Tag Archive for ஸ்ரீராகவேந்திரர்

மடங்கள்

எனக்கு மடம் என்பது சின்ன வயதில் எப்படி அறிமுகமானது என்றால், வருடத்துக்கு மூன்று நாள்கள் அங்கே சாப்பிடப் போவோம் என்ற அளவில்தான். அதுவும் எனக்கு எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்களே. பின்னால் அதற்குள்ளே இருந்த பிரிவுகள் எல்லாம் தெரியவந்தபோது வெட்கமாகிப் போனது. போன எல்லா மடங்களிலும் ராகவேந்திரரையே மனதுக்குள் நினைத்து, பொத்தாம் பொதுவாக ‘பூஜ்யாய ராகவேந்திராய’ சொல்லிக் கும்பிட்டிருக்கிறேன். தெரிந்ததும் அந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே. எங்கள் மடமான வ்யாஸராய மடம் என்பது கூட, கல்யாணக் காரியங்களுக்கு மட்டுமே யாரோ சொல்லி, அந்தப் பெயர் என் செவிக்கு எட்டும் முன்னரே மறைந்துபோன ஓர் ஒலியாகவே இருந்தது.

ராகவேந்திரரின்ஆராதனையின் மூன்று நாள்களில், அம்மா எங்களை வம்படியாக அழைத்துக்கொண்டு மடத்துக்குப் போவாள். ஆராதனை என்பது ஸ்ரீ ராகவேந்திர் ஜீவ சமாதி அடைந்த நாள் என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் மடத்துக்குத்தான் அதிகம் போவோம். அதற்கு முன்னரும் பின்னரும் திருநெல்வேலி ஜங்க்‌ஷனில் இருக்கும் மடத்துக்குப் போயிருந்தாலும் அது மதுரையின் மடம் அளவுக்குப் பெரியதல்ல.

மதுரை மடத்தில் சாப்பாடு போட நேரமாகும். பரிமாற ஆள் இருக்காது. கூட்டம் அம்மும். அதுவும் ரஜினியின் ஸ்ரீ ராகவேந்திரர் படத்துக்குப் பிறகு கேட்கவே வேண்டாம். சாப்பாடு பரிமாறி அதைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவி வெயிலும் கல்லும் புழுதியும் சகதியும் இருக்கும் இடத்தில் கை கழுவி விட்டு, அங்கிருந்து அழகரடியில் இருக்கும் வீட்டுக்கு நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆட்டோ, ரிக்‌ஷா எதுவும் வைக்க மாட்டார்கள். அவ்வளவு வறுமை. பேச்சியம்மன் படித்துறையில் என் அம்மாவுக்கு தூரத்து உறவினர் வேதவியாஸ ராவ் என்று ஒருவர் இருந்தார். வெயிலில் ஏன் அலைகிறீர்கள், எங்கள் வீட்டில் தங்கி, காப்பி சாப்பிட்டுவிட்டு, வெயிலாறப் போகலாம் என்று சொல்வார்கள். அம்மா சந்தோஷமாக அங்கே தங்குவார். ஆனால் எனக்கு என்னவோ போல இருக்கும். (அந்த மாமாவும் அத்தையும் தங்கமானவர்கள். நான் சொல்வது அந்த வயதில் என் மன ஓட்டத்தை.)

ஒவ்வொரு சமயம் பக்கத்தில் இருக்கும் தேவி தியேட்டரில் மதியம் படம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். அன்று சந்தோஷமாக மடத்துக்குப் போவேன். அன்றைக்குப் பார்க்க இலை போட நேரமாகிவிடும். எரிச்சலாக வரும்.

