவர்களின் காமெடி சொல்லி மாளாது. ரொம்ப எளிது, எனக்கு ஈசியாக இருந்தது, உங்களுக்கு ஃபில்லப் பண்ண தெரியவில்லை, உங்களிடம் சரியான ஓட்டர் ஐடி இல்லை, என் கிராமத்துக்கே எல்லாருக்கும் ஒரே நாள்ல கிடைச்சிருச்சு – இப்படி தோன்றுவதையெல்லாம் எழுதுவது. சிரித்துவிட்டு நகர்கிறேன்.

Share

SIR initial mess ups in Tamilnadu – 1

எஸ் ஐ ஆர் இல் எந்தக் குழப்பமும் இல்லை, எளிதாக இருக்கிறது என்று ஆளாளுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சம் குழப்பம் இருக்கிறது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கேட்டால் என்ன என்னவோ காரணம் சொல்கிறார்கள். எலக்‌ஷன் கமிஷன் கொடுத்திருக்கும் நம்பருக்கு எல்லாம் போன் செய்து கேட்டாகிவிட்டது. உங்கள் வீட்டுக்கு வரவில்லையா என்று என்னிடமே மீண்டும் கேட்கிறார்கள். தெருவில் கேட்டால், வந்தார்கள், ஆனால் அவர்களிடம் பெரும்பாலான வாக்காளர் பட்டியல் படிவங்களே இல்லை, தெருவின் முக்கில் ஒரு சேர் போட்டு அமர்ந்திருந்தார்கள் உங்களுக்குத் தெரியாதா என்கிறார்கள். அவர்கள் சேர் போட்டு அமர்ந்திருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவர்களிடமும் பெரும்பாலான படிவங்கள் இல்லை. ஆனால் தெருக்காரர்கள்‌ அனைவரிடமும் ஓட்டர் ஐடி இருக்கிறது. இவர்கள் வரைவுப் பட்டியலை வெளியிட்டு விட்டு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரும் மீண்டும் அப்ளை செய்ய வேண்டும் என்றால், இது என்ன லாஜிக்? என்னவோ பெரிய குழப்படி நடந்து கொண்டிருக்கிறது. இதைச் சரியாகத் திருத்தாவிட்டால் தேர்தலின் போது பொதுமக்கள், கட்சிகள் பாகுபாடு இல்லாமல் கதறப் போகிறார்கள். போகிறோம்.

தற்போது இருக்கும் ஓட்டர் ஐடி சரியாக இருந்தால் அவர்கள் பெயரை நீக்கக் கூடாது. இதை ஏன் செய்யாமல் விட்டார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

2002-2005 பட்டியலைப் பார் என்பதெல்லாம் சென்னை போன்ற நகரங்களுக்கு எப்படிப் பொருந்தும்?

எஸ் ஐ ஆர் எளிய விளக்கம் என்று டிவிகளில் வருகிறது. அதில் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் யாரிடமும் பதில் இல்லை. என்னிடம் ஓட்டர் ஐடி இருக்கிறது, ஆனால் படிவம் கொண்டு வருபவர்களிடம் என்னைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய படிவம் இல்லை. என்ன செய்ய வேண்டும்? மிக சாதாரணமாகச் சொல்கிறார்கள், வரைவுப் பட்டியலைப் பார்த்துவிட்டு மீண்டும் அப்ளை செய்யுங்கள் என்று. அப்படியானால் இத்தனை நாள் என்னிடம் இருந்த ஒட்டர் ஐடியும் நான் போட்ட ஒட்டும் என்ன? இது தவறில்லையா?

அதேபோல் முகவரி மாறி வேறு ஒரு தொகுதிக்குப் போயிருந்தால் அப்போதும் நாம் வரைவுப் பட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு நடைமுறையைக் கண்டுபிடித்தவரை என்னவென்று சொல்வது.

ஓட்டர் ஐடி சரியாக இருந்து, நீங்கள் இருக்கும் வீடும், அங்கே நபர்களும் சரியாக இருந்தால், அதை சரியான வாக்காளர் விவரமாக எடுத்துக் கொள்ளாத வரை இந்தத் திருத்தம் பல குழப்பங்களை மட்டுமே கொண்டு வரும்.

***

எஸ் ஐ ஆர் விஷயமாக இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் தேர்தல் கமிஷன் வலைத்தளத்தில் இருந்து பாஜக பி எல் ஏ அலுவலரின் நம்பரை பெற்றேன். ஒரு பெண் பேசினார். மிகப் பொறுமையாக எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலைத் தந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் தந்த நபரை அழைத்தேன். அவரும் பெண். அவரும் மிகப் பொறுப்பாகப் பேசி யாரிடம் நான் பேச வேண்டும் என்று இன்னொரு தகவலைச் சொன்னார். கூடவே எனது வாக்காளர் அட்டையை வாங்கி யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூன்றாம் நபரை அழைத்தேன்‌ அவர் ஓர் ஆண். அவர் மேலும் சில விவரங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு நபரிடம் பேசச் சொன்னார் அதற்குள். முதலாம் நபர் மீண்டும் அழைத்து, சரியான நபரிடம் பேசச் சொல்லி இன்னொரு எண்ணைக் கொடுத்தார். அவரும் அவரால் இயன்ற எல்லா உதவிகளையும் வழங்கினார். இந்த நான்கு பேருமே பிஜேபிக்காரர்கள். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் 2002க்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால்தான் படிவத்தை நிரப்பிக் கொண்டு வருவார்கள் போல. இல்லையென்றால் வரைவுப் பட்டியல் வந்த பிறகு நாம் அப்ளை செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு நான் புரிந்து கொண்ட தலைவிதி.

Share