சையாரா (H) – நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கில் ஒரு ஹிந்தித் திரைப்படம். அதுவும் துபாயில்.
90களின் ஹிந்தித் திரைப்படம் போன்ற ஒரு கதையை, இன்றைய தேதிக்கு மார்டனாக எடுத்திருக்கிறார்கள். கேன்சர், மூளைக் காய்ச்சல் போன்றவற்றையெல்லாம் காட்டிச் சாவடித்தது போல் இந்த நோயை வைத்துக்கொண்டு இன்னும் என்ன பாடுபடுத்த போகிறார்களோ! என்றாலும் இந்தத் திரைப்படம் பார்க்கும்படியாகவே இருக்கிறது.
தன்மாத்ர திரைப்படம் தந்த அளவு மன அழுத்தத்தையும் பயத்தையும் இந்தப் படம் தரவில்லை. அப்படித் தந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார்
மிக அழகான ஒரு கதாநாயகன். முதல் படமாம். நம்பவே முடியவில்லை. அதைவிட அழகான கதாநாயகி. இளமை துள்ளும் கேமரா. அட்டகாசமான இசை எனப் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தமிழின் மூன்றாம் பிறை (ஹிந்தியில் சத்மா) திரைப்படத்தின் எதிர்த் திரைக்கதை என்று இந்தத் திரைப்படத்தின் மூலக் கதையைச் சொல்லலாம். அதிலும் இறுதிக் காட்சியில் கிரிக்கெட் வர்ணனையை ஹீரோ சொல்லும்பொழுது கமலஹாசனை நினைவுகூராமல் இருக்கவே முடியாது.
படத்தின் பலம் என்ன? ஐ லவ் யூ மகேஷ் என்று கதாநாயகி கதாநாயகனைப் பார்த்துச் சொல்லும்பொழுது ஒரு திடுக்கிடல் அனைவருக்குள்ளும் வருகிறது. அதைக் கொண்டு வந்ததில்தான் இந்தப் படத்தின் வெற்றியும் இயக்குநரின் சாமர்த்தியமும் இருக்கின்றன. முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று, படத்தில் வில்லன் அடிதடி ரத்தம் துப்பாக்கி என எதுவும் இல்லை. படம் இயல்பாக ஒரே நேர்கோட்டில் செல்கிறது.
பொறுமையாக நகரக்கூடிய, இளமைத் துள்ளலான படத்தை பார்க்க விரும்புபவர்கள், முக்கியமாக அழகான ஹீரோவுக்காகவும், சிம்ரனையும் ஆலியாவையும் அனஸ்வரா ராஜனையும் கலந்த, அடுத்த பத்தாண்டு ஹிந்தித் திரை உலகை ஆளப்போகும் திறமையான ஒரு கதாநாயகியையும் பார்க்க விரும்பினால் இந்தத் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள்.