பரிமாறுபவர்கள் அத்தனை பேரும் தன்னார்வத்தின் பேரில் உதவுபவர்கள். அதில் ஒருவர் மதியம் ஒரு மணிக்குப் பரிமாறிவிட்டு, நடுரோட்டிலேயே பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவார். அம்மா என்னை அழைத்துக் காண்பிப்பார், பாத்தியா எவ்ளோ பக்தின்னு என்று சொல்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

மடத்துக்கு இப்படிச் சாப்பிடப் போகணுமா என்று அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவோம். அவனவன் குருகளு பிரசாதம் கிடைக்காதான்னு ஃபாரின்ல இருந்து வர்றான், பக்கத்துல இருந்துட்டு போறதுக்கு என்ன கொள்ளை என்பதே என் அம்மாவின் பதிலாக இருக்கும். சாப்பாடு போடலைன்னா நீ மட்டும் போவியா என்று எதாவது சொல்லி மடக்குவோம்.

மதுரை மடத்தில் சாப்பாடு போட எப்போதும் தாமதாகிவிடும். செய்வார்கள், செய்வார்கள், பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். அங்கிருக்கும் மண்டபத்தில் யாரையாவது பாட அழைத்திருப்பார்கள். வீரமணி ராதா அடிக்கடி வருவார்கள். அவர்கள் பாடுவார்கள், பாடுவார்கள், பாடிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போது 11 முதல் 15 வயது வரை இருக்கலாம். சரியாகப் பன்னிரண்டு மணிக்கெல்லாம் வயிறு பசியில் கூவத் தொடங்கிவிடும். மத்தியானம் நல்ல சாப்பாடு என்று பெரும்பாலும் காலையில் எதாவது மோர் சாதம் இருக்கும். அதுவும் இல்லையென்றால், சாமி கும்பிடப் போகும்போது சாப்பிடக் கூடாது என்று சொல்லி, வெறும் வயிறாக இருக்கும். அந்தப் பசியில் 2 மணி வரை சாப்பாட்டுக்காகக் காத்திருக்கும்போது எரிச்சலாக வரும்.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள மடத்தில், பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பரிமாறுவார்கள். மடத்தில் இடம் கம்மி. பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும்போதும் அம்மா விடவில்லை. அரை நாள் லீவு போட்டுக்கிட்டு வா, இல்லைன்னா நான் தனியா வீட்டுக்குப் போகணும் என்றெல்லாம் சொல்லி, என்னை வர வைத்துவிடுவார். நானும் சாப்பிட்டுவிட்டு அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு, எதாவது படம் பார்க்கப் போய்விடுவேன். அப்படிப் பார்த்த ஒரு படம் மலைச்சாரல் என நினைவு. கதாநாயகியின் போஸ்டரைப் பார்த்து அந்தப் படத்துக்குப் போய் பல்பு வாங்கினேன் என நினைக்கிறேன்.

மடம் என்பது அதன் தேவையுடன் எங்களுக்குப் பின்னர் அறிமுகம் ஆனது. அது வருடத்துக்கு மூன்று நாள் சாப்பிடும் இடம் மட்டுமல்ல, அதனால் நமக்கு நிறைய சமயக் கடமைகள் நிறைவேறும் என்று புரியத் தொடங்கியது எப்போதென்றால், என் தாத்தாவின் மரணத்தின் போது. பத்து நாள் காரியங்களை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ பாத ராஜர் மடத்தில் செய்யும்போதுதான் உணர்ந்தோம். அப்போதுதான் எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டதும். பின்னர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அப்பாவுக்கும் எங்கள் மாமாவுக்கு அதே மடத்தில் வைத்தே காரியங்கள் நடந்தன.

