Tag Archive for ஹிந்தித் திணிப்பு

Ragu Thatha Tamil movie review

ரகு தாதா – ஹிந்தி எதிர்ப்பில் சொந்தச் செலவில் சூனியம்.

படம் இடைவேளை வரை சுமார். அதன் பிறகு அறுவை. படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால், நடிகர்களின் நடிப்பு. அனைவருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் அண்ணன் மற்றும் அண்ணியின் நடிப்பு குறிப்பிடவேண்டியது. படத்தின் மேக்கிங் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அரசியல் ஜல்லியைக் கைவிட்டால் பெரிய அளவில் வர வாய்ப்பிருக்கிறது. படத்துக்கு ரகு தாதா என்று பெயர் வைத்திருப்பது சிறப்பு.

ஹிந்தி எதிர்ப்பை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் கட்சிகள் ஜல்லி அடிக்கின்றனவோ அதே போல் இயக்குநரும் அடித்த ஜல்லி கொஞ்ச நஞ்சமல்ல. ஹிந்தி ஒழிக என்று கத்துகிறார்கள். ஆனால் கடைசியில் எங்கே ஹிந்தி ஒழிகன்னு நாங்க சொன்னோம், ஹிந்தித் திணிப்பு ஒழிகன்னுதானே சொன்னோம் என்று சொல்லி காமெடி செய்கிறார்கள்.

ஆனாலும் இயக்குநர் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளத் தவறவில்லை.

பெரிய கொள்கைவாதியாக ஹீரோவைக் காண்பிக்கும் இயக்குநர், பெரிய அரசியல் பிரசாரப் படம் போல என்று நினைத்துப் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தருகிறார். எப்படி கொள்கைவாதிகள் வாய் கிழியப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்கள் பெண்ணியத்தின் எதிரிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் இருப்பார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் என்று என்னை சந்தோஷப்பட வைத்துவிட்டார். அதிலும் அந்த ஹீரோ ஈவெராவை அடிக்கடி மேற்கோள் காட்டுபவர். மேற்கோள் மட்டும் காட்டுபவர்.

இதை இயக்குநர் ஹீரோவுடன் மட்டும் நிறுத்தவில்லை. ஹீரோயினையும் இந்தச் சிப்பிக்குள் அடைத்துவிட்டார். அத்தனை கோஷம் போட்டு ஹிந்திக்குத் தார் பூசும் பெண், தனக்கு ஒரு தேவை என்று வந்ததும் ஹிந்தி கற்கத் தயாராகிறாள். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 2.

ஹிந்தி தன் புத்திக்கு ஒத்துவரவில்லை என்பதும் அந்தப் பெண் கொள்கைச் சிங்கம் ஊழலுக்குத் தயாராகிறது. பேப்பரை மாற்றி ஹிந்தித் தேர்வில் ஜெயிக்கிறது. இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 3.

படத்தில் ஹிந்தி பேசும் அனைவரும் அத்தனை நல்லவர்கள். யதார்த்தவாதிகள். இ.நா.சொ. மொமெண்ட் 4 மற்றும் சொந்தச் செலவில் சூனியம் மொமெண்ட் 2.

ஹிந்திக்காரன் தனக்குத் தேவை என்றால் சுத்தமாகத் தமிழைக் கற்றுப் பேசுகிறான். அவனுக்குத் தமிழ் மேல் எந்த வெறுப்பும் இல்லை. எல்லா மொழிகள் மேலும் அவனுக்குக் காதல் இருக்கிறது. இ.நா.சொ. மொமெண்ட் 4.

கதாநாயகி கல்கத்தா போக முடிவெடுப்பதன் காரணம், பப்ளிஷர் அங்கதான் இருக்காங்களாம். இவள் எழுதுவது தமிழில். அங்கே என்ன பதிப்பாளர் இருக்கிறார்? கொடுமை. கதாநாயகி இன்னொன்றும் சொல்கிறாள். இவளது எழுத்து இந்தியா முழுமைக்கும் பரவவேண்டுமாம். அப்ப ஹிந்தி படி! இ.நா.சொ. மொமெண்ட் 5.

படத்தில் இரண்டு பிராமண கதாபாத்திரங்கள். ஒரு பிராமண கேரக்டர் கதாநாயகியின் தோழி. அவள் மேல் குறையே சொல்ல முடியாது. அத்தனை நல்லவள்! இன்னொரு பிராமண கதாபாத்திரம் ஹிந்தி சபாவின் ஆசிரியர். அவர் மேலும் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர் ஹிந்தித் திணிப்பை எங்கேயும் செய்யவில்லை. ஹிந்தி சொல்லித் தருகிறார், அவ்வளவுதான். ஆனால் ஹீரோயின் தமிழ் வெறிகொண்டு அந்த இடத்தை அடித்து நொறுக்குகிறாள். ஏன், அந்த இடத்தைப் பூட்டுப் போட்டால் மட்டும் போதாதா? ஹிந்தி ஒழிப்பிற்கு முன்னணியில் நிற்கும் கதாநாயகியின் தாத்தா தன் பேத்திக்குத் திருமணம் என்று வரவும், சபா நடக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். என்ன அருமையான திருப்பம்!

உண்மையில் ஹிந்தித் திணிப்பைச் செய்வது வங்கி. அங்கே சம்பளத்துக்காக வாய் பொத்தி, ஹிந்தித் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகி, ரௌடித்தனமெல்லாம் செய்வதில்லை. வங்கியை அடித்து உடைப்பதில்லை. வேலையை விடுகிறேன் என்று வாய் தவறிக் கூட சொல்வதில்லை. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கைப் பிடிப்பு என்றால் சும்மாவா!

இது ஹிந்தி எதிர்ப்புத் திரைப்படம் என்று மக்களை நம்ப வைத்தது பற்றிப் புகாரில்லை. ஆனால் யாரோ இயக்குநரையும் நம்ப வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பதாகச் சொல்லி, கொள்கை அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றுபவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் திரைப்படம். 🙂

Share