பின்பு சென்னைக்கு வந்து செட்டில் ஆனோம். அம்மாவுக்குத் தெரியாத ஊர். ஆனாலும் விடவில்லை. ஆராதனை சமயத்தில் எப்படியாவது என்னை மடத்தில் விட்டுவிடு என்றார். நான் காலையிலேயே தி.நகரில் இருக்கும் அலுவலகத்துக்குப் போய்விடுவேன். என் மனைவி என் அம்மாவுக்கு ஒரு ஆட்டோ அமர்த்தித் தருவாள். அலுவலகத்துக்கு அம்மா வந்துவிட, அங்கிருந்து அருகில் இருந்த தி.நகர் மடத்துக்குக் கொண்டு போய்விடுவேன். நீண்ட வரிசை இருக்கும். அம்மா வரிசையில் நின்றிருப்பாள். ஏம்மா இப்படி கஷ்டப்படற, சாப்பாட்டுக்கா பஞ்சம் என்று கேட்பேன். நீ போடா என்று சொல்லிவிடுவாள். வரிசையில் அம்மா நின்றிருந்த சித்திரம் கண்களில் நீருடன் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. எப்படிச் சாப்பாட்டுக்காக அம்மா வரிசையில் நிற்கிறாள் என்கிற கேள்வி என்னை வாட்டி எடுத்தது. ஆனால் அதை அம்மா ஒரு சுக்காகக் கூட மதிக்கவில்லை.

திருநெல்வேலியில் பாட்டபத்து-வில் வைக்கதஷ்டமி நடக்கும். அன்று ஊர்ச்சாப்பாடு போடுவார்கள். அதற்கும் அம்மா எங்களை அழைத்துக்கொண்டு போய்விடுவாள். ஆனால் மடத்தில் ஆராதனைக்கு வந்தே ஆகவேண்டும் என்னும் அளவுக்கு வற்புறுத்தமாட்டாள். ஒரு தடவை போய்விட்டு, பின்னர் வரமுடியாது என்று மறுத்துவிட்டேன். அம்மாவையும் அலையவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் மடத்துக்கு ஆராதனைக்குப் போவதை மட்டும் எங்களால் தடுக்கமுடியவில்லை.

அம்மா போய் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ராகவேந்திரரின் ஆராதனை துவக்க நாளைக்கு இரண்டு நாள் முன்னர் அம்மாவின் திதி வரும். நான் அம்மாவுக்குத் திதி செய்யப் போகும்போது மடமே பரபரப்பாக இருக்கும். ஏனென்றால், அம்மாவின் திதிக்கு முதல்நாள் பெரும்பாலும் வரலக்ஷ்மி பூஜை இருக்கும். (சில சமயம் மாறும்.) திதி அன்றேவோ அல்லது மறுநாளோ ரிக் வேத உபகர்மா இருக்கும். அதற்கு மறுநாள் ராகவேந்திரரின் பூர்வ ஆராதனை ஆரம்பித்துவிடும். எனவே முழு பரபரப்பில் இருக்கும் மடம். திதி அன்று எப்போதும் சூழ்ந்திருக்கும் அம்மாவின் நினைவுகளைத் தாண்டி, மடத்தில் சாப்பிட அம்மா எடுத்துக்கொண்ட சிரத்தை என்னை மூழ்கடிக்கும்.

இந்த முறை ஞாயிற்றுக் கிழமை ராகவேந்திரரின் உத்தர ஆராதனை வந்தது. என் பையனையும் மகளையும் அழைத்துக்கொண்டு போக முடிவு. என்னைப் போல் அவர்கள் முரண்டெல்லாம் பிடிக்கவில்லை. உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடி போய் பழகிவிட்டதால் அவர்களுக்கு அது வித்தியாசமானதாகத் தெரியவில்லை போல. அதுமட்டுமல்ல, மடங்கள் இப்போதெல்லாம் அலாரம் வைத்தது போல் சரியாகப் பன்னிரண்டரைக்குள் இலை போட்டுவிடுகின்றன. உதவி செய்யவும் ஆள்கள் பலர் இருக்கிறார்கள். மேலும், மகனும் மகளும் மதியம் 1 மணி வரை பசியுடன் இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள். எனவே அவர்களுக்கு இது ஒரு கஷ்டமான விஷயமாகவே தெரியவில்லை. நான் செய்த அழிச்சாட்டியங்கள் எல்லாம் ஒரு பக்கம் என் மனதில் ஓட, என்னையறியாமல் என் வீட்டில் நான் சொன்னேன், ‘குருகளு பிரசாதம். கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்.’ அம்மாவுக்குப் புரையேறி இருக்கும்.

Share